மின் விளக்கு அமைப்புகள்

தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.

எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.

வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.

அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.

வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில் மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.

சாதாரண குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல் விளக்குகளைப் பயன்படுத்தவும்.

சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.

குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக் சோக்குகளை உபயோகிக்கவும்.

பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய 5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.

அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின் மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவை மின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.

மின்விசிரி

குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.

மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது.

மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.

மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.

மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.

கிரைண்டர்

மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.

கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும் உபயோகிக்கவும்.

கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில் அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.

குளிர்சாதனக் கருவி

அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும்.

குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன் தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.

பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்த எரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.

இஸ்திரி பெட்டி

தினமும் ஒன்றிரண்டு துணிகளை "அயர்ன்" செய்வதை தவிர்த்து, ஒரே நேரத்தில் மொத்த துணிகளை "அயர்ன்" செய்யவும்.

குளிர்பதனப் பெட்டி

குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.

குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடி திறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்பநிலைக்கு கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.

குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.

மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கி பயன்படுத்துதல் வேண்டும்.

குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.

நீர் ஏற்றும் பம்பு

மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.

சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.

குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.

தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை தெரிவிக்கும் / கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.

நீர் சூடேற்றி

குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.

வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும்.

கணினி

பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினை வீணடிக்கிறது.

கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை செலவழிக்கிறது.

தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர் மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.

திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.

ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்