அறிமுகம் பூஞ்சையின் செல்களுக்கு சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளூக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இவைகளில் பச்சையம் கிடையாது. எனவே இவை பிற ஊட்ட முறையை உடையவை. இவை மட்குண்ணியாகவோ, ஒட்டுண்ணியாகவோ அல்லது கூட்டுயிராகவோ உள்ளன. மேஸ்டிகோமைக்கோடினா பூஞ்சைகளைத் தவிர அனைத்து பூஞ்சைகளும் நகரும் திறனற்றவை. ஸ்போர்களின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. எனினும் பாலினப் பெருக்கமும் காணப்படுகிறது. அமைப்பு பூஞ்சையின் உடலமைப்பு தனி விதமானது. இதன் உடலம் ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனது. பல செல்களால் பூஞ்சை நன்கு கிளைத்துப் பின்னிய மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இழைகளால் ஆனவை. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது. ஹைஃபாக்கள் உண்மையான செல்களாகப் பிரிக்கப்படவில்லை. அவற்றில் புரோட்டோப்ளாசம் தொடர்ச்சியாகவோ அல்லது அங்கங்கே செப்டம் (Septum) எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ காணப்படுகிறது. இந்த குறுக்குச் சுவர்கள் ஹைஃபாக்களை செல்கள் போன்ற பகுதிகளாகப் பிரிக்கிறது. இவ்வாறாக ஹைஃபாக்களானது குறுக்கு சுவர் உடையவையாகவோ (Septate) அல்லது குறுக்கு சுவர் அற்றோ (aSeptate) காணப்படும். குறுக்கு சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்னியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் (coenocytic) என்று பெயர். ஒவ்வொரு ஹைஃபா இழையும் மெல்லிய, உறுதியான செல் சுவரினால் சூழப்பட்டுள்ளது. இது நைட்ரஜனுடன் கூடிய பாலிசாக்கரைடுகளினால் ஆன கைட்டின் என்ற பொருளினால் ஆனவை. கணுக்காலிகளின் (arthropods) வெளி எலும்புக் கூட்டில் (exoskeleton) காணப்படும் பொருளும் கைட்டின் ஆகும். சைட்டோபிளாசத்தில் யூகேரியோட்டுச் செல்களில் வழக்கமாகக் காணப்படும் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியன்கள், கோல்கை உறுப்புகள், எண்டோப்ளாச வலை, ரைபோசோம்கள் மற்றும் வாக்குவோல்கள் ஆகியவை காணப்படுகின்றன. முதிர்ந்த ஹைஃபாக்களில் வாக்குவோல்கள் பெரியனவாகவும் சைட்டோபிளாசம் சுவரை ஒட்டிய ஒரு மெல்லிய படலமாகவும் காணப்படுகின்றன. உணவூட்ட முறை பூஞ்சைகள் பிற ஊட்ட முறையைக் கொண்டவை. அதாவது அவைகளுக்கு கனிமங்களிலிருந்து பெறப்பட்ட கார்பன் தேவைப்படுகிறது. மேலும் அமினோ அமிலங்களிலிருந்துப் பெறப்பட்ட நைட்ரஜனும் தேவைப்படுகிறது. பூஞ்சைகளின் உணவூட்ட முறை பொதுவாக உறிஞ்சு முறை எனவும் விவரிக்கப்படுகிறது. ஏனெனில் இவை தங்களுடைய உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருளை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. விலங்குகளில் இதற்கு மாறாக உணவு முதலில் உட்கொள்ளப்பட்டு பின்பு உறிஞ்சப்படுகிறது. எனவே பூஞ்சையில் உணவு செரித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் வெளியில் நடைபெறுகிறது. பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ அல்லது கூட்டுயிர்களாகவோ பெறுகின்றன. மட்குண்ணிகள் இறந்த அழுகியப் பொருட்களிலிருந்து தங்கள் ஊட்டத்தைப் பெறும் உயிரிகள் மட்குண்ணிகள் எனப்படுகின்றன. மட்குண்ணிகள் இந்த கனிமப் பொருட்களின் மீது நொதிகளைச் சுரந்து அவற்றைச் செரிக்கின்றன. எனவே உணவு செரித்தல் உயிரிக்கு வெளியே நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் போது கரையக் கூடியப் பொருட்கள் பூஞ்சையின் உடலத்தால் உறிஞ்சப்பட்டு தன் மயமாக்கப்படுகின்றன. மட்குண்ணி பாக்டீரியங்களும் பூஞ்சைகளும் சிதைப்பவை எனப்படுகின்றன. ஊட்டப் பொருட்களின் மறு சுழற்சியிலும், மட்கச் செய்வதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மட்கு (humus) எனப்படும் பொருளை உண்டாக்குகின்றன. மட்கு எனப்படுவது ஊட்டப் பொருட்களை உள்ளடக்கிய அழுகிய கனிமப் பொருட்களின் படலமே ஆகும். செல்லுலோஸைச் சிதைக்கும் திறன் பெற்ற செல்லுலேஸ் என்ற நொதியைச் சுரக்கும் சில பூஞ்சைகள் சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கினறன. தாவர செல்லின் முக்கிய அங்கமாக செல்லுலோஸ் உள்ளதால் இவை செல்லுலேசைக் சுரப்பவைகளால் சிதைக்கப்பட்டு மட்காகிறது. ஒட்டுண்ணிகள் மற்றொரு உயிரியின் உள்ளே அல்லது அதன் மேல் வாழும் ஒரு உயிரியே ஒட்டுண்ணி எனப்படும். ஒட்டுண்ணிக்கு உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை அளிக்கும் உயிரி ஒம்புயிரி எனப்படுகின்றது. பொதுவாக ஒம்புயிரி வேறொரு சிற்றினத்தை சார்ந்ததாகும். ஒட்டுண்ணியினால் இதற்கு தீமை விளைகிறது. நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணிகள் நோய் தோற்றுவிப்பவை (pathogens) என்றழைக்கப்படுகின்றன. சில ஒட்டுண்ணிகள் உயிருள்ள செல்களில் மட்டுமே வாழ்ந்து வரும். இவை கட்டாய ஒட்டுண்ணிகள் அல்லது உயிர்சார்பு ஜீவிகள் (obligate parasites) எனப்படுகின்றன. வேறு சில பூஞ்சைகள் ஒம்புயிரைத் தாக்கிகொல்கிறது. பின்னர் அதன் எஞ்சியவை மீது மட்குண்ணியாக வாழ்கிறது. இவை மாறும் ஒட்டுண்ணிகள் (facultative parasites) (necrotrophs) என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறாக கட்டாய ஒட்டுண்ணிகள் அல்லது மாறும் ஒட்டுண்ணிகளாக உள்ளன. பூஞ்சைகள் விலங்குகளைக் காட்டிலும் தாவரங்களையே அதிகம் தாக்குகின்றன. ஹைஃபாக்கள் இலைத்துளைகள் அல்லது நேரிடையாக கியூட்டிக்கிள் அல்லது புறத்தோல் அல்லது காயங்களின் வழியாக உள்நுழைகின்றன. ஒம்புயிரியின் செல்களுக்கிடையே ஹைஃபாக்கள் நன்கு கிளைத்து, சில நேரங்களில் பெக்டினேஸ் (pectinase) என்ற நொதியைச் சுரக்கின்றன. இந்நொதி ஒம்புயிர் செல்களின் செல்சுவர்களின் மைய அடுக்கை செரித்து விடுகிறது. தொடர்ந்து செல்லுலேஸ் என்ற நொதியின் செயலால் செல் சுவர் சிதைக்கப்பட்டு செல் அழிக்கப்படுகிறது. செல் உட்பொருள்கள் பூஞ்சையினால் நேரடியாக உறிஞ்சப்படுகின்றன. அல்லது மேலும் சில நொதிகள் சுரந்து அவை செரிக்கப்படுகின்றன. கட்டாய ஒட்டுண்ணிகள் ஊடுருவுவதற்கும் உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புகளை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் (Haustoria) எனப்படுகின்றன. ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும். இவை பரந்த வெளிப்பரப்பைக் கொண்டவை. செல்லின் பிளாஸ்மா சவ்வினை சிதைக்காமல் செல்லையும் அழிக்காமல் செல்லுக்குள் நுழைகின்றன. மாறும் ஒட்டுண்ணிகள் ஹாஸ்டோரியாக்களை உண்டாக்குவதில்லை. கூட்டுயிர் வாழ்க்கை பூஞ்சைகள் இரண்டு முக்கியமான கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. (1) லைக்கன்கள் (2) மைக்கோரைசாக்கள். லைக்கன்கள் இது ஆல்காக்களுக்கும் பூஞ்சைகளுக்கும் இடையேக் காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையாகும். பொதுவாக இதில் காணப்படும் ஆல்கா பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா ஆகும். பூஞ்சை ஆஸ்கோமைசீட்டு அல்லது பெசிடியோமைசீட்டு வகுப்பைச் சார்ந்தவை. ஆல்கா ஒளிச்சேர்க்கையின் மூலம் கனிம உற்பத்தி செய்து பூஞ்சைக்கும் வழங்குகிறது. பூஞ்சைகள் நீர் மற்றும் தனிமங்களை உறிஞ்சுவதில் உதவுகின்றன. மேலும் பூஞ்சைகள் நீரை சேமித்து வைப்பதிலும் உதவுகிறது. இதன் காரணமாக சில லைக்கன்கள் பிற தாவரங்கள் வாழ இயலாத மிக சுத்த வறண்ட நிலையிலும் வாழ முடிகிறது. மைக்கோரைசாக்கள் பூஞ்சைகளுக்கும் சில உயர் தாவர வேர்களுக்குமிடையேக் காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் ஆகும். பெரும்பாலான நில வாழ்த் தாவரங்கள் நிலத்தில் உள்ள பூஞ்சைகளுடன் இத்தகைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. வேரில் பூஞ்சைகள் ஒரு உறை போன்ற அமைப்பபை ஏற்படுத்தலாம் (எக்டோடிராஃபிக் மைக்கோரைசா) அல்லது வேரின் திசுக்களுக்குள்ளே இவை ஊடுருவிச் செல்லலாம் (எண்டோடிராஃபிக் மைக்கோரைசா). எக்டோடிராஃபிக் வகை காடுகளில் காணப்படும் பீச், ஏக் கோனற் ஊசியிலைத் தாவரங்களில் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் பூஞ்சைகள் பெசிடியோ மைசீட்டுப் பிரிவைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகள் மரங்களிலிருந்து கார்போஹைடிரேட்டு மற்றும் வைட்டமின்களைப் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாகச் சிதைக்கின்றன. இவை எளிதாக தாவரங்களினால் உறிஞ்சப்படுகின்றன. மேலும் பூஞ்சைகள் பாஸ்பேட்டு போன்ற அயனிகளை எளிதாக உறிஞ்சுவதற்கான ஊட்டப்பரப்பை அதிகரிக்கின்றன. பூஞ்சைகள் வழக்கமாக பூஞ்சைகள் தாவரங்களாகவே கருதப்பட்டு வந்தன. ஆல்காக்களுக்கு இணையாக ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலேஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் இவை வகைபடுத்தப்பட்டன. இப்பிரிவின் கீழ் உள்ள தாவரங்கள் தாலஸ் என்ற உடலமைப்பை உடையவை, வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று தாலஸ் என்பது பிரித்தறிய முடியாத உடலம் ஆகும். பூஞ்சைகளின் பொருளாதார முக்கியத்துவம் மனிதனுக்குப் பல வகையிலும் பூஞ்சைகள் நன்மை பயக்கின்றன. இவை மருத்துவம், விவசாயம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவற்றால் தீமை உண்டாக்கும் விளைவுகளும் உள்ளன. பூஞ்சைகளின் சில பயனுள்ள பண்புகள் ‘பெனிசிலியம் நொட்டேட்டம்’ என்ற பூஞ்சையிலிருந்து பெனிசிலின் என்று மருந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஃப்ளெம்மிங் என்பவரால் 1928ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1940 லிருந்து இது மாபெரும் வியத்தகு மருந்தாக பல்வேறு பாக்டீரிய நோய்களுக்கும் பயன்பட்டது. உயிர் எதிர்ப் பொருட்களை (antibiotics) உண்டாக்கும் உற்பத்தியாளர்களாக பூஞ்சைகளுக்கு உயிரியல் அறிவியலில் ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தியது. மோல்டுகளிலிருந்தும் மேலும் பல முக்கியமான உயிர் எதிர்ப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈஸ்ட்டுகள், காளான்கள், ட்ரஃபல்கள் மற்றும் மோரல்கள் போன்ற பூஞ்சைகள் உணவாக உட்கொள்ளத் தகுந்தவை. இவை புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியவை. அகாரிகஸின் சிற்றினங்களான அ.பைஸ்போரஸ், அ.ஆர்வென்ஸிஸ் ஆகியவை உண்ணத் தகுந்தவை. வால்வேரியெல்லா வால்வேஸி, வா.டைஸ்போரா ஆகிய உண்ணக் கூடிய காளான்கள் மிகப் பெரிய அளவில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சாராயத் தொழிற்சாலையும் ரொட்டித் தொழிற்சாலையும் ஈஸ்ட்டுகளை (சாக்ரோமைசீட்டுகள்) வெகுவாகச் சார்ந்துள்ளன. ஈஸ்ட்டுகள் சர்க்கரைக் கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன் - டை - ஆக்ஸைடாகவும் நொதிக்கச் செய்கின்றன. ஆல்கஹால் சாராயத் தொழிற்சாலைகளிலும் CO, ரொட்டித் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. உயிர்வேதிமரபியல் (biochemical genetics) என்று தோன்றி பின்னர் மூலக்கூறு உயிரியல் (molecular biology) என்று கவர்ச்சிகரமாக மாறியதற்கு நியூரோஸ்போரா கிராசா என்ற பூஞ்சையில் ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சியே அடிப்படையாயிற்று. இப்பூஞ்சை, மரபியியலிலிருந்து மிக பரவலாக பயன்படுத்தப்படும் பிரோசோ ஃபிலாவையும் விலக்கிவிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் மரபியல் ஆராய்ச்சிக்கு இப்பூஞ்சை மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நியூரோஸ்போரா, ஆஸ்பர்ஜிஸ்லஸ் ஆகிய பூஞ்சைகள் இன்றளவும் மரபியல் ஆராய்ச்சிக்கு பயன்பட்டு வருகின்றன. ‘பூஞ்சைகள் இல்லாவிட்டால் இறப்பு கூட முழுமை பெறாது’ என்ற பாஸ்ட்சரின் கூற்று கவனத்திற்குரியது. மட்குண்ணிப் பூஞ்சைகள் இறந்த செல்லுலோஸ் நிரம்பிய தாவரப் பொருட்களைச் சிதைத்து கார்பனாகவும் மற்ற கனிமங்களாகவும் மாற்றி அவற்றை எங்கிருந்து பெற்றதோ அந்த சூழ்நிலை மண்டலத்துக்கே திருப்ப அனுப்புகின்றன. இவ்வாறாக பூஞ்சைகள் இயற்கையில் காணப்படும் கார்பன் மற்றும் ஏனைய தனிமங்களின் சுழற்சியை நிலைநிறுத்துகின்றன. பூஞ்சைகளின் தீய விளைவுகள் பூஞ்சைகள் நமக்கு மிகுந்த தொந்தரவை உருவாக்குகின்றன. இவை பழக்கூழிலிருந்து தோல் பொருட்கள் வரை வளர்ந்து அவற்றை வீணாக்குகின்றன. லைசெர்ஜிக் அமிலம் (டைஎதில்அமைடு) எர்காட் எனப்படும். கிளாவிசெப்ஸ் பர்பூரியா பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது. இது ஒரு வித பகற்கனவை தூண்டுகிறது. எனவே இப்பூஞ்சை பகற்கனவை உண்டாக்கும் பூஞ்சை என்று அழைக்கப்படுகின்றன. இது தற்கால திசைமாறிய இளைஞர்களுக்கு பொய்யான ஒருவித மனம் லேசாகிப் போனது மாதிரியான ஒரு உணர்வையும் பகற்கனவுகளையும் உண்டாக்குகிறது. பலவிதமான தாவர நோய்களுக்குப் பூஞ்சை காரணமாக உள்ளன. 1845ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் ஃபைட்டாஃதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சை உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கி "உருளைக்கிழங்கின் அழுகல்” நோயை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்நாட்டில் அந்த ஆண்டில் 1 மில்லியன் நபர்கள் பட்டினியால் வாடி இறந்தனர். 1.5 மில்லியன் மக்கள் வேறு நாடுகளுக்கு பஞ்சம் காரணமாக குடி பெயர்ந்தனர். ஏனெனில் அந்நாட்டின் முக்கிய உணவு உருளைக் கிழங்கு ஆகும். அதுமுதல் தாவர நோயியல் என்ற புது அறிவியல் பிரிவு ஆரம்பமானது. இதில் பூஞ்சைகளால் மட்டுமின்றி பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தாவரங்களுக்கு உண்டாகும் பலவிதமான நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கெள்ளப்பட்டது. தாவரங்களின் சில பூஞ்சை நோய்கள் - நோயுண்டாக்கும் பூஞ்சைகள் கடலையின் இலைப்புள்ளி நோய் - செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா கரும்பின் சிகப்பு அழுகல் நோய் - கொலிட்டோடிரைக்கம் ஃபல்கேட்டம் (Red rot of Sugarcane) மனிதர்களின் சில பூஞ்சை நோய்கள் - நோயுண்டாக்கும் பூஞ்சைகள் உருளைப்புழு (டீனியா) - எப்பிடெர்மோஃபைட்டான் உருளைப் புழு (டீனியா) - டிரைக்கோஃபைட்டான் கேன்டிடியாசிஸ் - கேன்டிடா ஆல்பிகன்ஸ் ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்