உலகின் பல்லுயிர் வளம் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்காகவே பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் 1973ம் ஆண்டு வாக்கிலேயே அழிந்து வரும் சிற்றினங்கள் பாதுகாப்புக் குழுமம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அழிந்து வரக்கூடிய அபாயநிலையில் உள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அழிவின் விளிம்பின் இருக்கக்கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள், அவற்றின் பாகங்களை விற்பனை செய்வதை தடை செய்யும் சர்வதேச சட்டம் 1975ம் ஆண்டு இயற்றப்பட்டது.

1992ம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலக “பல்லுயிர் வளங்கள் பாதுகாப்பு மாநாட்டில்” கலந்து கொண்ட 160 நாடுகளும் தங்களுடைய நாட்டில் தாவர மற்றும் விலங்கின வகைகளைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளன.

குப்பைக் குவியல்கள் - இந்நூற்றாண்டின் நினைவுச் சின்னங்கள்

நமது சூழலில் குப்பைகளும், கழிவுப் பொருட்களும் நிறைந்து உள்ளன. இவைகள் மறைந்து போவதற்கோ நமது பார்வையைவிட்டு அகன்று போவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

குப்பைகளின் அதிகரிப்பிற்கு காரணமாகும் மாறி வரும் வாழ்க்கை முறை

வேகமாக செல்லும் வாழ்க்கை பாதையில் ஈடுகொடுத்து செல்வதற்கு ஏற்ப நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குப்பைகளின் உற்பத்தியில் வளர்ந்து வரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகளின் பங்கு மிக அதிகமாகும். புது மாதிரி சாதனம் ஒன்று அறிமுகமாகி விற்பனைக்கு வரும் முன்னரே மற்றொரு மாதிரி உருவாக்கப்பட்டு விடுவதாலும் விற்பனைச் சந்தையில் உள்ள புதிய பொருட்களை உடைமையாக்கி கொள்ள வேண்டும் என்ற மக்களுடைய மோகத்தினாலும் கழிவு சேருதல் அதிகமாகிறது.

செயற்கை பொருட்கள் - இயற்கையின் எதிரிகள்

நாம் உபயோகித்து கழிவு என தூக்கியெறியும் பொருட்கள் நம்முடைய வாழ்க்கை முறை எந்த அளவிற்கு இயற்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. நமக்கு தேவையானவற்றை நமது இயற்கை சூழலில் இருந்து பெற்று பயன்படுத்துவதோடு அந்த சூழலால் ஏற்றுக் கொள்ளமுடியாத செயற்கையாக உருவாக்கப்பட்ட கழிவுகளையும் அதில் சேர்த்துக் கொண்டே வருகிறோம்.

இயற்கை சுழற்சியானது, கழிவுக் பொருட்களை தீங்கு விளைவிக்காத பொருட்களாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. ஆனால் நாம் வெளியேற்றும் கழிவுகளின் அளவு மிக அதிகமாக இருப்பதால் இயற்கை சிதைவு சக்தி அளவிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கழிவுப் பொருட்களில் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் இருப்பதே இதற்கு காரணமாகும்.

ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்