ரத்தநாள ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பிடும் சாதனம் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக [Indian Institute of Technology Madras (IITM)] ஆராய்ச்சியாளர்கள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன் மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல்செல்-நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான ஊடுருவாத சாதனத்தை உருவாக்கியுள்ளனர். ஆர்ட்சென்ஸ் [ARTerial Stiffness Evaluation for Non-invasive Screening (ARTSENS®)] என்று அழைக்கப்படும் இச்சாதனம், நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இமேஜிங் அல்லாத (Non-imaging Probe), கணினித் தளம் (Computing Platform) மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தைச் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) உள்ள சுகாதாரத் தொழில்நுட்பப் புத்தாக்க மையம் [Healthcare Technology Innovation Centre (HTIC)] உருவாக்கியுள்ளது. பயன்பாட்டுக் காப்புரிமைகள் ARTSENS® சாதனத்தைக் கொண்டு 5000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் ஐந்து பயன்பாட்டுக் காப்புரிமைகளைப் பெற்றுள்ள இத்தொழில்நுட்பம், 10 வடிவமைப்புக் காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது. விரிவான சோதனைக்குப் பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இச்சாதனம் தயார் நிலையில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்தநாள சோதனை நடத்துவதற்கு இதனைப் பயன்படுத்த வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) குழுவினர் விரும்புகின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மின் பொறியியல் துறை (Department of Electrical Engineering, IIT Madras) இந்த ஆய்வை மேற்கொண்டது. இச்சாதனத்தின் தொழில்நுட்பம் மற்றும் களஆய்வு முடிவுகள் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு வெளியீடுகளாக ஏற்கனவே வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரைகளை பின்வரும் இணைப்பில் காணலாம்: Journal of Hypertension American Journal of Physiology-Heart and Circulatory Physiology சிறப்பு அம்சங்கள் சிகிச்சை மற்றும் நடைமுறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ள போதும், இதயம், ரத்தநாளங்கள் தொடர்பான நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன. எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கோளாறைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரி செய்வது அவசியமாகும். ARTSENS® குறித்த பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் (Dr. Jayaraj Joseph, Assistant Professor, Department of Electrical Engineering, IIT Madras) கூறுகையில், "ரத்தநாள ஆரோக்கியத்தின் நம்பகமான மதிப்பீட்டைக் கண்டறிய ரத்த நாளங்களின் சுவர்களில் (Blood Vessel Walls) நேரடியாக அளவிட வேண்டும். மாறாக தோலின் மேற்பரப்பில் அளவிடக் கூடாது. நோய் மற்றும் முதுமை காரணமாக ரத்தநாளச் சுவரில் ஏற்படும் மூலக்கூறு மற்றும் புரதநிலை மாற்றங்களின் (Molecular and Protein Level Changes) விளைவை எவ்விதத்திலும் ஊடுருவாத, துல்லியமான முறையில் நாங்கள் உருவாக்கியுள்ள ARTSENS® சாதனத்தைக் கொண்டு அளவிட முடியும்" என்றார். டாக்டர் ஜெயராஜ் மேலும் கூறும்போது, "மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத அமைப்புகளான (Clinical and Non-Clinical Settings) உடற்பயிற்சி மையம் (Gym), சுகாதார மையம் (Health Centre) போன்றவற்றிலும் கூட ARTSENS® மூலம் பெருமளவிலான மக்களிடையே ரத்தநாளங்களின் முதிர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ARTSENS® அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புது டெல்லி எய்ம்ஸ் (AIIMS New Delhi) மருத்துவமனையில் விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமனியின் வயது, உடல் செயல்பாடு, இதயநாள செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய நெதர்லாந்தில் உள்ள ராட்போட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (Radboud University Medical Center, The Netherlands) விஞ்ஞானிகள் இச்சாதனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று, நோயின் பல்வேறு நிலைகளில் தமனியின் முதிர்ச்சியை உடலியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான புது டெல்லி எய்ம்ஸ் (AIIMS New Delhi) ஆராய்ச்சியாளர்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர். ARTSENS® சாதனத்தின் மருத்துவப் பயன்பாடு குறித்து எடுத்துரைத்த நெதர்லாந்தின் ராட்போட் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுபவருமான டிக் தைசேன் (Prof. Dick Thijssen, Radboud UMC, The Netherlands) கூறுகையில், "600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சமீபத்தில் அதிநவீன ARTSENS® சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்த எளிதாகவும், அதே நேரத்தில் ரத்தநாள முதிர்வை சரியாகப் புரிந்து கொள்ளவும் இச்சாதனம் உதவுகிறது. ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிட உதவும் இது போன்ற எளிய சாதனங்களால், மருத்துவ நடைமுறையை மேம்படுத்தவும், பரந்த அளவில் ஏற்கச் செய்யவும் முடியும்" எனத் தெரிவித்தார். "ARTSENS® போன்ற கையடக்க, எளிதாகப் பயன்படுத்தும் சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி சரி பார்க்கும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவு குறைவதுடன், பரந்த அளவில் சோதனைகளை நடத்தும் போது மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றன. அதுமட்டுமின்றி, முதன்மைத் தடுப்பு உத்திகளில் (Primary Prevention Strategies) ஆர்வமுள்ள எவரும் இவற்றைப் பயன்படுத்தலாம்" என சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் எச்டிஐசி ஆசிரியப் பொறுப்பாளர் டாக்டர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் (Dr. Mohanasankar Sivaprakasam, Faculty-in-charge, HTIC, IIT Madras) குறிப்பிட்டார். "இச்சாதனம் கையடக்கமாகவும், எளிதாகக் கையாளக் கூடியதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கிறது. நாங்கள் அறிந்தவரை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கோ, பெரிய அளவிலான பரிசோதனைகளுக்கோ பயன்படுத்த இது மிகப் பொருத்தமான ஒன்றாகும்" என ஹைபர்டென்ஷன் இதழில் (Journal of Hypertension) ஆய்வுக் கட்டுரையை சமீபத்தில் எழுதிய விஞ்ஞானிகளான டாக்டர் பி.எம். நபீல், வி. ராஜ் கிரண், டாக்டர் ஜெயராஜ் ஜோசப் (Dr. P. M. Nabeel, V. Raj Kiran and Dr. Jayaraj Joseph) ஆகியோர் கூறுகின்றனர். தமனிச் சுவரில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு மாற்றங்கள் காரணமாக உடலின் ரத்த நாளங்களில் நெகிழ்வுத் தன்மை, மென்மையை இழந்து கொழுப்புகள் சேருவது இதயநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தமனி கடினமாகி, முன்கூட்டியே முதிர்ச்சியடையும்போது இதய செயல்பாட்டில் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயநாள நோய்களுக்கு மைய ரத்த அழுத்தம் காரணமாகும். ARTSENS® உருவாக்கத்தின் மற்றொரு கூட்டுப்பணியாளரான டெல்லி எய்ம்ஸ் உடலியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டினு எஸ். சந்திரன் (Dr. Dinu S. Chandran, Department of Physiology, AIIMS New Delhi) கூறும்போது, “ARTSENS® தமனியின் கடினத்தன்மை (Arterial Stiffness) மற்றும் மைய ரத்த அழுத்தத்தை (Central Blood Pressure) மதிப்பிட உதவும். இந்த ஒரேயொரு சோதனை மூலம், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ரத்தநாளத்தின் ஆரோக்கியத் தன்மையை ஆரம்ப நிலையிலேயே மதிப்பீடு செய்ய முடியும். வருங்காலத்தில் இதயநாள பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ள நபர்களுக்கு, பாரம்பரிய இதயநாள ஆபத்து அறிகுறிகள் (Traditional Cardiovascular Risk Factors) ஏற்படும்போதே அதனைக் கண்காணிக்கும் வாய்ப்பை ARTSENS® வழங்குகிறது. வழக்கமான இதயநாள பரிசோதனைகளோடு ஒப்பிடுகையில் ரத்தநாள ஆரோக்கியத்தை உரிய நேரத்தில் சரி செய்வதற்கான முக்கிய காலஅவகாசத்தை (Lead Time) அளிக்கும்" எனக் கூறினார். கைகாப்பு இயந்திரம் மூலம் வழக்கமாக அளவீடு செய்யப்படும் புறவெளி ரத்தஅழுத்தத்தை விட டோனோமீட்டர் (Tonometer) மூலம் அளவிடப்படும் மைய ரத்த அழுத்தம்தான் இதய ஆரோக்கியத்தை மதிப்பிட பெரிதும் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் தமனியின் கடினத்தன்மை (Carotid Arterial Stiffness), மைய ரத்த அழுத்தம் (Central Blood Pressure) ஆகியவற்றை மதிப்பீடு செய்து அளவிடுவதற்கு நம்பகமான, வசதியான சாதனங்கள் இதுவரை இல்லாத நிலைமை இருந்து வந்தது. இப்பிரச்சனைக்கு HTIC-IITM தற்போது தீர்வு கண்டுள்ளது. ARTSENS® ஒரே நேரத்தில் தமனியின் கடினத்தன்மை, மைய ரத்தஅழுத்தம் இரண்டையுமே சரிபார்க்கிறது. கையின் மேற்பகுதி, தொடைகளில் காப்பு போன்ற சாதனம் சுற்றுப்பட்டையாக பொருத்தப்படும், கரோடிட் தமனியைக் (Carotid Artery) கண்டறிய கழுத்துப் பகுதியில் கம்பி போன்ற சாதனம் பயன்படுத்தப்படும். இதயநாள ஆரோக்கியத்தைக் குறிக்கும் முக்கிய அம்சங்களான கரோடிட் தமனியின் கடினத்தன்மை, பெருநாடித் துடிப்பின் அலைவேகம் (Aortic Pulse Wave Velocity), மைய ரத்த அழுத்தம் ஆகிய மூன்றையும் இச்சாதனம் அளவிடுகிறது. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மட்டுமின்றி, மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட முன்மாதிரிகளுக்கான பொறியியல், தொழில்நுட்ப மேம்பாட்டையும் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) குழுவினர் மேற்கொண்டனர். உயிரிமருத்துவ நோய் அறியும் சாதனங்களின் (Biomedical Diagnostic Devices) செயல்திறனை நிரூபிக்கவும், தரநிலைகளைப் பூர்த்தி செய்யவும் ஆய்வுகள் நடத்தப்பட்டதுடன், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே சீரில்லா பரிசோதனைகளும் (Randomized Experiments) மேற்கொள்ளப்பட்டன. ARTSENS®Plus சாதனம் இச்சாதனத்தின் புதிய தயாரிப்பான ARTSENS®Plus-ன் பயன்பாடு (Usability), துல்லியத்தன்மை (Accuracy), உள்/இடை இயக்க மாறுபாடுகள் (Intra-/Inter-operator Variabilities) போன்றவற்றை ‘Journal of Hypertension' சமீபத்திய வெளியீட்டில், ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர். மருத்துவ ஆய்வுகள் ஆர்ட்டரி சொசைட்டியின் (ARTERY Society) வழிகாட்டுதலின்படி, ARTSENS® சாதனத்தின் செயல்பாட்டைச் சரி பார்க்க மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதயநாள கடினத்தன்மை (Vascular Stiffness), மைய ரத்த அழுத்தம் (Central Blood Pressure) ஆகியவற்றின் எளிய முறையிலான, நம்பகமான மதிப்பீட்டை அவர்கள் மருத்துவத் தரத்துடன் துல்லியமாக நிரூபித்துள்ளனர். இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இச்சாதனம் தொடர்பான பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ARTSENS® வலைத்தளம் ARTSENS® சாதனம் தொடர்பான விரிவான தகவல்கள், இதயநாள முதிர்ச்சி (Vascular Ageing) தொடர்பான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) ஆராய்ச்சி ஆகியவற்றை http://artsens.tech வலைத்தள முகவரியில் காணலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்