அறிமுகம்

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் என்பதில் இருந்து தோன்றியது.

‘ஆம்பர்’ எனும் பொருள் துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறு சிறு துண்டு காகிதங்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600ல் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். உண்மையில் மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் வோல்டா என்பவர் தான். மின்சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் செல்லை முதன் முதலில் அவர் அறிமுகம் செய்தார். எலெக்ட்ரிக் செல் உருவான பிறகு மின்சக்தியில் இருந்து வெப்பசக்தி, ஒளிசக்தி மற்றும் காந்த விளைவுகளை பெறமுடிந்தது.

வளர்ச்சி

வோல்டா கண்டுபிடித்த செல்லில் ஒரு துத்தநாக தகடும், ஒரு தாமிரத் தகடும் நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கி இருக்குமாறு வைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளை இணைத்தால் மின்சக்தி கிடைத்தது. பிறகு இந்த செல் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டது.

மின்சாரத்தை பொருத்தவரை 1831-ல் மிகவும் புரட்சிகரமான செயலை செய்தவர் மிக்கேல் பாரடே என்பவர். ஒரு காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகிறது என்பதை அவர் கண்டு வெளியிட்டார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன.

1867-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முதன் முதலாக வெற்றிகரமாக டைனமோ என்ற ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்சார மோட்டார்களும், டிரான்ஸ் பார்மர்களும் உருவாக்கப்பட்டன.

19-ம் நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் சில பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. 1858-ல் அமெரிக்கவால் அருவியை பயன்படுத்தி டர்பைன்களை சுழலச் செய்து அதன் மூலம் மின்சக்தியை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் நீர் மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.

20-ம் நூற்றாண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்சமயம் சூரிய சக்தி மூலம் முழுமையான மின்சக்தியை பெறுவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

ஆதாரம்: தினந்தந்தி நாளிதழ்