கற்றல் நோக்கங்கள் நம் நேரத்தை நம் கையில் எடுப்பது பற்றித் தெரிந்துகொள்ளுதல். நம் உணர்ச்சிகளைக் கையாளக் கற்றுக் கொள்ளுதல். நம் வாழ்வில் நெருங்கிய உறவில் உள்ள பெற்றோர், நண்பர், மற்ற பெரியவர்களுடன் உறவுகளை எப்படிப் பேணுவது என்பது பற்றித் தெரிந்துகொள்ளுதல். உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் ஒன்று தான்! தன்னைத் தான் அறிதலின் முதல் கட்டத்தில் என்னவாக இருக்கிறோம் என்று யோசிப்பதைத் தாண்டி என்னவாக ஆக விரும்புகிறோம் என்ற இலக்கை நோக்கிய பயணமே கனவுகள் மெய்ப்படும் காலத்திற்கு வழிவகுக்கும்! இலக்கு நோக்கிய பயணம் வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்ற நேரத்தைச் சரியான ஆக்கப்பூர்வ வழியில் செலுத்த வேண்டும். நாம் வீணாகக் கழிக்கும் நேரங்கள், நம்மை வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளிவிடும். நேரத்தை வீண் செய்வது தோல்வி, பயம், வருத்தம், அழுகை போன்ற எதிர்மறை உணர்வுகளைக் குவிக்கும். மகிழ்ச்சி, ஆச்சரியம், நெகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகள் - படிப்பிலும், வாழ்க்கையிலும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 11, 12ஆம் வகுப்புகள் முக்கியமானவை. ஒருபுறம் பொதுத்தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும். அதே நேரத்தில், அடுத்து, நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கிய பயணத்தையும் திட்டமிட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையில் தேவைப்படுவது நம்மை நாம் உணர்வது தான். நம்மை நாம் உணர்வது என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று: நாம் தற்போது என்னவாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வது. இரண்டு: இலக்கு நோக்கிய பயணத்திற்கு நம்மை நாம் எப்படி செதுக்கிக் கொள்ளப்போகிறோம் என்பதைத் திட்டமிடுவது. இன்றைக்கு நம் கண் முன் இருக்கக்கூடிய சவால்களை விட அதிகப்படியான வாய்ப்புகளும் உள்ளன. உயர்கல்வி தொடர்பான அரசின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. வழிகாட்ட பலரும் உள்ளனர். உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் ஒன்று தான்! தன்னைத் தான் அறிதலின் முதல் கட்டத்தில் என்னவாக இருக்கிறோம் என்று யோசிப்பதைத் தாண்டி என்னவாக ஆக விரும்புகிறோம் என்ற இலக்கை நோக்கிய பயணமே, கனவுகள் மெய்ப்படும் காலத்திற்கு வழி வகுக்கும்! இதைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்ள, SWOC முறையைக் கையாளலாம். SWOC முறை தன்னைத் தான் அறிதல் என்பது நம் பலம், பலவீனம், வாய்ப்புகள், சவால்கள் பற்றி அறிவது. நம்மை நாம் சரியாக உருவாக்கிக் கொள்வதன் மூலம், நம் நேரத்தை, நம் உணர்வுகளை சரியாகக் கையாள்வது. பெற்றோருடன் / பெரியவர்களுடன் இணைந்து நம் கனவுகளை நிறைவேற்றும் செயல் உத்திகளைப் பயன்படுத்துவது. பலம்: படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. என் நாளை என்னால் நன்கு திட்டமிட முடிகிறது. வளரிளம் பருவத்தில் வரக்கூடிய மன ஊசலாட்டங்களைக் கையாள முடிகிறது. பலவீனம்: படிப்பில் ஆர்வம் இருந்தாலும், எனக்குள் உள்ள சில பழக்கவழக்கங்கள், என்னைப் பின்னுக்கு இழுக்கின்றன. கைபேசியைப் பயன்படுத்துவது, தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களின் வற்புறுத்தலால் வீணாகச் சுற்றித் திரிய நேரிடுவது, உணர்வுகளைக் கையாள முடியாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்கள், திட்டமிட்டபடி படிக்க முடியாமல் தடுக்கின்றன. வாய்ப்புகள்: எனது உயர்கல்வியைத் திட்டமிட பல வழிகள் உள்ளன. பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் வழிகாட்டிகள் இருக்கின்றனர். சவால்கள்: இலக்குகளைத் திட்டமிட முடியவில்லை. புறத்தே உள்ள பலவும் என் கவனத்தைத் திசை திருப்புகின்றன. மேற்குறிப்பிட்டவை அனைவரின் வாழ்க்கையிலும் உள்ளவை தான். ஆனால் இதைத் தாண்டியும், பலரால் இன்றைக்குச் சில உயரங்களை எட்ட முடிந்ததற்குக் காரணம், அவர்களால் அவர்கள் வாழ்க்கையைக் கையில் எடுக்க முடிந்தது தான். வாழ்க்கையைக் கையில் எடுக்கத் தேவைப்படுவது நம் நேரம் மீதான நம் கட்டுப்பாடு. உணர்ச்சிகளைக் கையாளத் தெரிவது. உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வது. இதற்கும் உயர்கல்வியை நோக்கிய நம் பயணத்திற்குமான தொடர்பினைப் பார்க்கலாம். எல்லோருக்குமே ஒரு நாள் என்பது 24 மணி நேரம் தான். அதை சரிவர பயன்படுத்திக்கொள்பவர்களால், அதை எப்படிச் செய்ய முடிந்தது? அவர்கள் நேரத்தைத் திட்டமிடவில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் கையில் எடுத்ததால், நேரம் அவர்கள் கையில்! நம் வாழ்க்கையை நம் கையில் எடுக்க முடியாவிட்டால், நேரம் நம்மை ஆட்கொண்டுவிடும். வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்ற நேரத்தை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்த வேண்டும். நாம் வீணாகக் கழிக்கும் நேரங்கள், நம்மை வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளிவிடும். நேரத்தை வீண் செய்வது தோல்வி, பயம், வருத்தம், அழுகை போன்ற எதிர்மறை உணர்வுகளைக் குவிக்கும். மகிழ்ச்சி, ஆச்சரியம், நெகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகள் படிப்பிலும், வாழ்க்கையிலும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். ஆகவே, வளரிளம் பருவத்தில் உள்ள நாம் நமது பலவீனத்தைக் கண்டறிந்து அவற்றைப் பலமாக மாற்ற நேரத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், உணர்வுகளைக் கையாளத் தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். இதைப் போல், உறவுகளை சீராகக் கட்டமைத்துக் கொள்வதும் மிக முக்கியம். உறவுகளை ஆரோக்கியமாகக் கட்டமைத்துக் கொள்வது உயர்கல்வி குறித்து பெற்றோரின் கனவுகளும் பிள்ளைகளின் கனவுகளும் வெவ்வேறாக இருக்கக்கூடும். இரண்டு பேருக்குமான கனவுகள், பகிரப்பட்ட கனவுகளாக இருப்பின் பயணம் சுலபம். இதற்குப் பெற்றோருக்கும் மாணவருக்கும் தேவைப்படுவது சரியான தகவல் வழிகாட்டி மட்டுமல்ல, ஒருமித்த முடிவுகளை எடுப்பதற்கான உறவுத்தளமும்கூட. இதற்கு நமக்கு மூன்று செயல் உத்திகள் பயன்படும். 1. பெற்றோரோ மாணவரோ ஒருவரை ஒருவர் குறை கூறாமல், அதிகாரமாகப் பேசாமல், தான் உணர்வதை வெளிப்படுத்துவது எ.கா: நீ என்ன படிச்சுக் கிழிக்கப்போறே? நான் சொல்றேன் கேளு.உங்களுக்கு என்ன தெரியும்? என்பது மாதிரியான பேச்சைத் தவிர்க்க வேண்டும். எனக்கு இது பொருந்தும் என நான் நினைக்கிறேன் என்று கூறலாம். எனக்கு பொறியியல் படிப்பு பொருந்துமா என்பது தெரியவில்லை எனலாம். இந்தத் துறையில் சேர்ந்து படித்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும், நான் மனம் விரும்பிப் படிப்பேன் என்று கூறலாம். 2. பேசாமல் பேசுவோம் / காது கொடுத்துக் கேட்போம் உறவுத்தளத்தை மேம்படுத்தச் சொற்களைவிடப் பலமானவை செயல்கள்! பெற்றோரும் மாணவரும் ஒருவரை ஒருவர் அலட்சியப்படுத்தக் கூடாது. ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே பேசாமல் காது கொடுத்துக் கேட்கவேண்டும். வேலைகளைப் பகிர்வது, ஒன்றாக உணவருந்துவது, அன்பாக ஆதரவாக இருப்பது என்பவை ஒருவருக்கு மற்றவர் மீதான அன்பை, அக்கறையைப் பலப்படுத்த உதவும். 3. பிறர் நிலையில் நின்று புரிந்துகொள்வது பிள்ளைகள் நிலையில் நின்று, அவர்கள் கனவுகள் என்ன என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர், நம் நன்மைக்காகத் தான் சொல்கிறார்கள் என அவர்கள் நிலையில் இருந்து புரிந்துகொள்ள பிள்ளைகள் முயற்சி செய்ய வேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்