நோக்கம்

‘சுத்தம் சோறு போடும்’, ‘சுத்தம் சுகம் தரும்’ என்ற பழமொழிகள் நமக்கு பரிச்சயமானவை. அன்றாட வாழ்வில் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் சுத்தத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்பதை சிறு வயது முதல் போதிக்கப்பட்டு வருகிறது. சுத்தம் என்பது தனி மனித அவசியம் என்பதையும் தாண்டி, வீடு, சமூகம், நாடு என்ற அளவில் இப்போது மாறியிருப்பது நாம் அறிந்த விஷயம்.

‘பொல்யூஷன் கண்ட்ரோல்’ என்றும் ‘டஸ்ட் அலர்ஜி’ என்றும் அடிக்கடி நாம் கேள்விப்படும் வார்த்தைகளின் பின்னணியில் தூசியின் தாக்கம் இருக்கிறது. சுற்றுப்புற காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் தூசிகள் எளிதாக வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நகர்ப்புற வீடுகள் ஒரு நாள் சுத்தம் செய்யாது விட்டுவிட்டால் மறுநாள் வீடு முழுவதும் தூசி அடுக்கு போன்று படிந்திருப்பதை கவனிக்கலாம்.

அலர்ஜி

வெளிப்புற தூசியில் இருக்கும் ‘அலர்ஜென்’ மற்றும் ‘மைட்ஸ்’ என்ற மிக நுண்ணிய பொருட்களால் வீட்டில் இருப்பவர்களுக்கு ‘அலர்ஜி’ உண்டாகிறது. தினமும் இருமுறைகள் வீட்டை சுத்தம் செய்தாலும் ‘அலர்ஜென்கள்’ போவதில்லை. இந்த சிக்கலை தவிர்க்க ‘வாக்குவம் கிளீனர்கள்’ பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. அவை தூசிதும்புகளை உறிஞ்சி ஒரு சேமிப்பு கலத்தில் சேர்த்து விடும். அதை எளிதாக சுத்தம் செய்து விடலாம். தூசிகள் பறக்காமல் உறிஞ்சப்படுவது இம்முறையில் உள்ள தனித்தன்மையாகும். இவை செயல்படும்போது சப்தம் வருவதுடன், எடையுடன் கூடிய கருவியை போகுமிடங்களில் நகர்த்தியும் செல்ல வேண்டும்.

புதிய வழிமுறை

கருவியின் மொத்த எடையை நகர்த்தியவாறு சுத்தம் செய்யும் முறைக்கு மாற்றாக ‘சென்ட்ரல் வாக்குவம் கிளீனர்’ என்ற புதிய மாற்று தொழில் நுட்ப முறை இப்போது அறிமுகம் ஆகியுள்ளது. பயன்படுத்த எளிதாக உள்ள இக்கருவியில் அறையின் நீள அகலத்துக்கு தக்க அளவு நீண்ட பிளாஸ்டிக் குழாயும் அதன் முனையில் தூசிகளை உறிஞ்சும் பகுதியும் இருக்கும். தூசிகள் சென்று சேரும் பகுதியானது வேறொரு இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வீட்டில் இருக்கும் எல்லோரும் உபயோகிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தப்படும் விதம்

புதிய வீடுகளில் இவற்றை அமைப்பது எளிது. பழைய கட்டமைப்புகளிலும் ‘ரீ மாடல்’ முறையில் இவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

எல்லா அறைகளிலும் இருக்கும் சுவர்களில் ‘பிளாஸ்டிக்’ குழாய்கள் பதிக்கப்பட்டு சிமெண்டு அல்லது ‘ஜிப்சம் பூச்சு’ கொண்டு மூடப்படும். அவற்றின் முனைகளில் இருக்கும் அமைப்போடு சுத்தம் செய்யும் குழாயின் ஒரு முனை சரியாக பொருந்துவது போன்ற ‘பிட்டிங்குகள்’ செய்யப்படும். அவை ‘இன்லெட்’ என்று அழைக்கப்படும்.

சுத்தம் செய்யும் குழாயின் ஒரு முனையை அந்த ‘இன்லெட்டில்’ சரியாக பொருத்தி விட்டு இயக்கினால் குழாயின் மறு முனையிலிருக்கும் பகுதி தூசிகளை உறிஞ்சி விடும்.

முன்பே சுவருக்குள் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியாக வீட்டின் வேறொரு பகுதியில் பொருத்தப்பட்ட சேமிப்பு கலனில் தூசிகளை சேர்த்து விடும். அதை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

ஆதாரம்: தினத்தந்தி நாளிதழ்