கோயில் காடு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிக காலங்களிலிருந்தே, சிறு தெய்வ வழிபாடு இருந்து வருகிறது. தெய்வ நம்பிக்கையின் காரணமாக, மக்கள் எங்கெல்லாம் சென்று தங்குகின்றார்களோ அங்கெல்லாம் நினைவுச் சின்னமாக ஒரு கல்லையோ, வேல் மற்றும் அம்பு போன்ற ஆயுதங்களையோ நினைவாக வைத்து விட்டுச் சென்று பின்னர் அதை தங்கள் இஷ்ட தேவதையாக வணங்கி வந்தனர். இவை பெரும்பாலும் காடுகள் நிறைந்த பகுதிகளிலேயே இருந்து வந்தன. அவர்களாலும் அவர்களது வழித்தோன்றல்களாலும், எக்காரணம் கொண்டும் இப்பல்லுயிர்வளம் நிறைந்த இடத்தில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படாமலும், விலங்குகள் வேட்டையாடப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கோயில் காடும் உருவான விதம் குறித்து தங்கள் முன்னோர்கள் கூறி வந்த கதையை மையமாக வைத்து, மக்களிடையே பயத்தையும், நம்பிக்கையும் உருவாக்கி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதால் இதனை புனிதக்காடுகள் (அ) கோயில் காடுகள் என்று அழைக்கின்றனர். இக்காடுகள் ஏதேனும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டால் இதை பாதுகாத்துவரும் உள்ளூர்மக்கள் மூலம் அவர்களுக்கு அபராதம்/தண்டனை விதிப்பதோடு மட்டுமல்லாமல், அத்தெய்வமும் தண்டித்து விடும் என்று நம்பிக்கையில் இப்புனித காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோயில் காடுகள் இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 14,000 கோயில் காடுகள் உள்ளதாக நம்பப்படுகிறது. அவற்றில் சென்னையிலுள்ள சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், சுமார் 11,000 கோயில் காடுகளை கண்டறிந்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்புனித காடுகள் கீழ்க்கண்டவாறு பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகிறது. வ.எண் மாநிலம் கோயில் காடுகளின் பெயர்கள் 1 ஆந்திர பிரதேசம் பவித்ர வனம் 2 அருணாசல பிரதேசம் கும்பா வனம் 3 அஸ்ஸாம் தான் 4 பீகார் சரூலி மண்டர் 5 சட்டீஸ்கர் மட்டக்குடி 6 கோவா தியோரை, பான் 7 குஜராத் சபர்கந்தா, தாவுட், பனாஸ்கந்தா 8 ஜம்மு காஷ்மீர் பானி 9 ஜார்கண்ட் சராணா, ஜெகிர்தன் 10 கர்நாடகம் தேவுரா காடு, நாகவன், கான் 11 கேரளா ஃகாவு, சர்ப்பக்காவு 12 அரியானா குருத்வாரா வனம் 13 இமாச்சலப்பிரதேசம் குல் டேவ்டா 14 மத்திய பிரதேசம் மட்டிக்கோட், தேவுஸ்தாலி 15 மகாராஷ்டிரா வன், தியோரை, தேவ்குடி, தேவரகட் 16 மணிப்பூர் கம்கப், மௌகக் 17 மேகாலாயா கி ளா லிங்டாக், கி ளா கின்டங்க், 18 ஒடிசா ஜகிரா, தாகூர்அம்மா 19 புதுச்சேரி கோவில் காடு 20 ராஜஸ்தான் வானி, ஓரான்ஸ், தேவாபானி, ஜோக்மாயா 21 சிக்கிம் கும்பகாடு, புத்ததேவ் 22 தமிழ்நாடு கோயில்காடு, ஸ்வாமி சோலை, 23 தெலுங்கானா பவித்ர வனம் 24 உத்தராகண்ட் தியோ பூமி, புக்யால் 25 உத்திரபிரதேசம் தேவான், வொன் 26 மேற்கு வங்காளம் ஜகிரா, தியோ தசரா, மாவுமுண்ட். தமிழ்நாட்டில் கோயில் காடுகள் தமிழகத்தைப் பொருத்தமட்டில் இப்புனித காடுகள் கோவில் காடுகள் என்றும் சாமி சோலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் 1270 கோயில் காடுகள் கண்டறிப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் தங்களுக்கு விருப்பமான காளியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன், எல்லையம்மன் போன்ற பெண் தெய்வங்களையும், முனீஸ்வரன் கருப்பசாமி, வீரன் மற்றும் அய்யனர் போன்ற ஆண் தெய்வங்களையும் வழிபட்டுவருகின்றனர். இக்காவல் தெய்வங்கள் பெரும்பாலும் அவ்வூரின் அருகேயுள்ள ஆறு மற்றும் குளக்கரையின் அருகே பல்வேறு வகை செடி, கொடி மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியின் மத்தியில் இருக்கும் இவற்றையே கோயில் காடுகள் என அழைக்கின்றோம். தாவரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து நம் முன்னோர்கள் வாஸ்து சாஸ்திரங்களிலும், வான சாஸ்திரங்களிலும் புராணங்களிலும், நவகிரகம், நட்சத்திரம், இராசி ஆகியவைகளுக்கு உகந்த தாவர இனங்களை நெறிமுறை படுத்தி அவைகளை வழிபட்டனர். நவகிரக தாவரங்கள் 1. சூரியன் - வெள்ளை எருக்கு 2. சந்திரன் - பலாசு 3. செவ்வாய் - கருங்காலி 4. புதன் - நாயுருவி 5. குரு - அரசு 6. சுக்கிரன் - அத்தி 7. சனி - வன்னி 8. இராகு - அருகு 9. கேது - தர்ப்பை நட்சத்திர தாவரங்கள் 1. அசுவினி - எட்டி 2. பரணி - பெருநெல்லி 3. கார்த்திகை - அத்தி 4. ரோகிணி - நாவல் 5. மிருகசீரிடம் - கருங்காலி 6. திருவாதிரை - திப்பிலி 7. புனர்பூசம் - மூங்கில் 8. பூசம் - அரசு 9. ஆயில்யம் - புன்னை 10. மகம் - ஆல் 11. பூரம் - பலாசு 12. உத்திரம் - அலரி 13. அஸ்தம் - காட்டுமா 14. சித்திரை - வில்வம் 15. சுவாதி - மருது 16. விசாகம் - விளா 17. அனுஷம் - மகிழம் 18. கேட்டை - பராய் 19. மூலம் - ஆச்சா 20. பூராடம் - வஞ்சி 21. உத்திராடம் - பலா 22. திருவோணம் - வெள்ளை எருக்கு 23. அவிட்டம் - வன்னி 24. சதயம் - கடம்பு 25. பூரட்டாதி - மா 26. உத்திரட்டாதி - வேம்பு 27. ரேவதி - இலுப்பை இராசி மரங்கள் 1. மேஷம் - சந்தன வேங்கை 2. ரிஷபம் - ஏழிலைப்பாலை 3. மிதுனம் - பலா 4. கடகம் - பலாசு 5. சிம்மம் - பாதிரி 6. கன்னி - மா 7. துலாம் - மகிழம் 8. விருச்சிகம் - கருங்காலி 9. தனுசு - அரசு 10. மகரம் - தோதகத்தி 11. கும்பம் - வன்னி 12. மீனம் - ஆல் கோயில்காடுகள் பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகள் பூக்கள், இலைகள் மற்றும் தாவர பாகங்கள் பூஜைக்காக பயன்படுத்தப்படுகிறது. மரங்கள் கோயில் கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் பல்வேறு மூலிகைள் நோய் தீர்க்கும் மருந்தாகிறது. விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு உணவு, உறைவிடமாக திகழ்வதால் அவைகளின்மூலம் விதைப்பரவல் அதிகரிக்கப்பட்டு தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஏதுவாக உள்ளது. மண் அரிப்பு தடுக்கப்படுகின்றது காய்ந்து போன இலை, கிளை மற்றும் மரங்கள் இயற்கையாக மட்குவதன்மூலம் மண்வளம் மேம்படுகிறது. அந்தந்த பகுதியின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளரும், பிற பகுதியில் கிடைக்கக்கூடிய அரிய பல்வேறு வகையான தாவரங்களின் பிறப்பிடமாக விளங்குகின்றது. நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கிறது காற்று மாசுபடுதலை தடுத்து தூய காற்றை அளிக்கிறது. ஒலி அளவு குறைக்கப்படுகிறது. மனதை குளிர்விக்கும் இனிமையான சோலையாக திகழ்கின்றது. பாதுகாப்பின் அவசியம் ஆனால் இன்றைய நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பினாலும் முன்பு மக்களிடையே இருந்த கட்டுக்கோப்பான நிலை மாறியதினாலும் இக்கோயில் காடுகள் இருந்த இடங்கள், பொது நலனை கருத்தில் கொள்ளாமல் விவசாயத்திற்காகவும் கட்டிடங்கள் கட்டவும் மற்றும் பிற பயன்பாட்டிற்காகவும் ஆக்கிரமிக்கப்படுவதால் கோயில்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பிற நாட்டவர் போற்றக் கூடிய நமது கோயில்களையும் அவற்றில் உள்ள பாரம்பரியம் மிக்க கலாச்சார வழிமுறைகளையும், நாம் நமது முன்னோர் செய்த வழிமுறையினை பின்பற்றி, அழிந்துபோன காடுகளில் மரங்களை வளர்த்து கோயில்காடுகளுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்பதினால் ஒரு இனிமையான சூழலை இன்றைய நிலையில் ஓரளவாவது நிலைநாட்ட முடியும். உலகளவில் சிந்தித்து உன்னளவில் செயல்படு என்ற பொன்மொழிக்கேற்ப ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள கோயில்காடுகளை இனியாவது பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயலாக்க வழிமுறைகளை பின்பற்றி வருகின்றது. இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து கோயில் காடுகளை பாதுகாத்து ஒரு இனிய சுற்றுச்சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்