இசைவு வழங்குதலில் தேர்வாணையத்தின் பங்கு

பணிகளை வரன்முறை

தேர்வாணைய உள்ளீட்டெல்லைக்குள் வரும் தமிழ்நாடு தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளுக்கு கருணை அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டோரின் பணிகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகள் 1954 இன் விதி 16(பி)யின் பிற்பகுதியின்படி தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.

தேர்வாணைய உள்ளீட்டெல்லைக்குள் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியிலிருக்கும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களாகப் பணிபுரிபவர்களின் பணியினை அரசாணை நிலை எண் 248. வருவாய்த்துறை நாள் 23,3,1993 இன் படி வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் திட்டத்தில் பணிபுரிந்து பணியிழப்புக்குள்ளாகி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.

சில கழகங்கள் அரசுத் துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் நிலைகளில் அவற்றில் பணியாற்றும் நபர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.

14.1.1980 மற்றும் அதற்கு முன்னர் கிராம அலுவலர்களாகப் பணியிலிருந்தோரை கிராம நிர்வாக அலுவலர் பதவியில் அரசாணையின்படி பணி வரன்முறைப்படுத்துதல்.

பணி மாறுதல்

ஒரு துறையிலிருந்து / அலகிலிருந்து மற்றொரு துறைக்கு/ அலகிற்கு மாறுதலில் செல்ல தனியரின் பொருட்டு தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளின் விதி 20(a) (iii) இன் படி தேர்வாணைய இசைவு வழங்குதல்.

பணிமூப்பு நிர்ணயம் செய்தல்

தேர்வாணையத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டோர் மற்றும் பதவி உயர்வு பெற்றோரிடையே பணிமூப்பு நிர்ணயம் செய்தல்.

தேர்ந்தோர் பட்டியல்

ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறைகளில் உள்ள அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர்கள், இரவுக்காவலர்கள், ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பிற கீழ்நிலைப் பதவிகளில் உள்ளோரை 10%, 20% இடஒதுக்கீட்டின்படி இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான தேர்ந்தோர் பட்டியலுக்கு தேர்வாணைய இசைவு வழங்குதல்.

தமிழ்நாடு நகராட்சி பொதுப் பணியின் கீழ்வரும் நிலை- 1 மற்றும் 2 ஆக பணியாற்றும் நகராட்சிப் பணியாளர்களை நகராட்சி ஆணையர் தரம் - 2 ஆக பணிமாறுதல் மூலம் தெரிவு செய்தல்.

ஒழுங்கு நடவடிக்கை

இந்திய அரசியலமைப்பு சட்டம் 320(3)( c)-இன்படி, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் சார்நிலைப் பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமுறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை/ மேல்முறையீடு/ மறு ஆய்வு/ சீராய்வு மனு தொடர்பான ஆவணங்களை அரசு தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளின் கீழ், தேர்வாணையத்தின் கருத்தினைக் கோரும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பு ஆகும். அரசிடம் இருந்து கருத்துரு பெறப்பட்டபின்பு அந்த கருத்துரு மீது தனது ஆலோசனையை வழங்கும்.

தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் ஒரு அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும், என்று நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளின் படி குற்ற அலுவலருக்கு போதுமான வாய்ப்பை குற்றச்சாட்டை ஏற்படுத்துபவர் நல்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை நேர்வுகளில், அரசு தேர்வாணைய ஆலோசனையை கோரும், தேர்வாணையம் தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று பரிசீலிக்கும், அதன் மீது தனது ஆலோசனையை வழங்கும்; ஆலோசனைக்கு பின்பே அரசு ஆணை பிறப்பிக்கும்.

குற்ற அலுவலர் போதிய விளக்கமளிக்க எந்த முறையான விசாரணை வாய்மொழியா, நேரடி விசாரணையா, அல்லது இருமுறைகளுமா என கோரி குற்ற அலுவலர் கோரும் வாய்ப்பினை வழங்க வேண்டும். குற்ற அலுவலர் எவ்வித விசாரணையையும் கோரவில்லை என்றhலும் விதி 17(ஆ)-வின் கீழ் தொடரப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில் வாய்மொழி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை திருப்திகரமானதாக குற்ற அலுவலருக்கு இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையின் மீதான கூடுதல் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். அனைத்து ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்பே அவருக்கு தண்டனை வழங்க இயலும். இல்லையெனில், வழக்கு வழுவாக முடியும். நடைமுறை வழு ஏற்படும் வழக்குகளில் தேர்வாணைய ஆலோசனைப்படி அவ்வழுக்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே அவ்வழக்குகள் குறித்து தேர்வாணையம் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

அரசுத் துறைகள் தங்கள் அலுவலர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் அரசிடம் மேல்முறையீடு /மனு செய்து கொள்ள முடியும்.

அரசே தண்டனை வழங்கும் நேர்வுகளில். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மறு ஆய்வு மனுவின் மீதும் அரசு தேர்வாணையக் கருத்தினை பெற்று அதன் பிறகு ஆணை பிறப்பிக்கும்.

மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என தேர்வாணையம் பரிசீலித்து அரசுக்கு தனது ஆலோசனையை வழங்குகிறது. அரசு தேர்வாணையத்தின் ஆலோசனையினை ஏற்று ஆணை பிறப்பிக்கும். தேர்வாணைய ஆலோசனையிலிருந்து மாறுபட்டு அரசு ஆணை பிறப்பிக்கும் இனங்களை தேர்வாணையம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிடும்.

நியமனம்

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வடிவிலமைந்த நேர்முகத்தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய தெரிவு முறை கொண்ட பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் பணியினை நேர்காணல் தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 320 (1). மாநில அரசுப் பணிகளில் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வாணையத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர். நேர்முகத்தேர்வு நடைபெற உள்ள நாள், நேரம், இடம் ஆகியவை குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்தல்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் நாளன்று விண்ணப்பதாரர்களின் மூலச் சான்றிதழ்களை சரிபார்த்தல்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தெரிவில். விண்ணப்பதாரர்களின் பதவி முன்னுரிமை விவரங்களைப் பெறுதல்.

தேர்வுகள் நிறைவுற்ற பின்னர், விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்துத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது, அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, தேர்வாணைய இணையதளத்திலும். தேர்வாணைய அலுவலக அறிவிப்புப்பலகையிலும் வெளியிடப்படுகிறது.

பின்னர் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறும் பொருட்டு தெரிவுப் பட்டியல், காப்புப் பட்டியல் ஆகியவை தயாரிக்கப்படுகிறது, தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மேற்படி பட்டியல்கள் தேர்வாணைய இணையதளத்திலும், தேர்வாணைய அலுவலக அறிவிப்புப்பலகையிலும் வெளியிடப்படுகிறது.

மேற்படி விபரம். முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநரகம் வாயிலாக வெளியிடப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல். அரசு / துறைத் தலைவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் இவ்விவரம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கும் அவ்விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்களை எதிர்நோக்கியும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி. இணையான கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள் குறித்த சரிபார்ப்பு அறிக்கையினை எதிர்நோக்கியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்தது தொடர்பான விவரங்கள் அரசு / சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடமிருந்து பெறப்படுகிறது,

தெரிவு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்கள், சரிபார்ப்பு அறிக்கைகள் ஆகியவற்றைப் பெற்று, ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படுகிறது. மேற்படி இனங்களில், தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டு, அவர்கள் தொடர்பான விவரங்கள் அரசு / துறைத் தலைவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது,

தேவைப்படும் இனங்களில், விண்ணப்பதாரர்களின் இனம் / மதம் / சொந்த ஊர் ஆகியவை குறித்த உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் / மாவட்ட விழிப்புணர்வுக் குழு / மாநில கூர் நோக்குக் குழு ஆகியவற்றிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வினங்களில் மேற்படி விசாரணை அறிக்கையினை எதிர் நோக்கி. தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கும் பொருட்டு, மேற்படி விண்ணப்பதாரர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் அரசு / துறைத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தேவைப்படும் இனங்களில், ஆதரவற்ற விதவை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிப்பிதழில் வெளியிடத் தேவையான நடவடிக்கைகளையும் நேர்காணல் தேர்வுத் துறை மேற்கொள்கிறது.

இவை தவிர, இத்துறை கீழ்க்காணும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் கோரப்படும் விவரங்கள் அனைத்தும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளவாறு தகவல் கோருபவர்களுக்கு வழங்கப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிகச் சிறப்பான வகையில் செயல்படுத்தப்படுகிறது,

அவ்வாறே, மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படுகிறது. முதுநிலையை மாற்றம் செய்யக் கோருதல். பிறந்த தேதியை மாற்றம் செய்யக் கோருதல் ஆகிய நிகழ்வுகளில் அரசு / துறைத் தலைவர் கோரும் விளக்கங்கள் / கருத்துகள் ஆகியவற்றை வழங்குதல்,

குறை தீர்க்கும் நடுவம், மின் அஞ்சல் ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குதல். மேலும், நேரிடையாக தேர்வாணைய அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டு குறைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் குறித்த வினா-விடைகள்

1. கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2. கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3. கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?

தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5. இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6. கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்