உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

இப்பிரிவு, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கையின் நோக்கங்களை அறிந்து கொள்வதற்காக, அதன் உத்திகள் மற்றும் நடவடிக்கைகளை விவரிக்கிறது. அவையாவன:-

சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் புதுப்பித்தல்

சுற்றுச்சூழல் சார்ந்த நலத்திட்டங்களை, மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலையை மேம்படுத்துதல்

சுற்றுச்சூழல் ஆளுகை மற்றும் நிறுவனஞ் சார்ந்த திறனை மேம்படுத்துதல்

சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் புதுப்பித்தல்

மக்களின் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து போதிய அளவுக்கு மதிப்பீடு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதுடன், நமது மாநிலத்திலுள்ள சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை கண்டறிதல், பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

நீர் ஆதாரங்கள்

இந்தியாவின் நிலப்பரப்பில், நான்கு சதவீத நிலப்பகுதியை, இந்திய மக்கள் தொகையில், ஏழு சதவீத மக்கள் தொகையையும் கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் நீர் ஆதாரங்களில் மூன்று சதவீத நீர் ஆதாரங்களை மட்டுமே பெற்றுள்ளது. தனிநபர் பெறும் நீரின் அளவும் தேசிய சராசரி 1545 கனமீட்டராக இருக்க, தமிழ்நாட்டின் சராசரி 800 கன மீட்டராக உள்ளது), ஆண்டு மழைப்பொழிவும் (தேசிய சராசரி 2300 மில்லி மீட்டராக இருக்க, தமிழ்நாட்டில் 970 மில்லி மீட்டர்) தேசிய சராசரி அளவை விட குறைவாக உள்ளது. மாநிலத்தின் பெரும்பகுதிகள், மேற்குமலைத் தொடரின் மழை மறைவுப் பகுதியில் உள்ளன. தென்மேற்குப் பருவமழை மூலம் குறைந்த அளவு மழையையே இம்மாநிலம் பெறுகிறது.

மேற்பரப்பு நீர்வளம் 24,160 மில்லியன் கனமீட்டராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது நமது மாநிலத்தில் கிடைக்கிற நீரின் மதிப்பீடு செய்யப்பட்ட அளவில், சுமார் ஐம்பது சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பதினேழு ஆற்று வடிநிலங்களுள் பதினாறு வடிநிலங்களில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு வடிநிலம் மட்டுமே உபரி நீரைப் பெற்றுள்ளது. அனைத்து வடிநிலங்களிலும் சில வட்டாரங்கள், குறைவான மழைப்பொழிவு, உருவாக்க அம்சங்கள், இடஅமைப்பியல் அம்சங்கள் மற்றும் நீரின் தரம் குறித்த பிரச்சனைகள் ஆகியவற்றின் காரணமாக, வளரீதியாக பற்றாக்குறைப் பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 24 இலட்சம் எக்டேர் நிலம், மேற்பரப்பு நீர் மூலம் பாசனம் பெறுகிறது.

பயன்படுத்தத்தக்க நிலத்தடிநீர் செறிவூட்டம் என்பது 22,423 மில்லியன் கன மீட்டராக உள்ளது. தமிழ்நாட்டின் 385 வட்டாரங்களில் (384 + 1 சென்னை மாநகர்) 145 வட்டாரங்கள் பாதுகாப்பான வட்டாரங்கள் என்றும், 57 வட்டாரங்கள் ஓரளவு இடர்ப்பாடு மிக்க வட்டாரங்கள் என்றும், 33 வட்டாரங்கள் இடர்ப்பாடு மிக்க வட்டாரங்கள் என்றும், 142 (141+1 சென்னை மாநகர்) வட்டாரங்கள் நீர் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட வட்டாரங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 8 வட்டாரங்களில் நீரின் தன்மை உவர் தன்மை கொண்டதாக மாறியுள்ளது.

நீரைப் பெறுவதில் உள்ள முக்கியமான சவால்களில் கீழ்க்கண்டவை அடங்கும்:

1. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால், குறைந்த அளவே கிடைக்கும் நீர் மேலும் குறையும் என்பதால், அனைத்துத் துறைகளிலும் (வேளாண்மை, குடியிருப்பு மற்றும் தொழிலகம்) நீரின் தேவையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2. செறிவூட்டும் திறனுக்கும் மேற்பட்டு, மிகையாக நிலத்தடிநீர் பயன்படுத்தப்படுதல்

3. குறிப்பாக, பாசனத்திற்காக, மேற்பரப்பு நீர் மிகையாகவும், பயனற்ற வகையிலும் பயன்படுத்தப்படுதல்

4. ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், நீர்வழிகள் மற்றும் பிற நீர்நிலைகள் புறக்கணிக்கப்படுதல்.

5. தொழிலகக் கழிவுநீர், வீடுகளின் (சாக்கடை) கழிவுநீர், நகராட்சி திடக்கழிவு மற்றும் மிகையான இரசாயன உரப்பயன்பாடு முதலியவை உட்பட பல்வேறு காரணங்களால் நீர் மாசுபடுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, இது பொது மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கிறது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

நீர் ஆதாரங்களைப் பேணுதல் மற்றும் புதுப்பித்தல் வாயிலாக நீரைப் பெறுதல், நீடித்த மற்றும் சமமான நீர் ஒதுக்கீடு, நிலத்தடிநீர் செறிவூட்டலுக்காக, ஆறுகள், நீர் நிலைகள் ஆகியவற்றில் பாய்கிற உயிரின வாழ்க்கைச் சூழல் சார்ந்தவற்றைக் குறைந்த அளவாகப் பராமரிக்கிறபோது, அனைத்து நுகர்வு சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்காக, செம்மையான மற்றும் அனைவரும் நீரைப் பெறுவதற்கான வழிவகைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை அடையும் வகையில் நீர் ஆதாரங்கள் மேலாண்மை குறித்த உத்திகளும், நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படும்.

1. நீர் ஆதாரங்கள் குறித்து விரிவான திட்டமிடல் மற்றும் தகவலைப் பட்டியலிடுதல் ஆகியவற்றின் வாயிலாக, நீர் குறித்த தகவல் களஞ்சியத்தை வலுப்படுத்துதல். தமிழ்நாடு அரசு, புவியியல் தகவல் ஏற்பாட்டு முறை மற்றும் தொலையுணர்வு சாதனம் உட்பட நவீன உத்திகளைப் பயன்படுத்தி, மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, வளமான மற்றும் உண்மையான நீர் ஆதாரங்களின் விரிவான தகவல்பட்டியல் ஒன்றை உருவாக்கும்.

2. நிலத்தடி நீரையும், மேற்பரப்பு நீரையும் ஒன்றாகச் சேர்த்து, நீடித்த முறையில் பயன்படுத்துவதை அதிகரிக்கச் செய்கிறபோது, நீர்வரத்து, பருவகாலம் மற்றும் மாசினால் ஏற்படுகிற விளைவுகள் மற்றும் இயற்கையான மறு உருவாக்கத்திறன்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்ய, ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை மேம்படுத்துதல். இதற்கு நீரின் தர நிலைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது.

3. செம்மையான முறையில் நீரைப்பெறுதல் மற்றும் நீரை வழங்குதல் ஆகியவற்றுக்காக, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, வலுப்படுத்துகிறபோது, நீர் ஆதாரங்களை, படிப்படியான ஏற்பாட்டு முறை மூலமாக பெருக்குதல், புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்.

4. நீரைப்பெறுதல் மற்றும் வழங்குதலுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக, நீர் ஆதாரங்களை பின்வரும் முறைகளில் பெருக்குதல், புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்

அ. தற்போதுள்ள முறைகளில் கொள்திறன் அளவைப் புதுப்பித்தல் மற்றும் அதிகரித்தல் (ஆற்று வடிநிலங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகள்), புதிய முதலீடுகள் நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் முதலீடுகள்), நீர்இழப்புகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டவாறு, நமது மாநிலத்தின் நீர்தேக்கிவைக்கும் திறனை இருமடங்காக அதிகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள்.

ஆ. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், கடல்நீரைக் குடிநீராக மாற்றுதல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்துவதன் வாயிலாக, நீரைப் பெறுவதற்கான குறிக்கோள்களை அடைவதற்காக, புதிய ஆதாரங்களை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னை மாநகரின் தேவையை நிறைவு செய்வதற்காக, தமிழ்நாடுஅரசு, பெரிய அளவிலான கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. மேலும் கிடைக்கும் நீரின் அளவைப் பெருக்குவதற்காக, இந்த முயற்சியை மீண்டும் தொடருவதற்கான வாய்ப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படும்.

இ. அனைவருக்கும் சமமான அளவிலும், அனைத்து வகைகளைச் சேர்ந்த நீரையும் பயன்படுத்துவோருக்கும் செம்மையான முறையிலும் வழங்குவதற்கான ஏற்பாட்டு முறைகளை வலுப்படுத்தல்.

ஈ. ஆறுகள் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாக்கடை நீர் மற்றும் தொழிலகக் கழிவுநீர்கலப்பதைத்தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

உ. மிகவும் மாசுப்பட்ட நீர்நிலைகளை சுத்தம் செய்வதற்கும், மறுசீரமைப்பு செய்வதற்குமான ஒரு இலக்கு நிர்ணய திட்டத்தை துவக்குதல்.

ஊ. நீர்நிலைகளை, ஆக்கிரமிப்பிலிருந்தும், திரவக் கழிவுகளிலிருந்தும் / திடக் கழிவுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காக, தற்போதுள்ள சட்டம் சார்ந்த கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

5. கீழ்க்கண்ட நடவடிக்கைகளின் வாயிலாக நிலத்தடிநீரைக் கண்காணித்தல் மற்றும் பெருக்குதல் ஆகியவற்றுக்கான அமைப்பை வலுப்படுத்துதல் :

அ. 1987ஆம் ஆண்டு சென்னைப் பெருநகரப் பகுதி நிலத்தடி நீர் முறைப்படுத்துதல்) சட்டத்தின் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் சென்னை நீங்கலாக, பொதுப் பணித் (R2) துறையின் 23.07.2014 ஆம் நாளிட்ட அரசாணை நிலை) எண்.142ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுப்பணித் துறையின் நீர் ஆதாரங்கள் துறை செம்மையாக செயல்படுவதன் வாயிலாக, மாநிலத்தின் நிலத்தடி நீர்வளத்தை முறைப்படுத்துதல்.

ஆ. மழைநீர் சேகரிப்பு திட்டம் சென்னையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இம்முறையை மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்த செய்தல்.

இ. நிலப்பட ஏட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டுக்கான நீர்நிலைகளின் வரைபடத்தை, மத்திய நிலத்தடிநீர் வாரியம் தயாரித்துள்ளது. இது, தகவல் இடைவெளிகளைக் கண்டறிதல், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற பகுதிகளைவரையறுத்தல் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய பகுதிகளைக் குறியீடு செய்தல் ஆகியவற்றுக்கு வகை செய்கிறது. திட்டமிடல், நீர் கிடைக்கும் நிலையைக் கண்காணித்தல், நீர் நிலைகளை உருவாக்குதல் மற்றும் மீட்டல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இயலும் வகையில்,நில அளவீட்டு முறையின் அடிப்படையிலான நீர்நிலைகள் குறித்த திட்டம் தயாரிக்கப்படும்.

6. மாநிலம் முழுவதிலும் உள்ள நீர் வழங்கல் ஏற்பாட்டு முறைகள், ஏரிகள் மற்றும் கிணறுகள் உட்பட ஆற்று வடிநிலங்கள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, தனிப்பட்ட மற்றும் விரிவான தர கட்டுப்பாடு மற்றும் பரவலாக்குதல் வரைவு ஒன்றைச் செயற்படுத்துதல்.

கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிய தரங்களை கண்டிப்பான முறையில் செயற்படுத்துவதுடன், நீர்மாசுபடுதலுக்கு காரணமாக உள்ளவற்றைக் கண்டறிதல் மற்றும் அவற்றைத் தடுத்துநிறுத்துதல்.

அ. தொழிலகங்களிலிருந்து பூஜ்ய அளவு கழிவுநீர் வெளியேற்ற அணுகு முறைகளைப் பரந்த அளவில் பின்பற்றுதல், தொழிலகங்கள் கழிவுநீரை வெளியேற்றுவதைக் கண்டுபிடித்து, அவற்றை, தேவையான தர அளவுக்கு ஏற்ப சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

ஆ. மாநகரம் முழுவதிலும் கழிவுநீரகற்றல் ஏற்பாட்டு முறைகள், பன்முகப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக மனையிலேயே துப்புரவு வசதி மற்றும் நச்சுநீர் மேலாண்மை ஏற்பாடுகள் மற்றும் மாநிலம் முழுவதிலும் கழிவுநீர் சீர்திருத்தத்திட்டம் ஆகியவை உட்பட திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழித்தல், அனைவருக்கும் கழிப்பிட வசதி மற்றும் உரிய உட்கட்டமைப்பு வசதிசெய்து கொடுத்தல்.

இ. இரசாயன உரங்கள் மற்றும் பயிர்பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுகிற விளைவுகளையும், நீர் நிலைகளில் மாசு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல்.

7. வேளாண்மை, தொழிலகம் மற்றும் வீட்டுப்பயன் உட்பட அனைத்துத் துறைகளிலும் நீரின் தேவைக்கான மேலாண்மையை மேம்படுத்துவதுடன், நீரின் பயன்பாட்டுச் சிக்கனத்தைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு, அனைத்துத் துறைகளிலும் நீர் பயன்பாட்டுச்சிக்கனத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

அ. 'ஒரு பயிருக்கு ஒரு சொட்டு என்ற பாசன ஏற்பாட்டு முறையை, வேளாண்மையில் அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல், சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் மாற்றுப்பயிர் உட்பட, நீர்பயன்பாட்டுச் சிக்கன முறைகள் மற்றும் நீடித்த வகையிலான நடைமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்ற ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுதல்,

ஆ. நீர் பயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மாசு தரங்களில் சர்வதேச அளவுக்கு இணையாக, நமது மாநிலத்தைச் சேர்ந்த தொழிலகங்களைக் கொண்டு வருவதற்காக, நீர் பயன்பாட்டில் சிக்கன நிருவாக முறைகளைப் பின்பற்றுவதற்கு தொழிலகங்கள் ஊக்கு விக்கப்படும்.

இ. நமது மாநிலத்தில் அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் வருவாய் தராத நீர் பயன்பாட்டைக் கண்டறிந்து, அதைக் குறைப்பதன் மூலம் குடிநீர் வழங்கல் ஏற்பாட்டு முறைகளில் (நகர்ப்புறப்பகுதி மற்றும் ஊரகப்பகுதி ஆகிய இரண்டிலும்) சிக்கனம் அதிகரிக்கப்படும்.

ஈ. கழிவறை, நீரடிக்கழிப்பிடம் மற்றும் தோட்ட வேலை போன்ற நோக்கங்களுக்காக, அதாவது நீரை அருந்துதல் தவிர இது போன்ற பிற நோக்கங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை செம்மையான முறையில் பயன்படுத்துவதற்கு கட்டுமானத்துறை ஊக்குவிக்கப்படும்.

காற்று

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவை, காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், தமிழ்நாடு, தொழில்மயமான மாநிலமாக விரைவாக வளர்ந்து வருவதாலும், நாட்டிலேயே மிகவும் நகர்ப்பகுதிமயமான மாநிலமாக உருவெடுத்து வருவதாலும், காற்றின் தரம் பாதிக்கப்படுவதை தமிழ்நாடு கருத்தில் கொண்டுள்ளது. மாநிலத்திற்குள் பல தொழிலகத் தொகுப்புகள் உள்ளன. நகர்ப் பகுதிகளில், சொந்தப்பயனுக்கான சீருந்து வாகனப் போக்குவரத்து அதிகரிப்பினால் காற்றின் தரம் மாசுபடுவதற்கு அது பெரும்பங்காற்றுகிற போதிலும், தொழிலகங்களின் புகை வெளியேற்றத்தால் காற்று மாசுபடுவது பெருங்கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சவால்களுடன், அதிகரித்து வருகிற மின்சக்தி தேவையை நிறைவு செய்வதற்காக, அனல் மின் சக்தி அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் காற்று மாசினை குறைப்பது குறித்து மிகுந்த கவனமும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு, கீழ்க்கானும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

1. காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்கான ஏற்பாட்டு முறைகளை வலுப்படுத்துதல்:

அனைத்துத் தொழிலகத் தொகுப்புகள், அனல்மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் புகை வெளியேற்றப்படுவதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் ஏற்பாட்டு முறைகள் செயல்படுத்தப்படும்.

2. நகர்ப்பகுதியில் காற்றின் தரத்தைக் கண்காணித்தல்

அ. தேசிய சுற்றுப்புற காற்று தர கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், முக்கியமான மாநகரங்கள் மற்றும் நகரங்களில் அமைந்துள்ள 26 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கிறது. சென்னை (எட்டு நிலையங்கள்), கோயம்புத்தூர் (மூன்று நிலையங்கள்), தூத்துக்குடி (மூன்று நிலையங்கள்), மதுரை (மூன்று நிலையங்கள்), சேலம் (ஒரு நிலையம்), திருச்சி (ஐந்து நிலையங்கள்), கடலூர் (மூன்று நிலையங்கள்), மற்றும் மேட்டூர் இரண்டு நிலையங்கள்) ஆகியவை இந்த மாநகரங்களில் அடங்கும். 5,00,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள அனைத்துப் பெரிய நகர்ப்பகுதி வசிப்பிடங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்.

ஆ. தொழிலகப் பகுதிகள் மற்றும் அனல்மின் நிலையங்களில் காற்றின் தரத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல். உரிய நேர அடிப்படையிலான புகை வெளியேற்றம் மற்றும் சுற்றுப்புறக் காற்றின் தரத்தையும் கண்காணித்து, உரிய நேர காற்று தர தகவல் அறிக்கையைப் பெறுவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதனுடைய தலைமை அலுவலகத்தில் மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த அமைப்பு. இந்த வகையில் நாட்டிலேயே முதலாவது முயற்சியாகத் திகழ்கிறது. உரிய நேர காற்று தர தகவல் அறிக்கை மையம் அதாவது CARE AIR என்ற இந்த அமைப்பு, உரிய நேரபுகை வெளியேற்றம் குறித்த ஒருதொடர்ச்சியான கண்காணிப்பு ஏற்பாட்டு முறையாக உள்ளது. இதில், வெளியேற்றப்படுகிற புகையின் அளவு, வரையறைகளை விஞ்சுகிறபோது, அதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலகத்திற்கும், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்காக, இந்த ஏற்பாட்டு முறையில் நிறுவப்பட்டுள்ள சாதனத்தின் மூலம் எச்சரிக்கையொலி எழுப்பப்படுகிறது.

3. தொழிலகங்களிலிருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுதலைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளித்து, காற்றின் தரநிலைகளை அடைவதற்கான சட்டம், கொள்கைகள் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்துதல்.

தமிழ்நாடு அரசு தொழிலகங்கள் உரிய இடங்களில் நிறுவப்படுவதை உறுதி செய்வதுடன், தொழிற்சாலைகள் மூலம்மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, மாசு கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயலாக்கத்தை வலுப்படுத்தும். தூய்மையாக்கும் தொழில்நுட்ப உத்திகள், தூய்மையாக்கும் எரிபொருட்கள் மற்றும் எரிசக்தியை செம்மையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

4. நகர்ப்பகுதிகளில் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்கச் செய்தல்:

நகர்ப்பகுதி போக்குவரத்தில், பொது போக்குவரத்து வாகனங்களின் பங்கை அதிகரிப்பதற்கான திட்டங்களையும், திட்டப்பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். நமது மாநிலத்தில், அவசியம் ஏற்படுமிடங்களில், மெட்ரோ இரயில், மோனோ இரயில், விரைவு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு, மிதிவண்டி போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் நடைபாதைகள் உட்பட பல வகையான போக்குவரத்து ஏற்பாட்டு முறைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் அனுமதி பெற்ற தனியார் சோதனை மையங்களிலிருந்து, சரக்கு வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கான சான்றிதழைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு 1989ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் விதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்துள்ளது. இந்த முயற்சி, ஏனைய பெரிய நகர்ப்பகுதி மையங்களிலும் (500,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளவை) மேற்கொள்ளப்படும்.

5. வாகனங்கள் மூலம் ஏற்படுகிற மாசினைக் குறைத்தல்

1. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு போன்ற குறைந்த மாசினை ஏற்படுத்துகிற மாற்று எரிபொருள் பயன்பாடு விரிவுபடுத்தப்படும்.

2. தரத்தை வலுப்படுத்துதல்: வாகனங்கள் மூலம் ஏற்படுகிற மாசினைக் கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.

3. தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் தலைமையிடம் வகித்தல்

காற்றாலை மின்சக்தி உற்பத்தி மற்றும் தமிழ்நாடு 2012 ஆம் ஆண்டு சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி கொள்கை ஆகியவற்றின் மூலம் தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் தலைமையிடத்தைத் தொடர்ந்து வகிப்பதற்கு, தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. மேலும், அனல் மின்சக்தி உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் தமிழ்நாடுஅரசு அறிந்துள்ளது. இந்தக் கூடுதல் உற்பத்தி அளவிற்காக, காற்று மின் உற்பத்தியை செம்மையாகச் செயல்படுத்துவதற்கான அமைப்புகள் உருவாக்கப்படும்.

நிலம்

தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் நாற்பத்து நான்கு சதவீதமான 13 மில்லியன் எக்டேர் நிலப்பரப்பு, நிகர சாகுபடிப் பரப்பளவாக உள்ளது. இது, வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணரிப்பு, காரத்தன்மை மற்றும் உவர்தன்மை, நீர் சூழ்ந்து கொள்ளுதல், மாசு ஏற்படுதல், உயிரகப்பொருள் முதலியவற்றில் குறைவு ஏற்படுதல் ஆகிய காரணங்களினால் நிலத்தின் உற்பத்தித் திறன் குறைகிறது. வீடு மற்றும் தொழிலகக் கழிவுகளை (திரவக் கழிவு மற்றும் திடக் கழிவு) ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றுவதும், நிலத்தின் உற்பத்தித்திறன் குறைவதற்கு வழி வகுக்கிறது. மேய்ச்சல் நில மேலாண்மைக்காக, உள்ளூர் நிறுவனங்களுக்குப் போதிய அதிகாரமளிக்காததால், உயிரி ஆற்றலின் ஆதாரம் மிகையாகப் பயன்படுத்தப்படுவதற்கு அது வழிவகுக்கிறது. நீடித்த நிலையற்ற மேய்ச்சல், மிகையான பாசனம், இரசாயன உரங்கள் மற்றும் பயிர் பூச்சிக்கொல்லிகளின் முறையற்ற பயன்பாடு, விலங்குகளின் கழிவுகளை வீடுகளில் எரிபொருளாகப் பயன்படுத்துதல் ஆகியவையும், நிலத்தின் உற்பத்தித்திறன் குறைவதற்கு வழிவகுக்கின்றன. உள்ளடக்கமான வெளிப்படையான மானியங்கள் நீர், மின்சக்தி, இரசாயன உரம் மற்றும் பயிர் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றுக்காக), உகந்த கொள்கைகள் போதிய அளவில் இல்லாமை மற்றும் நெறிப்படுத்துகிற சூழல் இன்மை ஆகியவை வழக்கமான காரணிகளாகச் செயல்பட்டு, மிகையான பயன்பாட்டிற்கு இட்டுச் சென்று, பயனற்ற மற்றும் சமநிலையற்ற நில ஒதுக்கீட்டையும், பயனையும், மேலாண்மையையும் உருவாக்கி, நிலத்தின் உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைவதற்கு வழிவகுக்கிறது.

பொருளாதார வளர்ச்சி மேம்பாடு, பெருமளவில் தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்பகுதிமயமாதல் ஆகியவற்றால், வேளாண்மை அல்லாத நோக்கங்களுக்காக, நிலத்திற்கு அதிக அளவில் தேவை ஏற்படக்கூடும். மாநிலத்தின் செம்மையான நில நிருவாகம் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கு, உள்நோக்கமற்ற விளைவுகளை உருவாக்குகிற நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத ஊக்குவிப்புகளுடன் இணைந்த, ஒரு வலுவான நிலப்பயன்பாட்டுக் கொள்கை இன்றியமையாதது என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

1. ஒரு விரிவான நிலப்பயன்பாட்டுக் கொள்கையை உருவாக்கி, செயற்படுத்துதல்

தமிழ்நாடு அரசு, ஒரு நிலப்பயன்பாட்டுக் கொள்கையை உருவாக்கி செயற்படுத்தும். அது கீழ்க்கண்டவற்றுக்கு வகை செய்யும்.

அ. சுற்றுச்சூழலின் நீடித்த தன்மையையும், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற உயிரின வாழ்க்கைச் சூழலையும் பாதுகாத்தல்

மாநிலத்தின் சுற்றுச்சூழலின் நலனுக்கு மிகவும் இன்றியமையாத வனங்கள், உயிரி சேம வனங்கள், சதுப்பு நிலங்கள், கடலோர உயிரின வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் அத்தகைய பிற தாவர - விலங்கினங்களின் இயற்கையான இருப்பிடங்கள் உட்பட எளிதில் பாதிப்பிற்கு இலக்காகும் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாத்துப் பேணுவதற்கு, நிலப்பயன்பாட்டுக் கொள்கை முன்னுரிமை அளிக்கும்.

ஆ. வேளாண்மை மற்றும் உணவுப்பாதுகாப்பு

உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில், இரண்டாவது பசுமைப்புரட்சியை முன்னறிவிக்க அரசு தீர்மானித்துள்ளது. தரிசு நிலங்களை வேளாண்மைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி, சாகுபடியின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சாகுபடி செய்யத்தக்க நிகர நிலப்பரப்பினை (உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன்) அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இ. நகர்ப்பகுதிகளின் திட்டமிடப்பட்ட விரிவாக்கம்

தமிழ்நாடு, இந்தியாவிலேயே மிகவும் நகர்ப்பகுதி மயமான மாநிலமாக இருப்பதால், அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் அறுபது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள், நகர்ப்பகுதிகளில் வசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தை செம்மையாகப் பயன்படுத்துதல், பொருத்தமான மண்டலங்களாக்குதல், நகர்ப்பகுதி மேம்பாட்டை மிகவும் திட்டமிட்ட முறையில் ஏற்படுத்துவதற்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்குத் திட்டமிடல் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக, பெரிய நகர்ப்பகுதிகளுக்கான பெருந்திட்டங்களைத் தயாரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. வலுவான சுற்றுச்சூழல் மேலாண்மைக் கொள்கைகள், இந்தப் பெருந்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துவதுடன் ஒருங்கிணைக்கப்படும்.

ஈ. சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த வகையிலான தொழிலக மையங்களையும், பெருவழிகளையும் உருவாக்குதல்

ஒரு முன்னணி தொழிலக மாநிலம் என்ற வகையில், தமிழ்நாடு, தொடர்ந்து தொழிலக மேம்பாட்டையும், வேலைவாய்ப்பையும் ஈர்த்து வருகிறது. மாநிலம் முழுவதிலும் சமச்சீரான தொழில்மயமாக்கலுக்கு வழிகாட்டவும், மேம்படுத்தவும், தெரிவு செய்யப்பட்ட பெருவழிகள் மற்றும் மையங்களில் தொழிலக உட்கட்டமைப்பு வசதியை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. இந்தத் தொழிலகப் பெருவழிகள் மற்றும் மையங்களின் திட்டமிடல் மற்றும் மேலாண்மையில், உரியவாறு இடத்தைத் தெரிவு செய்தல் (தொழிலகத்தின் வகைப்பாட்டைப் பொறுத்து) மற்றும் பாதுகாப்புகள் உள்ளடங்கி இருக்கும்.

கடலோரப் பகுதிகள்

தமிழ்நாடு, பதிமூன்று கடலோர மாவட்டங்களை உள்ளடக்கி, சுமார் 1076 கிமீ நீளத்திற்கு நீண்ட கடலோரப்பகுதியைப் பெற்றுள்ளது. அவை, பவழப் பாறைகள், கடற்புல், சதுப்புநிலங்கள், முகத்துவாரங்கள், அலைஅடுக்ககங்கள், தீவுகள், காயல், பாறை செறிந்த கடற்கரைகள் மற்றும் மணல் நிறைந்த கடற்கரைகள் உட்பட பல பயனுள்ள உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு இடமளிக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், கடல் சார்ந்த பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சார்ந்திருத்தல், மூலவளங்களை மிகையாகப் பயன்படுத்தல், அறிவியல் சாராத மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் புயல், சுனாமி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஆகியவை கடலோரப் பகுதிகளையும், மூலவளங்களையும் நமது மாநிலத்தில் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

அறிவியல் சாராத மேம்பாட்டு நடவடிக்கைகள், பல்வேறு சுற்றுச்சூழல் சீர்குலைவுகளுக்கு வழிவகுத்துள்ளன. உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலையில் ஏற்படும் பாதிப்பானது, உலக வெப்பமயமாதல் போன்று மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதன் விளைவாக, கடல் மட்டம் உயர்கிறது; கடலோரப் பகுதிகள் மறைந்து போகின்றன. அளவுக்கும் அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன; மீன்கள் இடம் பெயர்கின்றன; அதனால் வாழ்வாதாரம், உணவு மற்றும் வருமானம் ஆகியவற்றில் இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் நீண்ட கடலோரப் பகுதியையும், இந்தப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசித்தல், முக்கியமான உயிரி சேம வனங்கள் / தாவர - விலங்கினங்களின் இயற்கை வாழ்விடங்கள் அமைந்திருத்தல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாடு அரசு கடலோரப்பகுதி மேலாண்மைக்கு உயர் முன்னுரிமை அளிக்கும்.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

1. ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மைத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, தொழிலகங்கள், சுற்றுலா மற்றும் மீன்வளங்கள் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மூலம் என்றுமே வற்றாத குறைவற்ற வளத்தைப் பெற்று விளங்குகிறது. அதே சமயத்தில், கடலோரப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையை நடைமுறைக்கு கொண்டு வருவது தவிர்க்க இயலாதது என்பதை நமது மாநிலம் ஏற்றுக் கொள்கிறது. எதிர்ப்புகளைக் குறைப்பதற்கும், அறிவிக்கையை செயற்படுத்துவதற்கும், அனைத்துப் பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் பொருத்தமானதொரு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது அவசியமான ஒன்றாகும். உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பை இழக்காமல், அதே சமயத்தில் பொருளாதார வளத்தை அடைவதற்காக, ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மைத் திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை, தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கடலோரப் பகுதி மேலாண்மைத் திட்டம் நிலை II ஆக, படிப்படியான முறையில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. கடலோர சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சார்ந்த மூல வளங்கள் குறித்த, மாதிரி திட்டத் தகவலை உருவாக்குதல் மற்றும் நாளது வரையிலாக்குதல் (அப்டேட் செய்தல்)

3. நடைமுறைக்கு சாத்தியமான கண்காணிப்பு முறையை உருவாக்குதல். இந்த கண்காணிப்பில் கீழ்க்கண்டவை அடங்கும்:

அ. அருகி வருகிற உயிரின வகைகள் மற்றும் அவற்றின் இயற்கை வசிப்பிடங்கள்

ஆ. தொழிலக மண்டலங்கள் மற்றும் பிற வளர்ச்சி மண்டலங்கள்

இ. பவழப்பாறைகள், கடற்புல் படுகைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பல்வகை தாவர- உயிரினத் தொகுதி போன்ற நீருக்கு அடியிலுள்ள ஆதாரங்கள்.

4. வேற்றுத் திணைச் செடிவகைகளை அறிமுகப்படுத்துவதற்காக, குறிப்பிட்ட வழிகாட்டிக் குறிப்புகளை அளிக்கிறபோது, பவழப்பாறைகள், கடற்புல், சதுப்பு நிலங்கள், செயற்கைப்பாறைகள், அருகி வருகிற உயிரின வகைகள் மற்றும் வணிக ரீதியாக முக்கியமான உயிரின வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கடலோர உயிரின வாழ்க்கைச்சூழல் ஏற்பாட்டைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்குதல்.

5. கடலோரப் பகுதிகளில், மூலவளங்களின் பயன்பாடு மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு உகந்த மீன்பிடிக்கும் நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக உள்நாட்டு பாரம்பரிய அறிவை வளர்த்தல்,

6. விரிவான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு, வரலாற்று ஆய்வு, உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேற்றுத்திணைச்செடி வகைகளை அறிமுகப்படுத்துவதற்காக, குறிப்பிட்ட வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்குதல்.

வனங்கள், வனவிலங்குகள் மற்றும் பல்வகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதி

தமிழ்நாடு, சுமார் 22,877 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள பதிவு செய்யப்பட்ட வனப்பரப்பைக் கொண்டுள்ளது. இது, நமது மாநிலத்தின் பரப்பில் சுமார் 1759 சதவீதமாகவும், நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட மொத்த வனப்பரப்பில் சுமார் 299 சதவீதமாகவும் உள்ளது. நமது நாட்டைச் சேர்ந்த 16 முக்கியமான வன வகைகளில் தமிழ்நாடு, சுமார் ஒன்பது வகைகளைப் பெற்றுள்ளது. இது, நமது நாட்டிலுள்ள 45,000 தாவர வகைகளுள், ஏறக்குறைய 15,000 தாவர வகைகளையும், நமது நாட்டிலுள்ள 81,000 விலங்கின வகைகளுள் சுமார் 30,000 விலங்கின வகைகளையும் நமதுவனப்பரப்பு கொண்டுள்ளது. பூக்கும் தாவர வகைகளில் 5,640 மலர்ச்செடிகளைக் கொண்ட தமிழ்நாடு, நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

நமது மாநிலத்திலுள்ள மிகவும் நீளமான மலைத்தொடரான மேற்குத் தொடர்ச்சி மலை, பல்வகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதிகளின் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இருபத்தைந்து இடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்திபாவில் உள்ள மூன்று மிகப்பெரிய திணையின மையங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. கன்னியாகுமரி, களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, முக்கூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை ஆகியவற்றின் வனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பதால், இங்கு தாவரம் மற்றும் விலங்கினங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலையும் பலவகையான வளங்களைக் கொண்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள மேட்டு நிலங்களும், நீர்வரத்துப் பகுதிகளும், மழைப் பொழிவின் போது கிடைக்கிற மழைநீரை சேமித்து வைத்து, வெள்ளங்கள் மற்றும் வறட்சிகளின் கடுமையைத் தணிப்பதற்காக, படிப்படியாக வெளியேற்றுவதன் மூலம் தாழ்வான பகுதியிலுள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பரந்த அளவிலான மிகவும் உயரமான சரிவு வாட்டம் (100 to 2600 மீட்டர் காணப்படுவதால், தமிழ்நாடு, உயரளவு தாவர வகைகளின் வளச்செறிவுக்கு பெருமளவில் இடமளிக்கிறது. தமிழ்நாடு, பல காப்பு வனங்களுடன், பதினைந்து வனவிலங்கு சரணாலயங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், நான்கு யானைகள் காப்பு வனங்கள் மற்றும் நான்கு புலிகள் காப்பு வனங்கள் என பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. உள்நாட்டு மக்கள், பல இடங்களில் இயற்கையுடன் இணைந்து, நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். புலிகள் காப்பு வனங்களில், உயிரின வாழ்க்கைச் சூழல் மேம்பாட்டுக் குழுக்களின் மூலம் இயற்கையைப் பாதுகாத்துப் பேணுவதில் மக்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில், சூழல் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம், உள்ளூர் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் வனங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்துப் பேணுதல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெட்டுமரம் மற்றும் மர விறகுக்கான மரங்களைப் படிப்படியாக அறுவடை செய்தல், அயலின திணைச்செடி வகைகளை அறிமுகப்படுத்துதல், வன நிலங்களை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாற்றிப் பயன்படுத்துதல், தோட்டப்பயிர் சாகுபடிக்காக, வனநிலங்களைக் குத்தகைக்கு விடுதல் ஆகியவை வனங்கள் அழிக்கப்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன. புரோஸோபிஸ் ஜிலிபுளோரா, அக்கேஸியா மீன்ஸி, லான்டனா கேமரா, யூபா டோரியம் வகை, யுலெக்ஸ் யூரோபாஸ், சைடிசிஸ் ஸ்கோபாரியஸ் போன்ற அயலின புதர்ச்செடிகளும், மரவகைகளும் பல இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வனம் மற்றும் வன எல்லைகளில் வசிக்கிற மக்கள், மேய்ச்சல், காட்டுத் தீ, தலைச் சுமையாக எடுத்துச் செல்லுதல், மருத்துவ மூலிகைச் செடிகளை சட்டவிரோதமான முறையில் சேகரித்தல், சிறிய வன பொருட்களை அறுவடை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் வன ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் விளைவாக வனங்களின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் குறைகிறது. வனங்களிலிருந்து மருத்துவ மூலிகைச் செடிகள் சேகரிக்கப்படுவதைப் பொறுத்த வரையில், மக்களின் நடவடிக்கை காரணமாக, தாவர - விலங்கினங்களின் இயற்கை வசிப்பிடம் மற்றும் பலவகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதிக்கு ஏற்படுகிற பாதிப்பு கவனிக்கப்படாமல் உள்ளது.

நாட்டிலுள்ள மாநில வனங்களை மேலாண்மை செய்வதற்காக, மத்திய அரசு, 1988 ஆம் ஆண்டு தேசிய வனக் கொள்கையை இயற்றியது. இக்கொள்கை, முதற்கண், அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாத உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கை, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கினையாவது வனப்பரப்பின் (எப்டிசி) கீழ் கொண்டு வந்து மரங்களை வளர்க்க வேண்டும் என்று விழைகிறது. இந்த இலக்கிற்கு மாறாக, நாட்டின் வனப்பரப்பு மற்றும் மர வளர்ப்பு, மொத்த புவியியல் பரப்பில் 24.16 சதவீதமாக மட்டுமே உள்ளது. இவ்வாறு நாட்டின் வனப்பரப்பு மற்றும் மரவளர்ப்பை அதிகரிப்பதற்காக,

நமது நாடு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமது மாநிலம், அதனுடைய அனைத்து வன மேலாண்மை முயற்சிகளிலும் தேசியக் கொள்கையின் முன்னுரிமைகளைப் பெருமளவில் பின்பற்றுகிறது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

1. பல்வகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதி மற்றும் வன மரபுவழிப் பண்பியல் ஆதாரங்களைப் பாதுகாத்துப் பேணுதல்

வனவிலங்குகளைப் பாதுகாப்பதில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நமது மாநிலம், நெல்லை வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஒசூடு ஏரி பறவைகள் உய்விடம் ஆகியவற்றை, 2014-15 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததன் மூலம் சுமார் 1608 சதுர கிமீ வனப்பரப்பை, பாதுகாக்கப்பட்ட பகுதியின் கட்டமைப்புடன் சேர்த்துள்ளது. இதனால் நமது மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பு 5,465 சதுர கிலோ மீட்டரிலிருந்து, 7,073 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. தற்சமயம், நமது மாநிலம், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பதினைந்து வனவிலங்கு சரணாலயங்கள், ஐந்து தேசியப் பூங்காக்கள், பதினைந்து பறவைகள் உய்விடங்கள் மற்றும் இரண்டு காப்பு வனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வனவிலங்கு உயிரி பரவலாக்கம் மற்றும் மரபுவழிப் பண்பு ஆதாரங்களுடன், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பை, வருங்காலத்தில், நமது மாநிலத்திலுள்ள வனப்பரப்பில் இருபத்தைந்து சதவீதமாக அதிகரிப்பதற்கு, தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றுள்ளது.

2. வளங்களுக்கு வெளியே மரவளர்ப்பை அதிகரித்தல்

வனங்களுக்கு வெளியே பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக, தனியார் நிலங்களில் மரம் வளர்த்தல், படுகை நிலங்களில் தேக்கு மரங்கள் வளர்த்தல், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகளுக்கு மரக்கன்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. செயற்படுத்தப்பட்டு வருகிற பல்வகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதி பாதுகாப்பு மற்றும் பசுமைமயமாக்கல் திட்டம் ஆகியவை தனியார் நிலங்களில் மரவளர்ப்புக்குப் பெரிதும் உதவுகின்றன. வனங்களுக்கு வெளியே மரவளர்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிற ஏரிக்கரை தோட்டங்களுக்குப் புத்துயிரளிக்கும் திட்டமும் மேம்படுத்தப்படும்.

3. வனங்களின் எல்லைப் பகுதிகளில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுதல்

வன எல்லைப் பகுதிகளில் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தைச் செயற்படுத்துதல் மற்றும் அதனை மாநிலம் முழுவதிலும் செயற்படுத்தும் வண்ணம் ஊக்குவித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் சமஅளவு வாய்ப்புகள் அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, சமுதாயம், பொருளாதாரம், அரசியல், பாலினம், தலைமுறைகளுக் கிடையிலான சமவாய்ப்பு மூலவளங்களின் பயன்பாடு, பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பல்வகை உயிரித் (விலங்கு-தாவரம்) தொகுதி தொடர்பான அறிவு மற்றும் தகவலைப் பெறுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை தொடர்பாக முடிவு எடுத்தல் ஆகியவற்றில் சமவாய்ப்பு அளித்தல் ஆகியவை வலியுறுத்தப்படும்.

4. ஏனைய நடவடிக்கைகள்

நீர்வரத்துப் பகுதி மேலாண்மையை மேம்படுத்தவும், ஒரளவு அடர்த்தியான மற்றும் திறந்த நிலைக் காடுகளின் தட்பவெப்ப நிலையில் மீட்சியை அதிகரிக்கவும், பழங்குடியினர் மேம்பாட்டை அடையவும், தற்போதுள்ள மற்றும் வருங்கால சுற்றுலாத் தலங்களின் திறனைக் கருத்திற்கொண்டு, நீடித்த வகையிலான வாழ்வாதாரங்களுக்காக, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இயற்கை ஆதாரங்களைப் பேணிப் பாதுகாத்தல், இயற்கைக் கல்வி, விழிப்புணர்வு, இடம் பெயர்ந்து செல்லாமல் தங்கள் இடத்திலேயே வாழ்கிற மக்களின் வாழ்வாதார விருப்புரிமைகள் ஆகியவை தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கையின் இன்றியமையாத அம்சங்களாக இருக்கும். மேலும், நமது மாநிலத்தில் மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் இடையே அதிகரித்து வருகிற பிரச்சனையைக் குறைப்பதற்காக, தற்போதுள்ள நிலப் பயன்பாட்டு வகைகளை (தேயிலை மற்றும் காப்பி மலைத் தோட்டங்கள், புனல் மின் திட்டங்கள் முதலியவை) அறிவார்ந்த முறையில் ஆய்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை