சுற்றுலா

சுற்றுலா, மனித அவசர ஓட்டங்களுக்குக் கொஞ்சம் ஒத்தடம் தரும் ஒன்று. இயற்கை மடியில் ஓய்வுகொண்டு, பசும் புல்வெளிகளில் கண்களை குளிரூட்டிக் கொண்டு மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்றிக் கொண்டு வழக்கமான பணிக்குத் திரும்புவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. அந்தச் சுற்றுலாத்தலங்கள் இப்போது அதிக மாசுபட்டுக் கொண்டு வருகிறது. மனதுக்கு இதம் தரும் இயற்கையை நாம் சிதைக்கலாமா என்று சிந்திக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த உதகமண்டலம், கொடைக்கானலின் இயற்கை எழில் இப்போது இல்லை. காரணம் மனித அலட்சியம்.

சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடங்களில் சூழல் மாசு அடைவதாக அப்பகுதிகளில் வாழும் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். வரைமுறையற்ற ஒழுங்குபடுத்தப்படாத சுற்றுலாவினால் பல பாதிப்புகள் நேருகின்றன என்று எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது.

கானகம் தனது உற்பத்திப் பொருட்களை மனித குலத்திற்கு கொடையாக வழங்குகிறது. உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. தனது மரங்களை வெட்டிட கோடரியுடன் வருவோருக்குக் கூட நிழல் அளிக்கும் நற்குணம் படைத்தது.

இந்தப் புவியுலகு அனைவருக்கும் தேவையான அனைத்தையும் வழங்கவல்லது, ஆனால் பேராசைக்காரர்களை இப்புவியால் திருப்தி செய்ய இயலாது என தேசத் தந்தை காந்தி கூறியுள்ளார்.

பாதுகாப்பு முயற்சிகள்

சுற்றுலா மேலாண்மை என்பது தற்போது சுற்றுலாவையும் சுற்றுச்சூழலையும் இணைத்து பாதுகாக்கும் ஓர் செயல்பாடு ஆகும்.

“சுற்றுச்சூழல் என்பது நிலமும், நீரும், காற்றும் அதில் வாழும் உயிரினங்களான தாவரங்களும், பறவைகளும், விலங்கினங்களும் சேர்ந்த அமைப்பு ஆகும். மேலும் சுற்றுச் சூழல் மக்களின் வாழக்கையோடு நெருங்கிய தொடர்புடையது. அவர்களது ஆக்கங்களும் இச் சூழலை மாற்றி அமைத்துள்ளன. சுற்றுச்சூழல் மனித இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலையினை மாற்றிடும் தன்மை கொண்டது. இயற்கைச் சூழலும், மனித ஆற்றலால் உருவாக்கப்பட்ட செயற்கை சூழலும் சுற்றுலாவின் அடிப்படைத் தேவைகளாகும். சுற்றுலாவினை மேம்படுத்த இயற்கைச் சூழலை மாற்றி அமைத்தல் தவிர்க்க இயலாதது, ஆயினும் இத்தகைய மாற்றங்கள் அழகுணர்வோடும் இயற்கைச் சூழலை பாதிக்காத வகையிலும் அமைய வேண்டும். மனிதனின் பேராசைக்கு இயற்கை பலியாகக் கூடாது”.

சுற்றுச்சூழல் மாசுபடல்

இயற்கைச் சூழலின் மீது தாக்கம் நிகழாவண்ணம் சுற்றுலாவினை வளர்ச்சியுற சுற்றுலாவினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்நுட்பக் குறைபாடுகளாலும் தற்போது இந்தியாவும் இமயமலைப் பகுதிகளில் பெரிதும் மாசு அடைந்த இயற்கைச் சூழலைக் கண்டது.. மலைச் சாரல்களில் உள்ள அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் எழுந்துள்ளன. இதனால் மண் அரித்தல், நிலச் சரிவு, மழை வெள்ளம், சமவெளிகளில் பேரழிவு ஆகிய விளைவுகள் ஏற்பட்டன. இந்தியாவிலும் நேபாளத்திலும் மலைச் சாரல்களின் நிலைமை இதுவே.

“ஒரு நாட்டின் இயற்கைச் சூழலையும் அழகிய தோற்றத்தையும் பாதுகாத்து அதன் இயற்கைச் செல்வத்தை திறமையாக மனித இனம் பயன்படுத்திக் கொள்வதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Conservation Of Ecology) என்கிறோம். மனிதனின் ஆக்கப் பணிகள் இயற்கைச்சூழலின் தனித்தன்மையைக் காத்திட உதவ வேண்டும். ஒரு நாட்டின் நில அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்காத நிர்மாணப் பணிகள் சுற்றுச்சூழலைக் காத்திடும் வழிகளில் ஒன்றாகும்.

சுற்றுலாவினர் கழிவுப் பொருட்களை அதற்கென நிறுவப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும், மலைப் பாதைகளில் பயணம் செய்வோர் சாலையின் மருங்கில் எவ்வித கழிவுப் பொருளையும் எறியக் கூடாது என்பன போன்ற பல விதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளாக அரசுகள் வகுத்து வைத்துள்ளது. ஆகையால் சுற்றுச்சூழல் கெடாமல் இருந்தால்தான் சுற்றுலா சிறக்கும் என்ற எண்ணத்தில் எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. யாரெல்லாம் இயற்கை சுற்றுலாப் பயணிகள்?
இயற்கை சுற்றுலா எல்லா வயதினர்க்கும் சமமானது. இயற்கை சுற்றுலாவை தேர்ந்தெடுப்பவர்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தோடு வாழ்பவர்கள்.

2. பழங்குடி மக்களுக்கு இயற்கை சுற்றுலா எவ்வளவு முக்கியம்?
பழங்குடி மக்களின் உரிமைகளை மதிக்கவும், அவர்களின் பொருளாதாரம் மேம்படவும், அவர்களின் பகுதியை சுற்றுலாவிற்கு வருபவர்கள் கண்டுகளிக்கவும் இயற்கை சுற்றுலா மிகவும் பயன் படுகிறது. மேலும் அவர்களின் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க இயற்கை சுற்றுலா பயன் படுகிறது.

3. ஏன் இயற்கை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?
உலக சுற்றுல்லா துறையில் இயற்கை சுற்றுலா வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு துறையாகத் திகழ்கிறது. பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. நமது அழகான பூமியின் இயற்கை எழிலையும் கலாச்சார மரபையும் பேணிப் பாதுகாக்கிறது. உள்ளூர் மக்களின் ஆற்றல் திறனை மேம்படுத்தி அவர்களின் சுயமேம்பாட்டிற்கு அதிகமாக பங்கு வகிக்கிறது.

4. நான் ஏன் என்னை இயற்கை சுற்றுலாவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இயற்கை சுற்றுலா என்பது அதிமான ஆதாயம் தரக்கூடிய ஒன்றாகத் திழற்கிறது. புதிய இடங்களை கண்டுபிடிக்கவும், புதிய நண்பர்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவும்கணப், களிப்புறவும் இயற்கை சுற்றுலா பயன்படுகிறது.
வெறும் படங்கள் எடுக்கவும், அடிச்சுவடியை பதிப்பதற்கும் மேலே இயற்கை சுற்றுலாவின் பயன்கள் மிக அதிகமாக உள்ளது.

ஆதாரம்: சென்னை நலத்தகவல்கள்