சூரிய புயல்களின் பண்புகள் குறித்து புதிய கண்டுபிடிப்பு சூரியனில் இருந்து வெளியாகும் ராட்சத சூரிய புயல்கள் விண்வெளியில் பயணிக்கும்போது அவற்றின் வெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பது குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவன [Indian Institute of Astrophysics (IIA), Bengaluru] விஞ்ஞானிகள் புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் ரேடியோ தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் கட்டமைப்புகளைப் பாதிக்கும் புவிக்காந்த புயல்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த விஞ்ஞானிகள் குழு 1995 முதல் 2024 வரையிலான மூன்று சூரிய சுழற்சிகளின் 29 ஆண்டுகால விண்வெளித் தரவுகளை விரிவாக ஆய்வு செய்தனர். சூரிய புயல்கள் விண்வெளியில் பயணிக்கும்போது தொடர்ந்து வெப்பத்தை ஏற்கின்றன அல்லது இழக்கின்றன என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. நாசாவின் விண்கலத் தரவுத்தளங்களின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த வெப்ப-காந்த ஆய்வு விண்வெளி வானிலை முன்னறிவிப்பை பெருமளவில் மேம்படுத்த உதவும். வருங்காலத்தில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலத்தின் கண்டுபிடிப்புகளும் இந்த விண்வெளி வானிலை கணிப்பு மாதிரிகளை மேலும் துல்லியமாக்கப் பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279357®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்