இயற்கையில் உயிரினங்களின் பல்வகை பல்லுயிர் பெருக்கம் (அல்லது) உயிரினப் பல்வகை என்பது பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரின வகைகளின் தொகுப்பாகும். இதில் தாவரங்கள், விலங்குகள், பூச்சியினங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் அடங்கும். பல்லுயிர் பெருக்கம் ஒரு குறிப்பிட்ட சூழலமைப்பின் நிலையான வளர்ச்சிக்கும், பூமியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கும் அவற்றின் ஒருமைப்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாதாகிறது. பல்லுயிர் பெருக்கத்தின் வகைகள் பல்லுயிர் பெருக்கத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை மரபு வழி பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை மற்றும் சூழல்நிலையும் பல்வகை என்பவையே. மரபுவழி பண்பில் பல்வகை: இனப்பெருக்த்தின் மூலமாக கோடிக்கணக்கான உயிரினங்கள் உருவாகின்றன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட வகையிலடங்கும் தனித்தனி உயிரினங்களுக்கிடையிலான மரபணுத் தொகுப்பிலேற்படும் வேறுபாடுகளே “மரபுவழிப்பண்பில் பல்வகை” என அழைக்கப்படுகின்றது. சிற்றினங்களில் பல்வகை: சிற்றினங்களிலுள்ள பல்வேறு வகைகளைக் குறிப்பது சிற்றினப் பல்வகை ஆகும். இவ்வுலகில் 5 முதல் 50 மில்லியன் வகையான சிற்றினங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சுமார் 1.4 மில்லியன் சிற்றின வகைகளைப்பற்றி மட்டுமே முழுமையாக கண்டறியப்பட்டுள்ளது. மரபணுத் தொகுப்பில் மாறுபாடுடைய சிற்றினங்களுக்கிடையே இனப்பெருக்கத் தொடர்பு கிடையாது. மிக நெருக்கமான தொடர்புடைய சிற்றினங்களின் மரபணுத் தொகுப்பில் மிகக்குறைவான சதவீதமே மாற்றங்கள் உள்ளன. உதாரணமாக மனிதன் மற்றும் சிம்பன்சி வகை குரங்குகளிலுள்ள மரபணு அமைப்பு 98.4% ஒரே மாதிரியாகவே உள்ளது. சூழ்நிலை அமைப்பில் பல்வகை: பல்வேறு வகையான வாழிடங்கள், பல்வகை சிற்றினத் தொகுதிகள், பல்வகை உயிர் சூழல் மண்டலங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கியது. சூழலமைப்பு என்பது அதன் தட்பவெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியமைப்பு அனைத்தும் பொருத்தே அமைகின்றது. உலகில் பலவகையான சூழலமைப்புகள் உள்ளன. சீதோஷண நிலை மாற்றங்கள் குறிப்பிட்ட சூழலமைப்பில் வளரும் தாவரங்களின் வகைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. உதாரணமாக மிதமான தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளில் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது இயற்கையாக அங்குள்ள அடர்ந்த தாவரத் தொகுப்புகள் மற்றும் புல்வெளிகள் போன்றவை கல்லி வகை தாவரங்கள் மற்றும் முட்கள் நிறைந்த செடிகளால் இடமாற்றம் செய்யப்படுகின்றன. சூழலுக்கு ஏற்றவாறு தகவமைப்புகளை மாற்றிக் கொள்ளும் திறம் பெற்ற உயிரினங்களே ஒரு குறிப்பிட்ட சூழலமைப்பில் முதன்மை பெற்று விளங்குகின்றன. பவளப்பாறை, புல்வெளிகள், ஈரபுலங்கள், பாலைவனங்கள், சதுப்புநிலக்காடுகள் போன்றவை சில முக்கிய சூழலமைப்புகளாகும். இந்தியா - பல்லுயிர் பெருக்க வளம் மிகுந்த ஒரு நாடு உலகிலுள்ள பல்லுயிர் பெருக்க வளம் மிகுந்த 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதற்கு ஆதாரமாக கீழே கொடுக்கப்பட்ட இரண்டு காரணிகளைக் கூறலாம். பல்வேறு வகையான காலநிலை மண்டலங்களை கொண்டுள்ள காரணத்தால் வெவ்வேறு விதமான உயிரினங்கள் இயற்கையில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் அந்தந்த பகுதிக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களை கொண்டுள்ளன. இவ்வகை உயிரினங்களை உலகின் வேறு எந்த பாகத்திலும் காணமுடியாது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிக அளவிலான சிற்றினங்களைக் கொண்ட நாடாகக் திகழ்கின்றது. இந்தியா மாபெரும் தேசமாக விளங்குவதோடு பலதரப்பட்ட சீதோஷ்ணநிலை மற்றும் புவியமைப்புப் காணப்படுவதால் இங்கு பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. உலகின் 2% நிலபரப்பே இந்தியாவில் உள்ளபோதிலும் உலகிலுள்ள 6% வனவுயிர் இங்கு காணப்படுவதால் பல்லுயிர் பெருக்க ரீதியாக இந்தியா அதிமுக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் 10 உயிர்பரவல் மண்டலங்களும் 26 உயிர்பரவல் மாகாணங்களும் உள்ளன. டிரான்ஸ் இமயமலைப் பகுதி இப்பகுதி உலர்ந்த காற்றுடன் கூடிய குளிர் மிகுந்த பகுதியாகும். (கடல்மட்டத்திற்கு மேல் 4500-6000 மீட்டர் வரை). மலைகளும் பனிப்பாறைகளும் நிறைந்து காணப்படும் இங்கு உயர்ந்த மலைகளில் வளரும் அல்பைன் வகை தாவரயினங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. காட்டு ஆடுகள், இமயமலை வரையாடு, பனிசிறுத்தை, பளிங்குப்பூனை, கருங்கழுத்து கொக்கு போன்ற விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றன. இமயமலைப் பகுதி உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் இங்கு பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது. தட்பவெப்பநிலையும் தாவரங்களும், விலங்கினங்களும் மலைப்பகுதியின் உயரங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. இமயமலையின் கிழக்கு பகுதியில் வெப்ப மண்டல மழைக்காடுகளும் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் அடர்ந்த மித வெப்பமண்டல அல்பைன் காடுகளும் உள்ளன. இமயமலை அடிவாரத்தில் ஏராளமான ஆர்கிட்வகை தாவரங்கள் காணப்படுகின்றன. இமய மலையின் கிழக்கு சரிவு பகுதியில் ரோடோடென்ரான் என்னும் தாவரயினம் காணப்படுகிறது. இங்குள்ள விலங்கினங்கள் பல்வேறு தகவமைவுகளை பெற்றுள்ளன. கடமான் மற்றும் குரைக்கும் மான் இனங்கள் இமயமலையின் அடிவார பகுதியில் காணப்படுகிறது. இமாலய வரையாடு, பனிச்சிறுத்தை, பழுப்பு கரடி போன்ற விலங்கினங்கள் அல்பைன் பகுதியில் காணப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதால் இங்கு காணப்படும் மாமிச உண்ணிகள் தற்போது அழியும் தருவாயில் உள்ளன. பாலைவனப் பகுதி வெப்பமண்டல முட்புதர் காடுகளும், வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளும் இங்கு காணப்படும் இயற்கையான தாவரயினங்களாகும். மணற் குன்றுகளும் முகத்துவாரப் பகுதிகளில் தற்காலிமாக உருவாகும் உப்புச்செரிவு மிகுந்த சதுப்புநில தாவரங்களும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் சீவன் வகை புல்நிறைந்த பகுதி பாலி என்று அழைக்கப்படுகிறது. பாலைவனங்களில் அனைத்து முக்கிய பூச்சியினங்களும் காணப்படுகின்றன. 43 வகையான ஊர்வனங்களும் பாலைவனப் பகுதிக்கே உரித்தான சில பறவையினங்களும் இங்கு காணப்படுகிறது. பாலைவனங்களில் காணப்படும் முக்கிய பாலூட்டி இனமான வெளிமான் தற்போது ஒருசில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஃகேசல் என்னும் இந்திய மான் இனத்தில் பெண் மானும் கொம்பை பெற்றிருக்கும். இவை இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. நில்கை இந்தியாவின் பெரிய ஆன்ட்டிலோப் மான் இனம் மற்றும் காட்டுக் கழுதைகள் தற்போது குஜராத்தின் கட்ச் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் பூநாரையின பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பாலைவன நரி, இந்திய வரகு கோழி, சிங்காரா காட்டுப் பூனை போன்ற விலங்கினங்களும் இங்கு காணப்படுகிறது. மித வறட்சிப்பகுதி இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள தார் பாலைவனத்திலிருந்து குஜராத்தின் கட்ச் பகுதி காம்பே மற்றும் கத்தியவார் தீபகற்ப பகுதிகள் மித வறட்சிப் பகுதிகளாகும். வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளும் முட்புதர் வகை தாவரங்களும் இங்கு காணப்படும் இயற்கை தாவரங்களாகும். மணற்பகுதிகளில் ஆங்காங்கே அக்கேஷியா, புரசாப்பிஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. மலைப் பகுதிகளில் யூபார்பியா தாவரயினங்களும் கடற்கரையோரப் பகுதிகளில் சால்வடோரா, டெமரிக்ஸ் போன்ற தாவரயினங்களும் காணப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி இந்தியாவில் 5% நிலப்பகுதியை மட்டுமே உடையதாக இருப்பினும் நம் நாட்டிலுள்ள சுமார் 4000 வகையான தாவரயினங்கள் இங்கு காணப்படுகிறது. இவற்றில் 1800 வகை தாவரயினங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தானவையாகும். பருவமழைக்காடுகள் மேற்கு பகுதிகளிலும் மழை குறைந்த கிழக்கு பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கு பசுமைமாறா காடுகளிலிருந்து உலர்ந்த இலையுதிர் காடுகள் வரை பல்வேறு விதமான காடுகள் காணப்படுகிறது. நீலகிரி கருங்குரங்கு, சிங்க வால் குரங்கு, நீலகிரி வரையாடு, மலபார் மலைமொங்கன் போன்ற விலங்கினங்களும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தான பல இருவாழ்விகளும் இங்கு காணப்படுகிறது. தக்காணப் பகுதி இந்தியாவின் மொத்த நிலப்பகுதியில் 43% பரப்பில் தக்காணப்பீடபூமி பரந்து விரிந்து காணப்படுகிறது. இது வடக்கே சாத்பூரா மலைதொடராலும், மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையாலும், கிழக்கே கிழக்கு தொடர்ச்சி மலையாலும் சூழப்பட்டுள்ளது. இம்மலைத் தொடரின் உயரம் கிழக்கே 300 மீட்டர் முதல் மேற்கே 900 மீட்டர் வரை மாறுபட்டு காணப்படுகிறது. வளமான கரிசல்மண் மற்றும் செம்மண்ணை உடைய இப்பகுதி நான்கு பெரிய ஆறுகள் மூலம் பாசன வசதி பெறுகின்றது. இப்பீடபூமியின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்ப மண்டல உலர்ந்த இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன. இப்பீடபூமியின் கிழக்கு பகுதியான ஆந்திரா, ஒரிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஈரப்பத இலையுதிர் காடுகள் உள்ளன. புலி, காட்டுபன்றி, பனிக்கரடி, காட்டெருது, கடமான், புள்ளிமான் போன்ற விலங்கினங்கள் இப்பகுதி முழுவதும் காணப்படுகிறது. காட்டெருமைகள், யானைகள் மற்றும் மணிப்பூர் மான் போன்ற விலங்கினங்களும் ஆங்காங்கே சில இடங்களில் காணப்படுகின்றன. கங்கை சமவெளிப்பகுதி கங்கை சமவெளி பகுதி இந்தியாவிலேயே மிகவும் வளமான பகுதியாகும். கங்கை ஆறு மற்றும் அவற்றின் உபநதிகள் கொண்டு சேர்க்கும் வண்டல்படிவுகளால் உருவானதே கங்கை சமவெளி பகுதி ஆகும். மண்ணின் அமைப்புக்கு ஏற்றவாறு கங்கை சமவெளி நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. பஹாபர் - கூழாங்கற்கள் மற்றும் பெருமணல் நிறைந்த இடங்கள் டெரை - சதுப்பு நிலப்பகுதி பங்கார் - பழைய வண்டல் படிவுகள் உள்ள பகுதி கஹாதர் - புதிய வண்டல் படிவுகள் உள்ள பகுதி கிழக்கு ராஜஸ்தானிலிருந்து உத்திர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் உள்ள கங்கை சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள காடுகளில் பெரும்பகுதி வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளாகும். யானை, வெளிமான், காண்டாமிருகம், கங்கைநீர் முதலை, நன்னீர் ஆமைகள், மற்றும் பல நீர்ப்பறவைகளும் இங்கு காணப்படுகிறது. கடற்கரைப் பகுதி இயற்கையாக இங்கு சதுப்பு நிலத் தாவரங்கள் (மாங்கரோவ்) காணப்படுகின்றன. கடல்பசு, டால்பின்கள், முதலைகள் மற்றும் சில பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன. இந்தியாவில் 26 வகையான நன்னீர் ஆமைகளும் மற்றும் நிலத்தில் வாழும் ஆமைகளும் 5 வகையான கடல் நீர் ஆமைகளும் காணப்படுகிறது. கடல் நீர் ஆமைகள் கடற்கரையோரங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. நிலவாழ் ஆமைகள் நிலத்திலே வசித்து இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. 2 லட்சத்திற்கும் கூடுதலான ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஒரிசா கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்கின்றன. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகளில் அதிகளவில் புலிகள் வசிக்கின்றன. லட்சத்தீவுக்கூட்டத்தில் 36 முக்கிய தீவுகள் உள்ளன. 12 அட்டோல், 3 பவழப்பாறைகள் மற்றும் 5 மூழ்கிய நிலையிலுள்ள பவழத்திட்டுகளும் உள்ள இத்தீவு மேற்கு கேரள கடற்கரையில் சுமார் 300 கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ளது. இத்தீவீன் மொத்த பரப்பளவு 32 சதுர கிலோமீட்டராகும். இதில் பயன்பாட்டில் உள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 26.32 சதுர கிலோமீட்டராகும். இங்கு 4 வகையான கடல் ஆமைகள், 36 வகையான நண்டுகள், 12 வகையான மட்டியினங்கள், பவழங்கள் உட்பட 41 வகையான புழையுடலிகள், கடல்பசு, வண்ண மீன்கள் போன்றவையும் இங்கு காணப்படுகிறது. மேலும் 104 வகையான பவழப்பாறைகள் இங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வடகிழக்குப்பகுதி இப்பகுதியில் உயிர்ம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. பசுமைமாறா காடுகள், பசுமைமாறா மழைக்காடுகள், ஈரப்பத இலையுதிர் காடுகள், பருவகால இலையுதிர் காடுகள், மற்றும் புல்வெளிகளும் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இங்கு காணப்படும் 390 வகையான பாலூட்டியினங்களில் 63% அஸ்ஸாமில் காணப்படுகிறது. மாமிசஉண்ணிகளும் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் யானையினங்கள் இங்குதான் காணப்படுகிறது. இந்திய தீவுகள் அந்தமான் நிக்கோபார் பகுதி 572 தீவுகளை உள்ளடக்கியது. வடக்கு பகுதியில் அந்தமானும் தெற்கு பகுதியில் நிக்கோபாரும் உள்ளது. இருதீவுகளுக்கு இடைபட்ட தூரம் 160 கிலோமீட்டராகும். இங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொழிகிறது. எனவே ஆண்டுதோறும் கனத்த மழை இருக்கும். தனித்தன்மை வாய்ந்த பல்வேறு தாவரயினங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 2,200 தாவரயினங்களில் 200 வகை தாவரங்கள் இத்தீவுகளுக்கே உரித்தானவையாகும். வெப்ப மண்டல பசுமைமாறா காடுகள், ஈரப்பதமான இலையுதிர் காடுகள் சதுப்புநிலக் காடுகள் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. 112 வகையான பறவையினங்கள், அந்தமான் உடும்பு, பெரிய கொள்ளைக்கார நண்டு, 4 வகையான ஆமைகள், காட்டுப்பன்றி, அந்தமான் பல்லி, விஷமற்ற அந்தமான் தண்ணீர் பாம்பு போன்ற விலங்கினங்கள் இத்தீவுகளில் வாழ்கின்றன. பெரிய அலகையுடைய காடுகளில் வாழும் மலைமொங்கன் பறவை நார்கோடம் என்னுமிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியா அதிக அளவு பல்லுயிர் பெருக்கம் செறிந்த நாடாக விளங்குகிறது. இங்கு 47,000க்கும் மேற்பட்ட அதாவது உலகளவில் 11% தாவரங்கள் உள்ளன. பூக்கும் தாவரங்கள் பொருத்தமட்டில் உலகளவில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. அதாவது 33% பூக்கும் தாவரங்கள் உள்ளன, அதில் 29% இந்தியாவையே பிறப்பிடமாக கொண்டுள்ளனவாகும். தாவரங்கள் அல்லது விலங்குகள் இந்தியாவில் மட்டும் காணப்பட்டு உலகத்தில் வேறு இடத்தில் காணப்படாமல் இருப்பதால் அதற்கு இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட உயிரினங்கள் என்றழைப்பர். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்