நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது தமிழ்நாடு அரசு "இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்" தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் (The Tamil Nadu Dr.J Jayalalithaa Music and Fine Arts University) நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. தமிழை முத்தமிழாக வகைப்படுத்தி வளர்த்தனர் தமிழர்கள். முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடகக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மௌன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது. நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ25,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நாடகக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, இதர தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு (MTA - Master of Theatre Arts) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. இப்படிப்பிற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (இணையதள முகவரி www.tnjjmfau.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணைவேந்தர்,தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசைமற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண் 630 (08.09.2026)