இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடல்சார் துறைக்கான பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் [Indian Maritime University (IMU)] பத்தாண்டு காலத்திற்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் (Union Ministry of Ports and Shipping) கீழ் செயல்படும் இந்தப் பல்கலைக்கழகம், சென்னை, கொச்சி, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வளாகங்கள் மூலம் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. படிப்புகள் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு வளாகங்களில் கடல்சார் தொழில்நுட்பம் (Maritime Technology), சர்வதேச போக்குவரத்து (International Transport) உள்ளிட்டவற்றில் எம்.டெக். (M.Tech.) மற்றும் எம்பிஏ (MBA) முதுகலை படிப்புகள் வழங்கப்படுகிறது. கடல்சார் அறிவியல் சரக்கு போக்குவரத்து (Maritime Science and Logistics) ஆகியவற்றில் பி.எஸ்சி. (B.Sc.) மற்றும் பிபிஏ (BBA) படிப்புகளும் வழங்கப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் அனைத்து வளாகங்களிலும் எம்எஸ்/பிஹெச்டி ஆராய்ச்சி படிப்புகள் (MS/PhD Research Courses) வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள் தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல்சார் செயல்பாடுகள் தொடர்பாக இந்த பல்கலைக்கழகம் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடல்சார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கல்வி கட்டமைப்பு வசதிகளை மேலும் நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்