நுண்நெகிழிகள் மாசுபாடு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) நடத்திய ஆய்வில், நுண்நெகிழிகள் மாசுபாட்டிற்கு (Microplastics Pollution) வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத நுண்நெகிழிகள் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியிருப்புகளில் நடைபெறும் பல்வேறு அன்றாட செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை விரிவாக ஆராய்ந்து, நுண்நெகிழிகள் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க காரணிகளை மொத்தமாக அடையாளம் காணும் முதல் மதிப்பாய்வு இதுதான் என கட்டுரையாளர்கள் கருதுகின்றனர். சுற்றுச்சூழலில் நுண்நெகிழிகள் பரவுவதற்கு பங்களிக்கும் பல்வேறு ஆதாரங்களில், மாசடைந்த கழிவு நீர் ஒரு முக்கிய ஆதாரமாக நிற்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. அன்றாட வீட்டுச் செயல்பாடுகளான பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல், குளித்தல், கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் மாசடைந்த கழிவுநீரின் உற்பத்திக்கு பங்களிக்கின்றன. உதாரணமாக, பாத்திரங்களைக் கழுவ பிளாஸ்டிக்கால் ஆன துடைக்கும் பட்டைகள் (scouring pads) பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மென்மையான பகுதி பாலியூரிதீன் [Polyurethane (PU)], மெஷ் பகுதி பாலிஎத்திலின் [(Polyethylene (PE)] ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை. நாட்கள் செல்லச்செல்ல ஸ்பான்ஞ் தேய்ந்து, நெகிழிப் பொருட்கள் உதிர்வதால் இரண்டாம் நுண்நெகிழிகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகிறது. சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறையின்ர் இந்த மதிப்பாய்வை மேற்கொண்டனர். அவர்களின் மதிப்புரை சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆராய்ச்சி (https://doi.org/10.1007/s11356-023-26918-1) என்ற புகழ்பெற்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. இத்தகைய மதிப்புரையின் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவு பேராசிரியை இந்துமதி எம் நம்பி கூறுகையில், "மனிதர்களில் நுண்நெகிழிகளின் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய ஆபத்து தொடர்பான உண்மைகளை அறிய சுற்றுச்சூழல் நுண்நெகிழிகள் மற்றும் நுண்நார் (Microfibre) குறித்து நிகழ்நேரத்துடன் இன்னும் விரிவான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பேராசிரியை இந்துமதி எம் நம்பி மேலும் கூறுகையில், “மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சினை தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் 4.88 முதல் 12.7 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டுவாக்கில், பெருங்கடல்களில் உள்ள பிளாஸ்டிக்கின் ஒட்டுமொத்த எடையானது, மீன்களின் மொத்த உயிரிஆற்றலை விஞ்சிவிடும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன" எனத் தெரிவித்தார். இந்த மதிப்பீடுகளில் பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் [Polyethylene Terephthalate (PET)], பாலியமைடு [Polyamide (PA)] மற்றும் பாலிஅக்ரிலேட் (polyacrylate) போன்ற எங்கும் நிறைந்திருக்கும் செயற்கை இழைகள் போன்றவைகூட கணக்கில் கொள்ளப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். துணிகளைத் துவைக்கும்போது கணிசமான அளவுக்கு நுண்நார்கள் (Microfiber) கழிவுநீருடன் கலக்கிறது, அதே நேரத்தில் ஷவர் ஜெல், ஃபேஸ் க்ளென்சர், பற்பசை போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் நுண்துகள்கள் (Microbeads) எனப்படும் நுண்நெகிழி சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. மேலும் முகக்கவசங்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் செயற்கைத் தரைவிரிப்புகள் போன்றவையும் சுற்றுச்சூழல் மற்றும் உட்புற மாசுபாட்டிற்கு காரணமாக அமைகின்றன. இவை மனிதர்கள், செல்லப்பிராணிகள் உள்ளிட்ட நிலம் மற்றும் நீரில் வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன. மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட வேண்டுமெனில் அதற்கான மூலாதாரங்களைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என இந்த மதிப்பாய்வு கருதுகிறது. தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மக்கும் பொருட்களாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் துடைக்கும் பட்டைகளின் (scouring pads) பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் துணி துவைக்கும் இயந்திரங்கள் சிறந்த வடிகட்டிகளைக் கொண்டிருப்பதும் அவசியம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்