இந்தியாவின் அணுசக்தித் தற்சார்பு பயணம் இந்தியாவின் அணுசக்தித் திட்டம் தொழில்நுட்பத் தற்சார்பைக் குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகமாக உள்ள தோரியம் வளங்களைப் பயன்படுத்துவதோடு, எரிபொருள் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதுடன், தூய்மையான, நம்பகமான மின்சார உற்பத்தியை விரிவுபடுத்துவதும், நீண்டகால எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதோடு, 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை எட்ட இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நிலையான எரிசக்திக்கான அணுசக்தி வளர்ச்சி வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி நாடு பயணிக்கும் வேளையில் பாதுகாப்பான, நிலையான எரிபொருள் கட்டமைப்பு மிகவும் அவசியமானதாகும். தூய்மையான, நம்பகமான மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் அணுசக்தியை நாட்டின் நீண்டகால எரிசக்தி கட்டமைப்பின் மையமாக அரசு நிலைநிறுத்தியுள்ளது. அணுசக்தி என்பது குறைந்த கார்பன் உமிழ்வுடன், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் இணைந்து மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேண உதவுகிறது. இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதோடு நாட்டின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இத்திட்டம் வலு சேர்க்கிறது. தற்சார்பு இந்தியா இலக்கின் அடிப்படையில் அணு உலை வடிவமைப்பு, எரிபொருள் தயாரிப்பு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட அணுசக்தி சுழற்சியின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்நாட்டுத் திறன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அணுமின் உற்பத்தித் திறன் விரிவாக்கம் தற்போது இந்தியாவில் 24 அணுமின் உலைகள் இயங்கி வருவதோடு 9 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தி இயக்கத் திட்டம், புதிய சட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாகத் திறனை விரிவுபடுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துதல், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணுக்கரு பிளவு செயல்முறை மூலம் வெளியிடப்படும் வெப்பத்தைப் பயன்படுத்தி அணுமின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இயற்கை யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதோடு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியாவின் 2-வது கட்ட அணுசக்தித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தோரியம் வளங்களைப் பயன்படுத்தும் அணுசக்தித் திட்டம் நாட்டின் நீண்டகால எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தோரியம் வளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 3 கட்ட அணுசக்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் கனநீர் உலைகள் மூலம் யுரேனியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு புளுட்டோனியம் பெறப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் புளுட்டோனியத்தைக் கொண்டு வேக ஈனுலைகள் மூலம் கூடுதல் எரிபொருள் பெறப்படுகிறது. மேலும் இந்நிலையில் தோரியத்திலிருந்து யுரேனியம்-233 பெறப்படுகிறது. இறுதி கட்டத்தில் தோரியம் அடிப்படையிலான உலைகளில் யுரேனியம்-233 பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட அணுஉலைகளை உருவாக்குவதன் மூலம், தொலைதூரப் பகுதிகளுக்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படுவதோடு, நாட்டின் எரிசக்தித் துறை மேலும் வலுப்படுத்தப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2304034®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்