உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழி செயலாற்றி வருகிறது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு தமிழ் மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் www.tamiluniversity.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக இப்பட்டப் படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் [கட்செவி (WhatsApp) எண் குறிப்பிட்டு] வந்து சேர வேண்டிய இறுதி நாள் 09.06.2023 ஆகும். மேலும் தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113 (தொலைபேசி 044 22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9