பிணையில்லாக் கல்விக் கடன் பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்குப் பிணையில்லாக் கல்விக் கடன் (Collateral Free Education Loan) மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) வாயிலாக விரைவான சேவை வழங்கத் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. செயல்படும் முறை மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதைத் திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் (Facilitation Officer) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கிணைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான அலைபேசி எண் (Mobile number) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பொறியியல், பலவகைத் தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி, முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால் கல்வி கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதோடு, மாவட்ட முன்னணி வங்கி மேலாளர் (District Lead Bank manager) அவர்களையும் தொடர்பு கொண்டு மாணாக்கர்களுக்கும், வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர். மேலும், ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டல் மற்றும் உதவி மையமாக செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலர் (Nodal Officer) அவர்களுடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர் இணைந்து செயல்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் வாயிலாக பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Co-ordinators) மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitation Officers) மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் (Nodal Officer) அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக் கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக் கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 416 (நாள்: 17.07.2026)