முன்னுரை

தமிழ்நாடு மாநிலம், நாட்டின் தெற்குப் பகுதியில் 8°5’ - 13° 35’ க்கு இடைப்பட்ட வடக்கு அட்ச ரேகையிலும், 76°15' - 80°20'க்கு இடைப்பட்ட கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது. 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு, நாட்டின் பெரிய மாநிலங்களின் வரிசையில் பதினோராவது மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு, 32 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. 1076 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய கடற்கரை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும் தென்கோடி முனையில் அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலை இணைக்கும் கன்னியாகுமரி நகரமும் அமையப்பெற்றுள்ளது.

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 72.1 மில்லியன் ஆகும். இது, இந்திய மக்கள் தொகையில் 5.96 விழுக்காடாகும். தேசிய அளவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 382 நபர்கள் என்ற அளவையும் விஞ்சி, 1 சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் வசிக்கிற வகையில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கொண்டுள்ள தமிழ்நாடு மாநிலம், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் வரிசையில் ஏழாவது இடத்தை வகிக்கிறது. மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 11விழுக்காடு, அதாவது 13,755 சதுர கிலோ மீட்டர் நகர் பரப்பில், 35 மில்லியன் மக்கள் வசிக்கிற தமிழ்நாடு, இந்தியாவிலேயே பெரிய நகர்ப்புற மாநிலமாகத் திகழ்கிறது.

பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி பெற்று வருவதால், தமிழ்நாடு மாநிலம், இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவதில் இடர்ப்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் எதிர்நோக்கும் நிலையில் உள்ளது. எனவே, அவற்றை நீடித்த முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தேசிய சராசரி அளவிற்கும் அதிகமாக தொழில் வளர்ச்சிக்கு முனைப்பு காட்டும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் அதன் பாரம்பரியத்தையும் பேணுவதற்கும் தமிழ்நாடு ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையில் சமநிலையை உறுதிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ன் நோக்கத்தினை அறிந்து கொள்ளவும், சுற்றுச்சூழலின் நீடித்த நிலைப்பாட்டுக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கொள்கை 2017 முக்கியத்துவம் அளிக்கும்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் அதனால் பயன்பெறுவதை உறுதி செய்கிற அதே வேளையில், தமிழ்நாட்டை, பெருமளவிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் ஊக்கத்துடன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை, இந்தியாவிலேயே வறுமையற்ற மாநிலமாகவும், வளமும், முன்னேற்றமும் செறிந்த ஒரு மாநிலமாகவும் மாற்றி, தமிழ்நாடு மாநில மக்கள், ஒரு நவீன சமுதாயத்தின் அனைத்து அடிப்படை வசதிகளையும் துய்த்து, சுற்றுச்சூழலுடனும், உலகில் ஏனைய பகுதியில் உள்ளவர்களுடனும் ஒத்திசைவான முறையில், நல்லிணக்கத்துடன் சிறப்பாக வாழும்படி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 விழைகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், நாட்டின் வளங்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச்சட்டம், பிரிவு 48ல், வரையறுத்துள்ளதைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு, அதனுடைய உயிரின வாழ்க்கைச் சூழலின் ஆதாரச் சுவடு மற்றும் சுற்றுச்சூழல் ஆதாரங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்துப் பேணுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த இந்தக் கடமையை கருத்திற் கொண்டு, மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர். ஜெ ஜெயலலிதா அவர்கள், 2012 மார்ச் திங்களில் அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல், "வளமான பாரம்பரியத்தை வளர்த்தல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்துப் பேணுதல்” என்ற உயரிய நோக்கத்தை, தொலைநோக்கு திட்டத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாகத் தெரிவு செய்தது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பேணுதல், சாத்தியமாகிற இடங்களில் சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்தி, மாநிலத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை வளர்த்தலும் தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023 ன் ஓர் இன்றியமையாத அம்சமாக உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பேணுவதில், மக்களின் நடவடிக்கை சார்ந்த உயிரின வாழ்க்கைச் சூழலின் முழு ஆதாரச்சுவடும் அடங்கியிருக்கும். மேலும், "வனப்பரப்பை அதிகரித்தல், சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், நிலத்தடிநீர், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழல் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைப் பாதுகாத்தல், மாநிலத்தின் விலங்கினம் மற்றும் தாவர இனப் பரவலாக்கத்தைப் பாதுகாத்தல், மக்களின் நடவடிக்கை காரணமாக மண் மற்றும் பிற இயற்கை உருவாக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாத்தல், திடக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உறுதி செய்து, அவற்றை செம்மையான முறையில் மறு சுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைத்தல், பொதுவாக, மாநிலம் முழுவதிலும் உயிரின வாழ்க்கைச்சூழல் சமன்பாட்டைப் பராமரித்தல் ஆகியவற்றையும் உட்கொண்டிருக்கும்" எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த உத்தி, நீடித்த நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தினை முற்றிலும் உணர்ந்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் கொள்கை, சுற்றுச்சூழல் சீரழிவானது, மக்களின் வறுமையை அதிகரித்து, அதை நிலைக்கச் செய்வதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு மனிதர்களின் உடல்நலத்தை பாதிப்பதுடன், சமூக மேம்பாட்டுப் பணிகளையும் பாதிக்கிறது. மேலும், 2006 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கை, நிறுவனஞ்சார்ந்த கொள்கை சார்ந்த தோல்விகள் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் (பருவநிலை மாற்றம், ஓசோன் ஆற்றலைக் குறைத்தல், பல்வகை உயிரினப் பரவலாக்கத்தில் ஏற்படுகிற இழப்பு உட்பட) ஆகியவற்றால் ஏற்படுகிற சவால்களை எதிர்கொண்டு, அவற்றுக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழலை செம்மையான முறையில் மேலாண்மை செய்வதற்குரிய நோக்கங்கள், கொள்கைகள், உத்திகள் மற்றும் நடவடிக்கைகளைத் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கையானது, பொதுவாக, சுற்றுச்சூழல் குறித்த சவால்களைப் பிரதிபலித்து, அவற்றை எதிர்கொள்வது பற்றிய பயனுள்ள அடித்தளத்தை கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநிலத்திற்கே உரித்தான குறிப்பிட்ட சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் வகையிலும், ஒரு முழுமையான கொள்கைக் கட்டமைப்பை வகை செய்வதற்காகவும், இது போன்ற குறிப்பிட்ட மாநிலத்தை நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. சுற்றுச்சூழல் என்பது, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் முகவரமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தொழிலகம், கல்வி நிறுவனங்கள், குடிமையியல் சமுதாயம் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரின் பொறுப்பேற்பு மற்றும் கவனம் தேவைப்படுகிற ஒர் இன்றியமையாத பொருண்மையாக உள்ளது. அதற்கிணங்க, இக்கொள்கை தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் முகவரமைப்புகளால் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் கீழ் வருகிற சுற்றுச்சூழல் குறித்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கிறது. மேலும், தொழிலகம், கல்வி நிறுவனம், குடிமையியல் சமுதாயம் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்தாலோசனைகளின் போது வெளியிடப்பட்ட கருத்துரைகளை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலித்து, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்குவதில் அவற்றை சேர்த்துக் கொண்டுள்ளது.

நோக்கங்கள்

2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கையின் நோக்கங்கள்

1. தற்காலத்திலும், வருங்காலத்திலும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் தேவைகளையும், விருப்பார்வங்களையும் நிறைவு செய்வதற்கு இன்றியமையாத குடியிருப்பு, வாழ்வாதாரம், வாழ்க்கைப்பிழைப்பு, பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தரம் மற்றும் உடல் நலம் ஆகியவற்றை அறிவார்ந்த முறையிலும், சமஅளவிலும் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், சுற்றுச்சூழல் மூலவளங்களைப் பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் புதுப்பித்தல்.

2. வறுமை தணிப்பு, உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சி, சமுதாய நலன் உட்பட பிற ஆக்கபூர்வமான மேம்பாட்டு விளைவுகளை அடைகிற அதே சமயத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை கொள்கையாக உருவாக்கி, சுற்றுச்சூழல் ரீதியாக, நீடித்த முறையில், மேம்பாட்டுத் திட்டங்களையும், திட்டப்பணிகளையும் திட்டமிட்டு, செயற்படுத்துவதன் வாயிலாக, சுற்றுச்சூழல் நலன் சார்ந்த திட்டங்களை, மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்.

3. பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் மற்றும் குறிப்பிட்ட மாநிலத்தை நோக்கமாகக் கொண்டு அதன் இடர்கள் மற்றும் தாக்கங்கள் ஆகியவற்றின்படி தெரிவு செய்யப்பட்ட முன்னுரிமைகளைக் கருத்திற்கொண்டு, பருவநிலை மாற்றம் குறித்த தாக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைப்பது / குறைப்பது தொடர்பான அமைப்புகளை உருவாக்கி செயற்படுத்துவதற்காக, முறையான அணுகுமுறை ஒன்றின் வாயிலாக, பருவநிலை மாற்றம் குறித்த தாக்கங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தநிலையை மேம்படுத்துதல்.

4. விரிவான கொள்கை கட்டமைப்புடைய திறமையான, செம்மையான, தனிப்பட்ட மற்றும் பதில் சொல்லும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கி, சுற்றுச்சூழல் ஆளுகை மற்றும் நிறுவனம் சார்ந்த திறனை மேம்படுத்துதல். இது,

(1) சுற்றுச்சூழல் சார்ந்த சட்டம், கொள்கை, தரங்கள் மற்றும் பாதுகாப்புகளைக் கண்காணித்தல் மற்றும் செயற்படுத்துதல்

(2) சுற்றுச்சூழல் குறித்து திட்டமிடல், நிருவகித்தல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தெளிவான, வெளிப்படையான, பங்கேற்கும் தன்மை கொண்ட செம்மையான வழிமுறைகளை செயற்படுத்துதல் மற்றும்

(3) ஆக்கபூர்வமான மேம்பாட்டை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டிய சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை உடைய திட்டங்கள், திட்டப்பணிகள் மற்றும் முதலீடுகளைச் செயல்படுத்துவதற்கு உகந்த முதலீட்டுச் சூழ்நிலையை உருவாக்குதல்

முக்கிய அம்சங்கள்

2006 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பதினான்கு அம்சங்களைக் கருத்திற்கொண்டு, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன:

(1) நீடித்த வளர்ச்சிக்காக, மக்களின் நலனில் அக்கறை காட்டுதல்

(2) தலைமுறையினருக்கிடையேயும், தலைமுறையினருக்குள்ளாகவும் சம வாய்ப்பினை உறுதி செய்கிற அதே வேளையில், வளர்ச்சிக்கான உரிமையையும் பெறுதல்

(3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மேம்பாட்டு நடைமுறைகளின் ஓர் இன்றியமையாத பகுதி என்பதை உறுதி செய்தல்

(4) சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகிற அச்சுறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது, முன்னெச்சரிக்கை அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துதல்

(5) மாசு ஏற்படுத்துவோர் பாதிப்பிற்கான தொகையை செலுத்துதல் மற்றும் செலவு குறைப்புக் கொள்கைகளை அங்கீகரிக்கிற போது, பொருளதார திறனை உணர்ந்து கொள்ளுதல்

(6) ஒப்பீடு செய்ய இயலாத மதிப்புகளைக் கொண்டவற்றுக்கு முன்னுரிமை அளித்தல்

(7) சுற்றுச்சூழல் மூலவளங்களை பயன்படுத்துவது குறித்து முடிவெடுப்பதில் தொடர்புடைய மக்கள் பங்கேற்பதற்கு சம உரிமையளித்தல் மற்றும் அம்மக்களைப் பங்கேற்கச் செய்தல்

(8) சட்டரீதியான பொறுப்பு குற்றவியல் பொறுப்பு மற்றும் உரிமையியல் பொறுப்பு அணுகுமுறைகள்

(9) சட்டப்படியான நலன்கள் மற்றும் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான நியாயமான நிபந்தனைகளுக்குட்பட்டு, மூலவளங்களின் முழுமையான உரிமையாளராக இல்லாமல், அவற்றின் காப்பாளராக விளங்குவதற்கான பொதுமக்கள் நம்பிக்கை கோட்பாடு

(10) அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்

(11) துறை சார்ந்த கொள்கையை உருவாக்குவதில், சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை ஒருங்கிணைத்தல்

(12) தொடர்புடைய சுற்றுச்சூழல் தரங்களை உருவாக்குதல்

(13) தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும்

(14) மக்கள் நலனைப் புறக்கணிக்கிற விதிவிலக்கான காரணங்களினால், சுற்றுச்சூழலில் ஏற்படுகிற தாக்கத்தைத் தணித்தல் மற்றும் அவற்றை ஈடு செய்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை