அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் மேம்பட்ட அணு தொழில்நுட்பத் திட்டத்தில் ஒரு சாதனையாக, கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை இன்று (26.06.2026) தொடங்கியது. மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் நடைமுறையின் மூலம், அணுசக்தியைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை உறுதிசெய்ய ஒரு தொழில்நுட்ப செயல்விளக்க மையமாக இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அணு பதன வெப்பத்தை ஹைட்ரஜன் உற்பத்தியுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருப்பது முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, மேம்பட்ட அணு உலைகளைப் பயன்படுத்தி பெருமளவில், கார்பன் இல்லாத ஹைட்ரஜன் உற்பத்திக்கு நம்பிக்கைக்குரிய பாதையையும் திறக்கிறது. எதிர்காலத்தில் முக்கிய ஆற்றல் கடத்தியாக ஹைட்ரஜன் கருதப்படுகிறது. மேலும், தூய்மையான, நீடித்த எரிசக்தி அமைப்புகளை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களில், தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் சுழற்சி, ஒப்பீட்டளவில் குறைந்த இயக்க வெப்பநிலை மற்றும் உயர் வெப்ப இயக்கவியல் செயல்திறன் காரணமாக மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. வேக அணு உலைகளிலிருந்து கிடைக்கும் அணுக்கரு வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த நடைமுறை புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கிறது; வழக்கமான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகளுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குகிறது. இந்த ஆலை அணுசக்தி உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஆராய்ச்சிகளுக்கும் உதவும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278259®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்