2022-23 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றான பயோமாஸ் கோ-ஃபைரிங் (Biomass Co-firing), இந்தியாவை டிகார்பனைசேஷனை (Decarbonization) நோக்கி செலுத்தும் என நம்பப்படுகிறது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment), "Reducing CO2 Footprints of India's Coal-Based Power" என்ற தனது அறிக்கையில் இந்தத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பயோமாஸ் துகள்கள் என்பது பொதுவாக மரக்கழிவுகள், விவசாய உயிர்ப் பொருட்கள் மற்றும் வனவியல் எச்சங்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான உயிரி எரிபொருள் ஆகும். பயோமாஸ் கோ-ஃபைரிங் என்றால் என்ன? பயோமாஸ் கோ-ஃபைரிங் அல்லது உயிரிப் பொருட்கள் இணை சுடுதல் என்பது நிலக்கரி வெப்ப ஆலைகளில் எரிபொருளின் ஒரு பகுதியை பயோமாஸுடன் மாற்றும் நடைமுறையாகும். புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உமிழ்வைக் குறைக்கவும், இந்தியாவின் வளர்ந்து வரும் விவசாயக் கழிவுகளை எரிக்கும் பிரச்சனையை ஓரளவு தீர்க்கவும், கழிவுச் சுமையை குறைக்கவும், கிராமப்புறங்களில் வேலைகளை உருவாக்கவும் இது உதவும். மத்திய மின்துறை அமைச்சகம் சமீபத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு அனல் மின் நிலையத்திலும் 5-10 சதவீதம் உயிரி எரிபொருள் இணை சுடுதல் நடத்துவதை கட்டாயமாக்கியது. இவ்வாறு செய்வதன் மூலம், ஆண்டுக்கு 38 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். சவால்கள் பயோமாஸ் பயன்பாடு குறித்த மின் அமைச்சகத்தின் கொள்கையின்படி, 7% கோ-ஃபரிங்கில் ஒவ்வொரு ஜிகாவாட் திறனுக்கும் கிட்டத்தட்ட 0.25-0.3 மில்லியன் டன்கள் பயோமாஸ் துகள்கள் தேவைப்படுகின்றன. எனவே, 100 ஜிகாவாட் திறனுக்கு, கிட்டத்தட்ட 25-30 மில்லியன் டன்கள் பயோமாஸ் துகள்கள் தேவைப்படும். பெரிய அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் உயிரியின் அளவு நிலக்கரியை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய அளவிலான உயிர்ப்பொருளைக் கொண்டு வந்து சேமித்து வைக்க உள்கட்டமைப்பு மாற்றமும் தேவை. அனல் மின்நிலையங்களில் நிலக்கரியுடன் இணைந்து பயோமாஸைச் சுட வேண்டும் என்ற மத்திய மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைச் செயல்படுத்துவதில் சமீபகாலமாக, விவசாய எச்சங்களின் உயிரித் துகள்கள் கிடைக்காதது ஒரு தடையாக வெளிப்படுகிறது. மத்திய மின் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ‘நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு உயிர்ப்பொருளைப் பயன்படுத்துவதற்கான தேசிய இயக்கம்’ படி, ஒரு நாளைக்கு சுமார் 95,000-96,000 டன் பயோமாஸ் துகள்கள் இணை சூட்டுக்கு தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 228 மில்லியன் டன் விவசாய எச்சங்கள் உபரியாக இருந்தும், ஒரு நாளைக்கு 7,000 டன் பெல்லட் மட்டுமே உற்பத்தி திறன் உள்ளது. இந்தத் தேவை-விநியோக இடைவெளி கடந்த இரண்டு மாதங்களில் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏனென்றால், பெல்லட் சப்ளையர்கள், நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் விலையான 8-9 ரூபாய்க்கு வழங்குவதற்குப் பதிலாக, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், உலோகம் சார்ந்த தொழில்கள் அல்லது வெளிச்சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ. 12-13க்கு தங்கள் தயாரிப்புகளை விற்க விரும்புகிறார்கள். முக்கியமாக, துகள்கள் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இணை சூடுதல் நடத்தும் இந்த வணிக மாதிரியில் விவசாயிகளுக்கு உள்ளார்ந்த பங்கு இருப்பதை உறுதி செய்ய தளங்கள் நிறுவப்பட வேண்டும். பயோமாஸ் இணை சூடுதலின் தற்போதைய நிலை ஜூலை 24, 2022 வரை 55,335 மெகாவாட் மொத்த திறன் கொண்ட, நாட்டில் உள்ள 35 அனல் மின் நிலையங்களில் சுமார் 80,525 மெட்ரிக் டன் உயிரி எரிபொருளை இணைத்து எரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருட கால இடைவெளியில் உயிரிகளை இணைக்கும் ஆலைகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றில் 14 ஆலைகள் என்டிபிசிக்கு (NTPC) சொந்தமானவை என்றாலும், அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 21 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. மின்சார அமைச்சகம், நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலையங்களில் உயிரிப்பொருட்களை பயன்படுத்துவதற்கான தேசிய பணியை (SAMARTH என மறுபெயரிடப்பட்டது) அறிமுகப்படுத்தியது, இது அனல் மின்நிலையங்களில் உள்ள உயிரி கழிவுகளை இணைத்து சுடுவதற்கு வழங்குகிறது, இது பசுமை மின் உற்பத்திக்கான வாய்ப்பாக மாற்ற முயற்சிக்கிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு வருமானம் ஈட்டும் வழியாகவும் இது அமைகிறது. இத்தேசிய பணி, தற்போது சுமார் 70-80 பெல்லட் உற்பத்தியாளர்களின் பட்டியலை மின் உற்பத்தி நிலையங்களுடன் பகிர்ந்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறை சூழ்நிலையை எதிர்கொள்வதால், உயிர்ப்பொருளின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பயோமாஸ் துகள்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எனவே, பயோமாஸ் துகள்களை இணைத்து சுடுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கலப்பதை ஒப்பிடும் போது மின் பயன்பாடுகளுக்கான சிக்கனமான விருப்பமாகவும் மாறியுள்ளது. இது பயோமாஸ் பெல்லட் உற்பத்தித் துறைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை மின் உற்பத்தி மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு தீர்வாக இத்திட்டம் அமையும். தொழில்துறையின் தனியார் மற்றும் பொதுத் துறைகளுடன் விவசாயிகளின் பங்கேற்புடன், அனல் மின் உற்பத்தியில் பயோமாஸ் கோஃபைரிங் மற்றும் கார்பன் கால்தடம் குறைப்பு ஆகியவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று இது உணர்த்துகிறது. குறிப்பு: SAMARTH என்றால் Sustainable Agrarian Mission on use of Agro Residue in THermal power plants ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்