போரோபீன் அடிப்படையிலான பசுமை மசகு விளக்கெண்ணெயில் உயர் செயல்திறன் கொண்ட மசகு எண்ணெய் சேர்க்கைப் பொருளாக, இரு பரிமாண நானோபொருளான போரோபீனின் பயன்பாட்டை (Borophene-based Green Lubricant) முதன்முறையாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் நீடித்த மசகு எண்ணெய் (Lubricant) பயன்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை அவர்கள் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எரிசக்தி இழப்பு மற்றும் உபகரணச் செயலிழப்புக்கு உராய்வும் தேய்மானமும் முக்கியக் காரணங்களாகும். எனவே, இந்த இழப்புகளைத் திறம்படக் குறைக்கக்கூடிய மேம்பட்ட மசகு எண்ணெய்களை உருவாக்குவது ஒரு முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சவாலாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான, குவஹாத்தியில் [Institute of Advanced Study in Science and Technology (IASST), Guwahati] உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, விளக்கெண்ணெயுடன் மிகச் சிறிய அளவிலான போரோஃபீனை சேர்ப்பது, அதன் மசகுத்தன்மையை வியத்தகு முறையில் மேம்படுத்துவதாகவும், தூய எண்ணெயுடன் ஒப்பிடும்போது உராய்வை சுமார் 42 சதவீதம் குறைப்பதாகவும் நிரூபித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287664®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்