சுற்றுச்சூழல் கொள்கை 2017 குறித்த மறு ஆய்வு மற்றும் செயலாக்கம்

2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கையை செயல்படுத்த உதவுகிற வகையில், அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தும். தெளிவான ஆய்வு வரம்புகள், நிறுவனஞ் சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் கொள்கையில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட கூறுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட பணிக்குழுக்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு ஆதரவும், உதவியும் நல்கும். தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கத்தின் விரிவான நடைமுறைகள் தனியே வெளியிடப்படும்.

வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் அதனால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்கள், அவ்வப்போது தோன்றுகிற புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் காரணமாகப் பெரிதும் மாற்றம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது. மாற்றங்களுக்கேற்ப, குறிப்பிட்ட கால வரையறையில், நாடளாவிய மற்றும் உலகளாவிய நிலையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியத்தையும் தமிழ்நாடு அரசு அறிந்துள்ளது.

இவ்வாறாக, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை, ஒரு ஆற்றல் வாய்ந்த ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையை, நடப்பு காலத்திலும், சமகாலத்திலும், புதிய தகவல், அறிவு மற்றும் மேம்பாடுகளுடன் திகழும் வகையில், நெறிப்படுத்துவதற்காக, இது, குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை மறு ஆய்வு செய்யப்படும். முன்னுரிமைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உத்திகள், நடவடிக்கைகள். ஏதேனும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றுக்கான தீர்வுகள், தேவைப்படுகிற திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கை மற்றும் கொள்கைச் செயற்பாட்டின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்தல் ஆகியவற்றுக்காக, பலதரப்பட்ட பொறுப்பாளர்களுடன், ஐந்தாண்டுகளுக்கொரு முறை கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை