மிகவும் மோசமாக மாசுப்பட்ட சூழலில் அதிக அளவில் காற்று நஞ்சாகி ஏராளமான வியாதிகளும் பரவி இருக்கும். பெரும்பாலான நச்சுப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இது தவிர ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகள், பிறப்புக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்ட அறிவியல் சார்ந்த கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 52,000 பேர் காற்று மாசுபடுவதால் இறந்துவிடுகின்றனர் என தெரிவிக்கிறது. காற்றைப் பாதுகாப்போம் குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்போடு, நம்மை பாதித்து வரும் காற்று மாசுபாட்டை தடுக்க முயலவேண்டும். இல்லையெனில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு நம் நுரையீரலில் நுழைந்திருக்கும் தூசுகள், மாசுகள் போன்றவை மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சுற்றுச்சுழலும் மேம்பாடும் வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம் போன்ற அனைத்து சொற்களும் ஒரே பொருளை தருகின்றன. இருந்தாலும் சுற்றுச்சூழலில் மேம்பாடு என்பது பொருந்தாத சொல்லாகும். மனித வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் இல்லாத வகையில் சுற்றுச்சூழல் மேம்பாடும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் கொண்டதாக விளங்குகின்றன. மேம்பாடு என்கிற போதே அதில் நீண்டகால சூழல் அழிவும் மோசமான விளைவுகளும் பொதிந்துள்ளன. தற்போதைய நிலையிலேயே நாம் பெருமளவு வளங்களை இழந்து விட்டோம். இந்நிலையில் அடுத்த தலைமுறை அல்லது 50 வருடம் கழித்து என்ன மீதம் இருக்கப் போகிறது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. முடிவில்லாத வளர்ச்சி வரலாற்றில் மனித உயிரினமானது அறிவாற்றல் மிகுந்த ஏதாவது ஒன்றை புதியதாக கண்டுபிடிக்கும் அல்லது உருவாக்கும் தாகம் கொண்டதாகவே விளங்கி வந்திருக்கிறது. மனிதனால் சும்மாயிருக்கவே முடியாது. ஏதாவது புதிது புதிதாக அவன்/அவளது மூளை சிந்தித்துக்கொண்டிருக்கும். உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் நல்ல பல வசதிக்களுக்காக காத்துகிடக்கின்றனர். இதனால் தங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கி, புதிய பல வசதிகளை பெற ஆவலாய் உள்ளனர். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தூய குடிநீர், சுகாதார வசதிகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் இன்னும் ஏராளமான மக்களுக்கு கிடைக்க வேண்டியுள்ளது. எனவே வளர்ச்சி என்பது புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் புது பிரச்சினைகள் என தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலைத்த மேம்பாடு சாத்தியமா? வளர்ச்சி தேவைப்படும் போது அது பின்விளைவற்றதாகவும், பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது இயலாததாகும். வீடுகள், சாலைகள், அணைகள் போன்றவை நிர்மாணிக்கப்படும்போது வாழிடங்கள் அழிப்பு தவிர்க்க இயலாத ஒன்றாகும். இந்நிலையில் எவ்வாறு நாம் சூழலை பாதுகாக்கப்போகிறோம்? சுற்றுச்சூழலும், மேம்பாடும் ஒருங்கினைந்து செல்ல கீழ்காணும் வழிமுறைகள் உதவக்கூடும். ஒரு புதிய தொடக்கம் நிலைத்த மேம்பாடு என்பது முழுக்க முழுக்க ஒரு புதிய மாற்றத்தை, மனநிலையை, தொழிலில், பொருளாதாரத்தில் புகுத்துவதன் முலம் சாத்தியமாக்க முடியும். இதன் மூலம் உற்பத்தி முறையை ஒரு சுழற்ச்சிக்கு கொண்டு வந்து மூலப்பொருட்களை குறைத்து, கழிவுகளை மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தி உற்பத்தியில் சேர்ப்பது அவசியமாகும். நிலைத்த வளர்ச்சிக்கான பரிந்துரைகள் ஆற்றல் மற்றும் வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பங்களை கடைபிடித்தல் கழிவுகளையும் நச்சுப்பொருட்களையும் குறைக்கும் விதத்தில் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிதல் கரிமசிதைவுறும் பொருட்கள், மறுசுழற்சிக்கு உட்படும் பொருட்களையே உற்பத்தி செய்வது. நம்மால் குறைகூறப்படும் பொருட்களான பிளாஸ்டிக் முதல் பூச்சிமருந்துகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் நம் பிரச்சனைகளை தீர்த்து நமக்கு உதவியாக இருந்துள்ளன. இவைகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளே இன்று இத்தகைய பொருட்களை சிதைவுறத்தக்க வகையிலும் மறுசுழற்ச்சிக்கு உட்படும் வகையிலும் உள்ளதாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவே நிலைத்த வளர்ச்சிக்கு ஒரு நல்ல வெற்றியாகக் கருதலாம். அதேவேளையில் நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் இயற்கையான தீர்வுகள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். நிலைத்த வளர்ச்சியை நோக்கிய பாதையில் “நமது பூமியை ஒரே ஒரு முடிவைக் கொண்டு மாற்றிவிட இயலாது. அனைத்து தரப்பட்ட மக்களின் தேர்வும், ஒருமித்த குரலாலும் இப்புவியை பாதுகாக்க இயலும்.” பார்பரா பைல் இன்றுவரையில் நம்முடைய வாழ்க்கை முறையோ அல்லது நாமோ சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளோம் என்பதையே உணரவில்லை. இத்தகைய நிலையை நாம் உடனடியாக மாற்றிக் கொண்டு பொறுப்புள்ள ஒரு குடிமகனாக மாறவேண்டியது உடனடித்தேவையாகும். கவனத்தில் கொள்ள வேண்டியன தற்போதைய நிலையில் 800 மில்லியன் மக்கள் போதுமான உணவின்றி உள்ளனர். இது தவிர இன்னும் 30 ஆண்டுகளில் கூடுதலாக 30 கோடி பேர்களுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போதுமான நீர் இன்றி பற்றாக்குறையுடன் வாழ்கின்றனர். இந்நிலை இன்னும் முப்பது வருடங்களில் மூன்றில் இரண்டு பங்கு உயரும். உலகின் ஆற்றல் உபயோகம் 1971ம் ஆண்டை ஒப்பிடும் போது 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 2 சதவிகித வளர்ச்சி என்னும் போது இன்னும் 15 ஆண்டுகளில் தற்போதைய நிலையை விட 50 சதவிகிதம் அளவுக்கு பசுங்குடில் வாயுக்கள் உற்பத்தி அதிகரித்து விடும். தற்போதைய நிலையில் படிம எரிபொருட்களின் உபயோகம் 90 சதவிகிதம் உள்ளது. இதுவே 80 சதவிகித கார்பன்டை ஆக்ஸைடு உற்பத்திக்கு காரணமாக உள்ளது. மனித குடியேற்றம், மேய்ச்சல் நிலத்திற்கு மற்றும் விவசாயத்திற்கு என உலகின் காடுகளில் இரண்டில் ஒரு பங்கை அழித்துவிட்டோம். அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது ஊடுறுவிய சிற்றினங்கள் காரணமாக 20 சதவிகித முதுகெலும்பு வகை சிற்றினங்கள் அழியும் நிலையில் உள்ளன. மனித நடவடிக்கைகள் காரணமாக 58 சதவிகித பவழப்பாறைகளும் 34 சதவிகித மீன் இனங்களும் அழிவை எதிர்நோக்கியுள்ளன. ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்