அறிமுகம்

வீடுகளில் வழங்கப்படும் மின் இணைப்புகளில் ஒருமுனை மின்சாரம், மும்முனை மின்சாரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. இவை ஆங்கிலத்தில் ‘சிங்கிள் பேஸ்’, ‘த்ரீ பேஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒருமுனை மின்சாரம்

பொதுவாக வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பே அளிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து ஒரு சுற்று வழியாக வழங்கப்படும் மின்சாரம் ஒருமுனை மின்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு மாறுமின்சாரம் என்ற பெயரும் உண்டு. நொடிக்கு 50 தடவை நேர்முனை, 50 தடவை எதிர்முனை என்று மாறி மாறி வருவதால் ஒருமுனை மின்சாரத்திற்கு இந்த பெயர் வந்தது.

மும்முனை மின்சாரம்

இதற்கு மாற்றாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மூன்று சுற்றுகளின் வழியாக அளிக்கப்படும் மின்சாரம் மும்முனை மின்சாரம் என அழைக்கப்படுகிறது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவையும் தேவையையும் பொறுத்து ஒருமுனை அல்லது மும்முனை மின்சாரத்தை தேர்ந்தெடுக்கலாம். 4000 வாட் வரையிலான மின் தேவைக்கு ஒருமுனை மின்சார இணைப்பே போதுமானது. இந்த அளவைக் காட்டிலும் கூடுதலான மின்சாரம் தேவைப்பட்டால் மும்முனை இணைப்பை பெறுவதே சரியானது.

தடையில்லாத மின்சாரம்

வீடுகளின் மின் தேவைக்காக அளிக்கப்படும் ஒருமுனை மின்சாரத்தில் இடையிடையே மின் தடங்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தடையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் வீட்டில் மும்முனை இணைப்பை பயன்படுத்தலாம்.

மின்சாரம் அளிக்கப்படும் மூன்று முனைகளில் எந்த முனையில் மின்சாரம் வருகிறதோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அதற்கான மின் இணைப்பில் தேவையான விசை அமைப்பினை பொருத்திக்கொள்ள வேண்டும்.

மின்னோட்ட வேறுபாடு

வீடுகளில் உள்ள மின் இணைப்புகளில் ஒரே அளவில் மின்சாரம் வருவதில்லை. சில சமயங்களில் வீட்டில் உள்ள பெரும்பாலான மின்சாதனங்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படலாம். அப்போது மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் மின் சாதனங்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

மின்னோட்ட மாறுபாட்டினால் மின் சாதனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மின் இணைப்போடு ‘எர்த்’ கம்பி மற்றும் ‘பியூஸ்’ ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

மெயின் சுவிட்சு

மின்னோட்டத்தில் அதிக அளவு மின்சாரம் வரும்போது ‘பியூஸ்’ இணைப்பில் உள்ள கம்பிகள் உருகிவிடும். இதனால் அதிக அளவு மின்சாரம் வருவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. மேலும் ஒரு விசையை இயக்கி மின்னோட்டத்தை தடுக்கும் வகையில் மெயின் சுவிட்சும் இணைக்கப்படுகிறது.

பியூஸ் மற்றும் மெயின் சுவிட்சு இணைப்புகளை சுவரில் மிகவும் உயரமாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ அமைக்கக்கூடாது. எளிதில் பயன்படுத்தும் வகையில் அவற்றை அமைப்பதே சிறந்தது.

ஒருமுனை இணைப்புக்கு ஒரு மெயின் சுவிட்ச், மும்முனை இணைப்புக்கு மூன்று மெயின் சுவிட்சுகள் அமைக்கப்படும்.

இந்த மெயின் சுவிட்சு அமைப்புதான் வீட்டுக்குள் வருகின்ற மின்சாரத்தை வரவேற்கும் வாசற்படியாக அமைந்துள்ளது

ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்