வைக்கோல் பெட்டி, என்ற எளிய குறைந்த செலவிலான எரிபொருள் சேமிப்பு சாதனத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மனையியல் விரிவாக்கத் துறை (மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை) உருவாக்கியுள்ளது.இப்பெட்டியில், வெப்பம் உள்ளிருந்து வெளியேறுவது தடுக்கப்பட்டு வெப்ப ஆற்றல் சேமிக்கப்பட்டு, உணவு பொருட்களைச் சமைப்பதற்கும், சூடு ஏற்றுவதற்கும் உதவுகிறது.வைக்கோல் பெட்டியில், உள்ளுரில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் உமி போன்ற வேளாண் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுகிறது.

வைக்கோல் பெட்டி வடிவமைத்தல்

தேவையான பொருட்கள்

பெட்டியின் அளவு: நீளம்:45செமீ, அகலம் :45செமீ, உயரம் : 45 செமீ. மரப்பெட்டி, கார்ட்போர்டுபெட்டி,மூங்கில்கூடை,சிமெண்ட்தொட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

வெப்பம் கடத்தா பொருட்கள் (வெப்பம் வெளியேறுவதை தடுப்பதற்காக): வைக்கோல் /நெல்உமி /மரத்தூள்

சணல் சாக்கு பை

வடிவமைத்தல்

கார்ட்போர்டு பெட்டியை தயாராக வைக்கவும்

பெட்டியில் வைக்கோல் நிரப்பவும்

பெட்டியின் அளவைப்போல் உள்ள சணல் பையில் வைக்கோல் நிரப்பவும்

சமைக்கும் முறை (உதாரணம் - அரிசி)

கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும்

10 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும்

வைக்கோல் பெட்டியின் நடுவில் பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடத்தை ஏற்படுத்தவும்

அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியில் வைக்கவும்.

பெட்டியை வைக்கோல் நிரப்பிய சணல் பை கொண்டு மூடிவைக்கவும்.

வைத்த 45 நிமிடத்திற்குள் அரிசி நன்கு சமைக்கப்படும் (5-6 மணிநேரம் வரை சூடாக இருக்கும்)

நன்மைகள்

பாதுகாப்பானது, கையாளுவதற்கு எளியமுறை.

குறைந்த செலவு

சுலபமான பராமரிப்பு முறை

சமைப்பதற்கு குறைவான நேரமே ஆகிறது.

வெப்பநிலை பராமரிப்பு:தேவைப்படும் வெப்ப அளவை 6 மணிநேரத்திற்கு தக்க வைக்க முடியம். சமைக்கப்பட்ட அரிசியை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5 மணி நேரம் வரை வைக்கோல் பெட்டியில் வைக்கும் போது பராமரிக்கலாம். ஆனால் வெளியில் வைக்கும்பொழுது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே பராமரிக்க முடிகிறது

உயர்தர உணவு வகைகள்: இம்முறையில் தயாரிக்கப்படும் உணவு, மற்ற முறையில் சமைக்கப்படுவதைக் காட்டிலும், மணம், நிறம், பதம், சுவை ஆகியவற்றில் நல்ல தரம் வாய்ந்ததாக உள்ளது

குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்பு: சமைக்கப் பயன்படுத்தப்படும் நீர் முழுமையாகபயன்படுத்தப்படுவதால், குறைந்த அளவு ஊட்டச்சத்தையே இழக்கிறோம்

மூலப்பொருட்களை சேமிக்க முடிகிறது

இம்முறையில், எரிபொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதார கேடுகளையும் தடுக்க முடிகிறது. 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது

மூலம்: மனையியல் விரிவாக்கத் துறை, மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், மதுரை- 625104