கட்டடக்கலை குழுமம் கட்டடக்கலை குழுமம் [Council of Architecture (CoA)] என்பது 1972ஆம் ஆண்டின் கட்டடக்கலை சட்டத்தின் விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சட்டரீதியான தன்னாட்சி அமைப்பாகும். கட்டடக் கலைஞராக (Architect) ஆக விரும்புபவர்கள் அனைவரும் கட்டடக்கலை குழுமத்தில் [Council of Architecture (CoA)] பதிவு செய்திருக்க வேண்டும். கட்டடக்கலை கல்வி இந்தியாவில் கட்டடக்கலை கல்வியை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் தற்போது சுமார் 465 உள்ளன. இந்த நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வித் தரம் (பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள்/துறைகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகள்/பள்ளிகள், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள்) கட்டடக்கலை குழுமத்தால் கண்காணிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான தகுதி, படிப்பு காலம், பாடத்திட்டம், தேர்வு ஆகியவற்றுக்கு தேவையான விதிமுறைகளையும் தரநிலைகளையும் பரிந்துரை செய்யப்படுகிறது. கட்டடக்கலை குழுமம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தரநிலையை (Minimum Standards) அனைத்து கல்வி நிறுவனங்களும் பராமரிக்க வேண்டும். தகுதியை அங்கீகரிப்பது மற்றும்/அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக இந்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்க கட்டடக்கலை குழுமத்திற்கு அதிகாரம் உள்ளது. கட்டடக்கலை கல்வி தொழில்முறை படிப்புகளில் கடினமான மற்றும் சவாலான துறை சார்ந்த படிப்பாகும். கட்டடக்கலை கல்வி படைப்பாற்றலைக் கற்பிப்பதோடு தொழில்நுட்பம் மற்றும் பிற தொடர்புடைய கூறுகளை உள்ளடக்கியது. ஒரு மாணவனின் திறனை அதிகரித்து சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்துகிறது. கட்டடக் கலைஞர்கள் ஒரு தேசத்தை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் உதவுகிறார்கள். எதிர்காலக் கட்டடக் கலைஞர்கள் உலகத்தின் தலைசிறந்த தேசமாக இந்தியாவை உருவாக்கிட பங்களிக்க வேண்டும். தேசிய கட்டடக்கலை திறன் தேர்வு நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.Arch. (5 வருடம்) படிப்பில் சேருவதற்கான தேசிய கட்டடக்கலை திறன் தேர்வை [National Aptitude Test in Architecture (NATA)] கட்டடக்கலை குழுமம் நடத்துகிறது . மாணவர்களின் திறனை மதிப்பிடும் NATA இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்கத் தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பில் (10+2) இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த அல்லது கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டயப் படிப்பு (10+3) முடித்தவர்கள் NATA தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். NATA தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளவும் மாணவர்கள் www.nata.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு stusupport@nata-app.online என்ற மின்னஞ்சல் முகவரியிலும் +91-73853 95400 என்ற உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புடைய இணைப்புகள் NATA வலைத்தளம் NATA தகவல் கையேடு NATA இணையவழி விண்ணப்பப் பதிவு கட்டடக்கலை குழுமம் (CoA) ஆதாரம்: www.nata.in