ஆன்லைன் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) மின்னணு அமைப்பியல் நான்காண்டு ஆன்லைன் இளங்கலை அறிவியல் [Four-year Bachelor of Science (BS) Degree in Electronic Systems] பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்னணு மற்றும் வடிவமைக்கப்பட்ட சாதன உற்பத்தித் துறையில், திறமையான பட்டதாரிகளுக்கான குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதுதான் இந்த பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் அடிப்படை நிலை சான்றிதழ் (Foundational Level Certificate), டிப்ளமோ (Diploma) அல்லது பி.எஸ். பட்டம் (BS Degree) ஆகியவற்றைப் பெறும் வகையில் பல்வேறு கட்டங்களில் வெளியேற ஏதுவாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் இந்தியாவை உலகளாவிய மையமாக உருவாக்குவதற்கான இந்தியா செமிகண்டக்டர் மிஷன்-உடன் இந்தப் பாடத்திட்டம் இணைந்து செயல்படுகிறது. இது ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ள இரண்டாவது பி.எஸ். பட்டப்படிப்புத் திட்டமாகும். ஏற்கனவே டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் பி.எஸ். பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 17,000-க்கும் அதிகமான மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். கல்வி உதவித்தொகை அனைவரும் அணுகக்கூடியதாக ஐஐடி கல்வியை மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன், பி.எஸ். படிப்பிற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இருப்பதை உறுதிசெய்யும் வகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் மோட்டார் வாகனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் கீழ்க்காணும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்: எலக்ட்ரானிக் சிஸ்டர் டிசைனர் (Electronic System Designer) எம்பெடட் சிஸ்டம் டெவலப்பர் (Embedded System Developer) எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட் (Electronic Hardware Specialist) சிஸ்டம் டெஸ்டிங் இன்ஜினியர் (System Testing Engineer) எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் இன்ஜினியர் (Electronics Research Engineer) பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களில் உயர்கல்வியையும் தொடர முடியும். இப்பாடத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை https://study.iitm.ac.in/es/ இணையதள முகவரியில் காணலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்