அடிப்படை சட்டக் கூறும் அதன் கோட்பாடும்

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு.320(3)(ஆ) Article 320(3) (b)-இன் படி அரசுப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல், பதவி உயர்வு/ பணி மாறுதல் ஆகிய இனங்களில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை கொள்கைகள் தொடர்பாகவும் அம்முறைகளில் பணியமர்த்தப்படுபவர்களின் பொருத்த நிலை (suitability) குறித்தும் தேர்வாணையத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

பதவி உயர்வுக் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அரசாணையும்

பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடணங்களில் பணியாளர்களை பதவி உயர்வு முறை மூலமும், பணிமாறுதல் முறை மூலமும் நிரப்புவதற்கு காலதாமதத்தைத் தவிர்க்கவும், உரிய அலுவலர்கள் ஒரே இடத்தில் கூடி விரைந்து முடிவெடுக்கவும் ஏதுவாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் 12.01.1994 நாளிட்ட அரசாணை எண்.15-இல் பதவி உயர்வுக் குழுக்களை அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குழுக்களின் கூட்டமைப்பு வகைகள்

(அ) அரசால் பணியமர்த்தப்பட தேர்வாணைய பதவிகளுக்கான குழு

தேர்வாணையத் தலைவர் அல்லது தேர்வாணைய உறுப்பினர். - குழுவின் தலைவர்

அரசுத்துறைகளுக்கு அந்தந்தத்துறை அரசுச் செயலாளர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார் - உறுப்பினர்கள்

அந்தந்த துறையின் தலைவர் - உறுப்பினர்கள்

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசுச் செயலர் அல்லது அவரது பிரதிநிதியாக அத்துறையின் துணைச் செயலாளர் நிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவர் பங்கேற்பார் - உறுப்பினர்கள்

ஆ) தலைமைச் செயலகத்தில் உள்ள நிதி மற்றும் சட்டத்துறை தவிர்த்த பிற துறைகளின் அரசு சார்புச் செயலாளர் பதவிக்கான குழு

தேர்வாணையத் தலைவர் அல்லது தேர்வாணைய உறுப்பினர் - குழுவின் தலைவர்

அரசுச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை. இவர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார் - உறுப்பினர்கள்

இ) துறைத் தலைவரால் பணியமர்த்தப்பட வேண்டிய பதவிகளுக்கான குழு

அந்தந்தத் துறையின் தலைவர். இவர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார் - உறுப்பினர்கள்

தேர்வாணைய செயலாளர் - உறுப்பினர்கள்

தாழ்த்தப்பட்ட பழங்குடியின உறுப்பினர்

எந்தெந்தப் பதவிக்கு இட ஒதுக்கீட்டு விதி பின்பற்றப்பட வேண்டுமோ அந்தத் துறையிலுள்ள தொகுதி / அவைச் சார்ந்த ஒரு அலுவலர் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். அரசாணை (நிலை) எண்.137 / பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 09.06.1998.

கூட்ட அமைப்பாளரின் (Convener) பொறுப்பு:

கூட்ட அமைப்பாளர் பொறுப்பிலுள்ள அலுவலர்கள், அந்தந்தத் துறையிலுள்ள பதவிகளுக்கான விதிகளின்படி தகுதியான அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான குறிப்புகளையும், கருத்துருக்களையும் தயாரித்து பதவி உயர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கமுக்கமாக சுற்றுக்கனுப்புதல் வேண்டும்.

கூட்ட நடவக்கை குறிப்புகள்:

கூட்டுநரால் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு தயாரிக்கப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட வேண்டும். ஒப்பளிக்கப்பட்ட நடவடிக்கைக் குறிப்பு தேர்வாணையச் செயலரால் அனுப்பி வைக்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைக் குறிப்புகள் தேர்வாணையத்தின் இறுதிக் கருத்தாக ஏற்றுக் கோள்ளப்பட வேண்டும். இது குறித்து தேர்வாணையத்தின் தனியான கருத்து ஏதும் பெறப்பட வேண்டியதில்லை.

பல்வேறு துறைகளுக்கான திட்ட அட்டவணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுத் திட்டங்கள் தொடர்பான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 12.06.1985 நாளிட்ட அரசாணை எண்.603 மற்றும் 21.04.1994 நாளிட்ட அரசாணை (நிலை) எண். 97-இல் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

முறையான பட்டியல்கள்

முறையான பதவி உயர்வுப் பட்டியல்கள் மட்டுமே பதவி உயர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்படும்.

ஒற்றைச்சாளர முறை

தற்போதுள்ள முறையில் கடிதப் போக்குவரத்தில் ஏற்படும் காலவிரயத்தைத் தவிர்க்கும் நோக்கில் 22.02.2012 முதல் ஒற்றைச் சாளர முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கருத்துருவை அரசுத் துறைகளின் இரண்டாம் நிலை அலுவலர்கள் தேர்வாணைய செயலாளரிடம் நேரில் அளிக்க வேண்டும். அக்கருத்துருக்களை அன்றே ஆய்ந்து முழுமையாக உள்ள கருத்துருக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, அடுத்துவரும் வாரத்தில் பதவி உயர்வுக் குழுவின் கூட்டத்தை கூட்ட பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

முழுமையாக இல்லாத குறைபாடுடைய கருத்துருக்கள் ஏற்கப்படாமல் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்து கொண்டுவரும் பொருட்டு அன்றே திருப்பியளிக்கப்பட்டுவிடும்.

ஒற்றைச்சாளர முறை 22.02.2012 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பகல் 11.00 மணி முதல் 2.00 மணி வரை செயல்பட்டு வருகிறது.

சரிபார்ப்புப் படிவம்

கருத்துருவை முழுமையாக தயார் செய்வதற்கு ஏதுவாகவும் விடுபாடுகளை தவிர்க்கவும் சாரிபார்ப்புப் படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துருக்கள் தயாரிப்பதற்காகவும் குழுவில் பின்பற்றத் தக்கதுமான வழிமுறைகள்:

18.10.1993 நாளிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை (நிலை) எண்.368-இல் வெளியிடப்பட்டு அவ்வப்போது வெளியிடப்பட்டுவரும் திருத்தங்களுக்கிணங்க வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வாராந்திர அட்டவணை

ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடத்தப்படவிருக்கும் துறை பதவி உயர்வுக் கூட்டங்களின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தனியான அட்டவணையில் திங்கட்கிழமைதோறும் வெளியிடப்படும்.

கேள்வி பதில்

1. எந்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள பொதுக் கல்வித் தகுதி இறுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாக கணக்கில் கொள்ளப்படும்?

இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாகக் கருதப்படும். ஏதேனும் தாள்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் இருப்பின் நிலுவைத்தாள்கள் உட்பட அனைத்துத் தாள்களிலும் தேர்வெழுதி அவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

2. தெரிவு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுவது ஏன்?

விண்ணப்பதாரர்களிடமிருந்து சில சான்றிதழ்கள் பெறப்பட வேண்டியது / விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள சில தகவல்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியது ஆகிய நிகழ்வுகளில் தெரிவு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

3. நிறுத்தி வைக்கப்பட்டத் தெரிவு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும்?

விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் பிற அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆய்வு முடிவுகள் ஆகியவை பெறப்பட்டு தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தேர்வு முடிவகள் வெளியிடப்படும்.

4. காப்புப் பட்டியலில் எத்தனை விண்ணப்பதாரர்கள் இடம் பெறுவர்?

ஓவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழும் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் 25 %,

ஒருங்கிணைந்த தெரிவைப் (Combined Selection) பொருத்த வரை 50 %.

5. எந்தெந்த சூழ்நிலைகளில் காப்புப் பட்டியலிலிருந்து விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்?

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியில் சேராதிருத்தல்.

தெரிவு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பின்னர் பணியிலிருந்து விலகுதல்.

ஏதேனும் ஒரு காரணத்திற்காக விண்ணப்பதாரர்களின் தற்காலிகத் தெரிவு இரத்து செய்யப்படுதல்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்