நோக்கம்

புவியினுடைய அனைத்து நீரும் பெருங்கடல்களிலும் நீரோடைகளிலும், ஏரிகளிலும், நிலத்தினடியிலும், மண்ணிலும், காற்றிலும் காணப்படுகிறது. புவியில் காணப்படும் மொத்த நீரின் அளவில் 97 சதவீதம் பெருங்கடல்களில் சேமிப்பாக இருக்கின்றது. இரண்டு சதவீதத்திற்கும் குறைவான நீர் அண்டார்க்டிக்காவில் பனிக்கவிப்புகளாகவும் (ice caps) மற்றும் ஆல்ப்ஸ் மலைகளில் பனியாறுகளாகவும் (glaciers) சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவை மிகக் குறைந்த அளவில் காணப்படினும் பனியாறுகள் உருகத் துவங்கினால் நமது சுற்றுப்புறச்சூழலைப் பெருமளவு பாதிக்கும். உலகளாவிய வெப்ப உயர்வால் பெரிய பனிவிரிப்புகள் (ice sheet) உருகிச் சீர்குலைந்து கடல்மட்டம் மேலும் உயரக் கூடும் என்ற அச்சமும் நிலவுகின்றது. அவ்வாறு உயருகின்ற கடல்மட்டத்தினால் கடற்கரையோர நகரங்கள் கடலில் முழ்கி உருக்குலைய நேரிடும். மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டியிருக்கும். தவிர, நன்னீர்த் தொகுதிகளையும் வாழிடங்களையும் பேரழிவிற்குக் கொண்டு செல்லும்.

மூன்றாவதாக நிலத்தினடியில் மிகப் பெரிய அளவில் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மண்ணின் ஈரமும் இணைந்து புவியில் காணப்படுகின்ற மொத்த நீரில் சுமார் 0.5 சதவீத நீரைக் கொண்டுள்ளன. மண்ணில் காணப்படும் நீர் மண்துகள்களுக்கு இடையேயான பொறையிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரங்களில் இப்பொறையிடங்கள் நீரின்றி வறட்சியாக இருக்கும். மழைபொழியும் பொழுது பொறையிடங்களில் நீர் நிரம்பி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் வருடம் முழுவதும் மண்ணில் ஈரம் காயாமல் இருப்பின் அவ்விடங்களில் நிலத்தடி நீர் காணப்படும். அதாவது மண்துகள்களுக்கிடையேயான பொறையிடங்களில் நீர் நிரந்தரமாக நிறைந்திருக்கும். மண்ணும் நிலத்தடி நீரும் முக்கியமான நீர் மூலகங்களாகும். மண்ணில் உள்ள நீரைத் தாவரங்கள் தங்களின் பயன்பாட்டுக்காக உறிஞ்சிக் கொள்கின்றன. நிலத்தடிநீர் நீர்ப்பாசனத்திற்கும் குடிநீர்க்கும் பயன்படுகிறது.

அடுத்ததாக நீரானது புவியின் மேற்பரப்பில் ஒடைகளாகவும் ஆறுகளாகவும் ஏரிகளாகவும் காணப்படுகிறது. புவியில் பாய்கின்ற மிகப்பெரிய ஆறுகளும் ஏராளமான ஏரிகளும் பார்ப்பதற்கு மிகப் பெரியவையாக இருப்பதால் நீர்ச் சேமிப்பும் அதிகமாக இருக்கும் என்று நாம் கருதலாம். ஆனால் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் புவித்தொகுதியின் மொத்த நீரில் 0.05 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. இறுதியாக வளிமண்டலத்தில் காணப்படும் நீரின் அளவு மொத்த நீரில் 0.0001 சதவீதமாகும்.

பெருங்கடல்கள்

பெருங்கடல்கள் பரந்து விரிந்த ஆழமான மிகப் பெரிய நீர்ப்பரப்பாகும். குறைந்த ஆழத்துடன் ஒரு பகுதியில் நிலத்தால் சூழப்பட்டிருக்கும் நீர்ப்பரப்பைக் கடல் என அழைக்கிறோம். பெருங்கடல் நீரும் கடல் நீரும் கரிக்கும் தன்மை கொண்டவை.

பெருங்கடல்களில் மிகப் பெரியது பசிபிக் பெருங்கடலாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலை விட இரண்டு மடங்கு பெரியது. இப்பெருங்கடல் புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குப் பரப்பையும் புவிக்கோளத்தின் மொத்த நீரில் பாதியையும் கொண்டுள்ளது. நீருக்கடியில் 3300மீ. ஆழத்தில் நீண்ட மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது. இத்தொடர் 2000-3000 மீ. உயரம் வரை உயர்ந்து காணப்படுகின்றது. தவிர பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான எரிமலைத் தீவுகள் சிதறிக் காணப்படுகின்றன. இவற்றில் பல உயிரினங்களின் வாழிடங்களாகவும் உள்ளன. ஆஸ்திரேலியா கடற்கரைக்கு அப்பால் உலகிலேயே மிகப்பெரிய பவழத்தொடர் ஒன்று பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இத்தொடரை பெரிய அரண் பவழத்தொடர் என அழைக்கிறோம்.

அட்லாண்டிக் பெருங்கடல் இரண்டாவது மிகப் பெரிய பெருங்கடலாகும். நீருக்கடியில் வடக்கு தெற்காக அமைந்துள்ள எரிமலைகளை ஒட்டி இப்பெருங்கடல் வருடத்திற்கு 2 முதல் 4 செ. மீ. வீதம் அகன்று வருகிறது. இந்த மலைத்தொடர் 4000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றது. வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் சலனமற்ற சர்கோஸா கடல் அமைந்துள்ளது. இக்கடல்பரப்பு பச்சை - பழுப்பு நிற சர்கோஸா கடற்பாசியினால் மூடப்பட்டுள்ளது.

மொத்த கடல்நீரின் அளவில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ளது. இப்பெருங்கடல் மூன்றாவது பெரிய பெருங்கடலாகும். செங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலின் தென் எல்லை வரை பெருங்கடல் தொடர் (oceanridge) ஒன்று காணப்படுகின்றது. விரிவடைந்து வருகின்ற ஒரு மலைத்தொடரின் மீது செங்கடல் அமைந்துள்ளதால், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளாக இக்கடல் விரிவடைந்து வருகின்றது.

தென் பெருங்கடலில் 550 தென்அட்சகோட்டிற்கு தெற்கில் அமைந்துள்ள நீர்ப்பரப்பு முழுமையும் அடங்கும். இப்பெருங்கடல் நான்காவது பெரிய கடலாகும். குளிர்க்காலத்தில் பாதிக்கு மேற்பட்ட இக்கடலின் பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அண்டார்க்டிக் பனிகட்டி கண்டத்திலிருந்து கடலை நோக்கி நூறு கிலோமீட்டர் கணக்கில் பரவியுள்ளதால் தென்பெருங்கடலைப் பற்றிய விவரங்களும் சொற்பமாகவே இருக்கின்றன.

ஆர்டிக் பெருங்கடல் மிகச் சிறிய ஆழமற்ற நீர்ப்பரப்பாகும். புவியில் காணப்படும் மொத்த உப்பு நீரில் ஒரு சதவீத நீரை இப்பெருங்கடல் கொண்டுள்ளது. வருடத்தில் பெரும்பாலான - நேரம் இப்பெருங்கடல் பரப்பை பனிகட்டிகள் கனமான ஒரு போர்வை போல மூடியுள்ளது.

கடல்கள்

கடல்கள் பெருங்கடல்களின் துணைப்பிரிவுகளாகும். குறிப்பாக நிலங்களால் சூழப்பட்ட பெருங்கடல்களில் கடல்கள் அமைந்துள்ளன. நிலப்பரப்புகளால் சூழப்பட்ட சாக்கடலும் காஸ்பியன் கடலும் உப்புநீர் ஏரிகளாகக் கருதப்படுகின்றன.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான பவழக்கடல் ஆஸ்திரேலியா மற்றும் நியூகெலிடோனியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. சைனாக்கடல் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இக்கடல் கிழக்கு சைனாக்கடல் மற்றும் தெற்கு சைனாக்கடல் என்று இரு பிரிவாக உள்ளது. அலாஸ்கா மற்றும் கால்சட்காவிற்கு இடையில் வடபசிபிக் பெருங்கடலின் பகுதியான பெரியிங்கடல் அமைந்துள்ளது. இக்கடல் ஒவ்வொரு குளிர்காலத்திலும் பல மாதங்களுக்கு உறைந்து விடுகின்றது. இரஷ்யாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு பசிபிக் பெருங்கடலின் தொடர்ச்சியாக ஒக்காஸ்க் கடல் அமைந்துள்ளது. ஜப்பான், கொரியா, மற்றும் இரஷ்யாவிற்கு இடையில் வடபசிபிக் பெருங்கடலில் ஜப்பான் கடல் அமைந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கரீபியன் கடல் பல தீவுகளைக் கொண்டுள்ளது. தற்பொழுது புவியில் நடைபெறுகின்ற நிலவியல் பலகை நகர்வுகள் தொடர்ந்து நடைபெறுமேயானால் ஆப்பிரிக்கா நிலவியல்பலகை வடக்கு நோக்கி நகர்ந்து நிலத்தால் சூழப்பட்டுள்ள மத்தியதரைக்கடலை அடுத்த 50 மில்லியன் ஆண்டுகளுக்குள் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். அந்தமான் தீவுகளுக்கும் தாய்லாந்திற்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் கடல் அமைந்துள்ளது.

கண்டப்பரப்புகளில் அமைந்துள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நீங்கள் நன்கு அறிவீர்கள், அதுபோலவே கடலுக்கடியிலும் மிகப்பெரிய மலைத்தொடர்களும் மிக ஆழமான அகழிகளும் உள்ளன.

பெருங்கடல்களின் அடிநிலத்தோற்றங்கள் (Ocean bottom topography)

பெருங்கடல்களின் தரையில் காணப்படும் நிலத்தோற்றங்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவையானவன:

கண்டத்திட்டு

கண்டச்சரிவு

பெருங்கடல்த்தொட்டி

பெருங்கடல் குழிகள்

கண்டத்திட்டு (Continental shelf)

கண்ட எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பெருங்கடல் பகுதியைக் கண்டத்திட்டு என்கிறோம். கண்டத்திட்டு 150 மீட்டரிலிருந்து 200 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது. அதுபோலவே அதன் அகலமும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. அகன்ற கண்டத்திட்டுகள் மிகச் சிறந்த மீன்பிடித்தளங்களாகும். ஏனெனில் இப்பகுதி பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருக்கிறது. இந்த பிளாங்டன்கள் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. ஆதலால் கண்டத்திட்டுகளில் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, ஐரோப்பாவின் வடமேற்குக் கடற்கரை மற்றும் ஜப்பான் தீவுகளைச் சுற்றியுள்ள கண்டத்திட்டுப் பகுதிகள் சிறந்த மீன்பிடித்தளங்களாக உள்ளன.

கண்டச்சரிவு (Continental slope)

கண்டத்திட்டை அடுத்துப் பெருங்கடலின் தரையை நோக்கி செங்குத்தாக சரிகின்ற பகுதி கண்டச்சரிவாகும். இச்சரிவு கண்டத்திட்டையும் ஆழத்தில் அமைந்துள்ள பெருங்கடலின் தரையையும் இணைக்கின்றது. இச்சரிவின் ஆழம் சராசரியாக 3000-6000 மீட்டர் வரை வேறுபடுகின்றது. கண்டச்சரிவு முடிவடையும் பகுதியிலிருந்து பெருங்கடலின் ஆழம் திடீரென அதிகரிக்கிறது.

பெருங்கடல் அகழி (Ocean trough)

கண்டச்சரிவு ஆழமான நீரடிச்சமவெளி போன்று காணப்படும் பெருங்கடல் அகழியில் முடிவடைகிறது. பெருங்கடல் அகழியில் மலைத்தொடர்கள், பீடபூமிகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகள் ஆகியன அமைந்துள்ளன. இவை பெருங்கடல் அகழியின் மொத்த பரப்பில் 40 சதவீதமாகும்.

நுண்ணிய உயிரிகள் மற்றும் பாறைகளின் படிமங்களினால் ஆனது. பெருங்கடல் மலைத்தொடர்களில் மிகப் பெரியது மத்திய அட்லாண்டிக் மலைத்தொடராகும். இத்தொடர் 14,000 கி.மீ. நீளம் கொண்டது. இத்தொடரில் அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் எரிமலைகள் மற்றும் நிலநடுக்கம் போன்றவை பரவலாக ஏற்படுகின்றன. நிலத்தின் மேல் வெடிக்கின்ற எரிமலைகளைப் போன்றே கடலுக்கடியிலும் எரிமலைகள் வெடிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகளும் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அஜோஸ் தீவுகளும் கடலடியிலிருந்து வெடித்து உருவான எரிமலைத் தீவுகளாகும்.

பெருங்கடல் குழிகள் (Ocean deeps)

பெருங்கடல்களில் வெகு ஆழத்தில் அகழிகள் தோன்றுகின்றன. அகழிகள் மிக குறுகலாகவும் ஆழமாகவும் இருப்பவை. அத்தகைய அகழிகள் பசிபிக் பெருங்கடலில் ஏராளமாக காணப்படுகின்றன. அவற்றுள் மரியானா அகழி (11033மீ.) உலகிலேயே மிக ஆழமானது. இந்த அகழியில் எவரெஸ்ட் சிகரம் (8848மீ.) கூட முழுவதுமாக மூழ்கிவிடும்.

இதுவரை பெருங்கடல்களின் தரையில் அமைந்துள்ள சிறப்பான நிலத்தோற்றங்களைப் பற்றி விரிவாகப் படித்தறிந்தோம். பெருங்கடல்களின் பண்புகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அவற்றில் நிரந்தரமாக காணப்படும் சலனங்கள் ஆகும். சலனங்களின் வகைகளாக அலைகள், ஓதங்கள் மற்றும் நீரோட்டங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

நீர்ப்பரப்பின் மேலே காற்றின் செய்கையினால் அலைகள் உயர்ந்து தாழ்கின்றன. அலைகள் காற்றின் திசையில் நகருபவை. ஒரு நாளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெருங்கடலின் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வதை ஒதங்கள் என அழைக்கிறோம். இவை புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்புவிசையின் காரணமாக உருவாகின்றன. பெருங்கடல்களில் நீரோட்டங்கள் என்பது கிடையாகவும் செங்குத்தாகவும் நகருகின்றன. காற்று, உராய்வு, வெப்பம், ஈர்ப்பு விசை மற்றும் நீரின் அடர்த்தி முதலானவற்றில் காணப்படும் வேறுபாடுகளின் காரணமாக பெருங்கடல்களின் பல்வேறு பகுதிகளில் நீரோட்டங்கள் தோன்றுகின்றன. இத்தகைய நீரோட்டங்கள் அவை பாய்கின்ற மண்டலத்தின் காலநிலையை மாற்றி அமைக்கின்றன. இவை ஒரு அட்சக்கோட்டிலிருந்து மற்றொரு அட்சக்கோட்டுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகின்றன. பெருங்கடல்களில் காணப்படும் சுழற்சியைப் பற்றி இனி விரிவாகப் படித்தறிவோம்.

நீரோட்டங்கள்

பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீரை நீரோட்டங்கள் என அழைக்கலாம். நீர்ப்பரப்பின் மேலே வீசுகின்ற காற்று பெருங்கடல்களில் நீரோட்டங்களை நகர்த்துகின்றன. பெருங்கடல் பரப்பின் மீது காற்று வீசும்பொழுது உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வின் காரணமாகக் காற்று வீசுகின்ற திசையில் நீரும் நகர்த்தப்படுகிறது. நீரோட்டங்கள் மிகப்பெரிய அளவில் பெருங்கடல்களில் தோன்றுவதற்கு முக்கியக் காரணி வளிமண்டலமாகும். இந்நீரோட்டங்கள் வெப்ப மண்டலத்திலிருந்து துருவ மண்டலத்திற்கு வளி மண்டலத்தின் வெப்ப ஆற்றலை எடுத்து செல்கின்றன. நீரோட்டங்களில் சில சிறிய அளவில் தோன்றுகின்றன, பாதிப்புகளும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. பிற நீரோட்டங்கள் நிரந்தரமாகவும் கிடையாக வெகு தூரத்திற்கு மிகப் பெரிய அளவிலும் பரவிக் காணப்படுகின்றன.

மூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன. இவை நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய வட்டவடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன. இத்தகைய சுழல் தோற்றங்களை பெருங்கடல் சுழல்கள் (Ocean gyres) என அழைக்கிறோம். துணைவெப்பமண்டலப் பகுதிகளில் 30° வடக்கு மற்றும் தெற்கு அட்சக்கோடுகளில் அமைந்துள்ள பெருங்கடல் ஒவ்வொன்றிலும் ஓர் சுழல் பெரிய அளவில் அமைந்துள்ளது. இத்தகைய சுழல் நீரோட்டங்களை துணைவெப்பமண்டல உயர் அழுத்தத்திலிருந்து வீசுகின்ற காற்று கட்டுப்படுத்துகிறது. 50° வடக்கு அட்சக்கோடுகளில் அமைந்துள்ள வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் பரப்புகளில் சுழல்கள் சிறிய அளவில் உருவாகின்றன. இச்சுழல் நீரோட்டங்களை உயர் அழுத்த மையத்திலிருந்து வீசுகின்ற காற்று கட்டுப்படுத்துகிறது. இத்தகைய சுழல்தொகுதிகள் தென்அரைக்கோளத்தில் பெரிய அளவில் அமையவில்லை. ஏனெனில் இத்தகைய சுழல்களை தோற்றுவிக்கின்ற நிலப்பரப்பு குறைவாக உள்ளது.

ஒரு சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கு-மேற்காக இரண்டு நீரோட்டங்கள் முறையாக சுழலின் மேல் மற்றும் கீழ்பகுதிகளில் அமைந்துள்ளன: கண்ட எல்லைகளுக்கு இணையாக வடக்கு-தெற்காக இரண்டு எல்லை நீரோட்டங்களும் அமைந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பாய்கின்ற திசைகளை மிகப் பெரிய அளவில் வீசுகின்ற காற்றுச்சுழற்சிகள் நிர்ணயிக்கின்றன. உலகளவில் அட்சக்கோடுகளின் இடையே வெப்ப ஆற்றல் பரவலுக்கு எல்லை நீரோட்டங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வட அரைக்கோளத்தில் இரண்டு சுழல்களும் தென் அரைக்கோளத்தில் மூன்று சுழல்களும் காணப்படுகின்றன.

வட அட்லாண்டிக் பெருங்கடல் சுழலை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஓர் சுழலின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று புரிந்து கொள்வோம். வட அட்லாண்டிக் சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.

அவையாவன:

வட நிலநடுக்கோட்டு நீரோட்டம்

கல்ப் நீரோட்டம்

வட அட்லாண்டிக் நீர்ப்பிரிவு

கானரீஸ் நீரோட்டம்

வடநிலநடுக்கோட்டு நீரோட்டம்

அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கோட்டு மண்டலத்தை ஒட்டியுள்ள வெப்பநீர் வடநிலநடுக்கோட்டு நீரோட்டம் என அழைக்கப்படுகின்றது. முக்கியமாக இந்நீரோட்டம் கிழக்குக்காற்றினால் மட்டுமே தோற்றுவிக்கப்படுகிறது. இந்தக் காற்று துணைவெப்ப மண்டல உயர் அழுத்தத்தில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்அழுத்தத்தை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்று வியாபாரக் காற்று எனவும் அழைக்கப்படுகின்றது. வியாபாரக்காற்று வடநிலநடுக்கோட்டு நீரோட்டத்தை மேற்கு நோக்கி நகர்த்துகிறது. இந்நீரோட்டம் மேற்கில் அமைந்துள்ள அமெரிக்கக் கண்டங்களால் தடுக்கப்பட்டு வடக்கு நோக்கி திருப்பப்படுகிறது. வடக்கு நோக்கிப் பாயும் இந்த நீரோட்டம் கல்ஃப் நீரோட்டம் எனப்படுகிறது.

கல்ஃப் நீரோட்டம்

மத்திய மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி கல்ஃப் நீரோட்டம் பாய்கிறது. இந்நீரோட்டம் வடநிலநடுக்கோட்டு வெப்பநீரைச் சுமந்துச் செல்வதால் வெப்ப நீரோட்டமாகும். உயர்அட்சத்தில் வீசுகின்ற மேற்குக்காற்றுகளால் (westerlies) இந்நீரோட்டம் பாதிக்கப்படுகின்றது. இந்த மேற்குக்காற்றுகள் துணைவெப்பமண்டல உயர் அழுத்தத்தில் இருந்து துணைதுருவ தாழ்அழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகிறது. இந்த மேற்கு காற்று வட அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்பொழுது கல்ஃப் நீரோட்டத்தை கிழக்கு நோக்கி நகர்த்துகிறது. கிழக்கு நோக்கிப் பாய்கின்ற இந்த நீரோட்டத்தை வட அட்லாண்டிக் நீர்ப்பிரிவு என்று அழைக்கிறோம்.

வட அட்லாண்டிக் நீர்ப்பிரிவு

வட அட்லாண்டிக் நீர்ப்பிரிவு கிழக்குத் திசை நோக்கிப் பாய்கிறது. அத்திசையில் அமைந்துள்ள ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நிலத்தடைகளால் இந்நீரோட்டம் இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது. அவையாவன:

1. கானரீஸ் நீரோட்டம்

2. ஐபீரியன் நீரோட்டம்,

கானரீஸ் நீரோட்டம்

வட அட்லாண்டிக் சுழலில் காணப்படும் நான்காவது நீரோட்டமாகும். இந்நீரோட்டம் வடதுருவத்திலிருந்து குளிர்நீரைச் சுமந்து வருவதால் இது ஒரு குளிர் நீரோட்டமாகும். இக்குளிர்நீரோட்டம் நிலநடுக்கோட்டை நோக்கிப் பாய்கிறது.

பெருங்கடலில் காணப்படுகின்ற நீரோட்டங்களிலிலேயே கல்ஃப் நீரோட்டம் மிகவும் வலுவான நீரோட்டமாகும். இந்நீரோட்டம் சுமார் 250 செல்ஸியஸ் வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது. இந்த வெப்பநீரோட்டம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாக்கிறது. இல்லையெனில் இந்நாடுகளும் அதே அட்சக்கோட்டில் அமைந்துள்ள கனடாவைப் போன்று குளிர்க்காலநிலையைப் பெற்றிருக்கும். ஆனால் உலகளவில் கூடுதலாகி வருகிற வெப்பத்தினால் கல்ஃப் நீரோட்டம் பாய்கின்ற திசையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தினால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வட்டாரக் காலநிலையும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. ஆனால் நீரோட்டங்களில் ஏற்படுகின்ற உலகளவிலான மாற்றங்கள் காலநிலைச் சுழற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பசிபிக் பெருங்கடலில் தோன்றுகின்ற இரண்டு நீரோட்டங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு இவ்விளைவுகளைப் புரிந்து கொள்வோம்.

காலநிலைச் சுழற்சியில் நீரோட்டங்களின் செல்வாக்கு

பசிபிக் பெருங்கடலில் தோன்றும் எல்நீன்யோவும் லாநீன்யாவும் இயற்கைக் காலநிலைச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். எல்நீன்யோ என்றால் ஆண் குழந்தை என்றும் லாநீன்யா என்றால் பெண் குழந்தை என்றும் பொருள்படும் ஸ்பானிஷ் சொற்களாகும். இவை பசிபிக் பெருங்கடலின் குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கோட்டை ஒட்டிய பரப்பில் தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரங்களில் ஒரு வெப்ப நீரோட்டம் தோன்றுகிறது. இந்நீரோட்டத்தை எல்நீன்யோ என்று அழைக்கின்றனர். இந்நீரோட்டம் தோன்றுகின்ற வருடங்கள் எல்நீன்யோ வருடங்கள் என அழைக்கப்படுகிறது: இதர வருடங்கள் சாதாரண வருடங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

தென்பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பில் வீசுகின்ற கிழக்குக்காற்றுகள் அப்பரப்பில் காணப்படும் வெப்பநீரை மேற்கு நோக்கி நகர்த்துகிறது என நாம் அறிவோம். இதனால் அவ்வெப்பநீர் இந்தோனேஷியா கடற்கரைக்கு அருகாமையில் போய்ச் சேருகிறது. இந்த வெப்ப நீரினால் மழைமேகங்கள் உருவாகின்றன. அதன் விளைவாக வடஆஸ்திரேலியா, இந்தோனேஷியா பகுதிகளில் கனத்த மழையைப் பொழிகிறது. அதேநேரத்தில் தென் அமெரிக்க கடற்கரையோரங்களில் கடலடியிலிருந்து மேலெழுந்து வடக்கு நோக்கி நகருகின்ற பெருநீரோட்டம் குளிர்ந்த நீரை மேற்பரப்பிற்குக் கொண்டு வருகிறது. இக்குளிர்நீரோட்டம் மீன்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் தன்னுடன் சுமந்து வருகிறது. ஆதலால் தென் அமெரிக்கக் கடற்கரையோரங்களில் மீன்பிடித்தொழில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இனி எல்நீன்யோ நீரோட்டம் தோன்றுகின்ற வருடத்தில் உலகளவில் ஏற்படும் காலநிலை விளைவுகளைப் பற்றி ஆராய்ந்தறிவோம்.

எல்நீன்யோ வருடங்கள்

எல்நீன்யோ வருடங்களில் கிழக்குக் காற்றுகள் வலுவிழக்கின்றன அல்லது திரும்பி விடுகிறது. ஆகையினால் பசிபிக் பெருங்கடலின் மேற்கிலிருந்து கிழக்காக வெப்பநீர் பாய்கிறது. தென் அமெரிக்கக் கடற்கரைக்கு அப்பால் வெப்பநீர் அதிக அளவில் சேருகிறது. இந்நீர் பெருநாட்டுக் கடற்கரையோரப் பகுதிகளில் சேருவதைத் தொடர்ந்து ஏற்படும் கனத்த மழையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தவிர தொடர்ந்துச் சேருகின்ற வெப்பநீரினால் கடலடியிலிருந்து மேலெழுகின்ற சத்துமிக்க பெரு குளிர்நீரோட்டத்தை கீழ்நோக்கி அழுத்தி விடுகிறது. அதன் விளைவாக பறவைகளும் மீன்களும் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து விடுகின்றன அல்லது மடிந்துவிடுகின்றன.

எல்நீன்யோ நீரோட்டம் ஒருபக்கத்தில் மழை மற்றும் வெள்ளத்தையும் மற்றொரு பக்கத்தில் வறட்சியையும் தோற்றுவிக்கின்றன. இத்தகைய காலநிலை மாற்றங்கள் உலகளவில் ஏற்படக் கூடியவை. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதங்களில் சிறிய அளவில் நடைபெறும் எல்நீன்யோ நிகழ்ச்சி சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால் அசாதாரணமாக சில வருடங்களில் விடாப்பிடியாகத் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக 1982-1983 மற்றும் 1997-1998 ஆகிய வருடங்களில் நடைப்பெற்ற எல்நீன்யோ நிகழ்ச்சி உலகளவில் பெரும் பாதிப்பை தோற்றுவித்தன. சராசரியாக ஒவ்வொரு 10 லிருந்து 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று 1980கள் மற்றும் 1990களுக்கு முன்னர் நடைப்பெற்ற எல்நீன்யோ நிகழ்ச்சிகள் கடுமையாக இருந்தன. குறிப்பாக எல்நீன்யோ தொடர் நிகழ்ச்சியின் முதல் கடும் விளைவு 1980களின் ஆரம்பத்தில் வளர்ச்சி பெற்றது. நிலநடுக்கோட்டிற்கு இணையாக பசிபிக் பெருங்கடலின் குறுக்குவெட்டுத் தோற்ற வரைப்படம் எல்நீன்யோ உருவாக காரணமாக அமைகின்ற பசிபிக் பெருங்கடலில் நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் வளிமண்டலச் சுழற்சியைக் விளக்கிக் காட்டுகிறது.

1982-1983 ஆண்டுகளில் நடைபெற்ற எல்நீன்யோ நிகழ்ச்சியினால் பசிபிக் பேராழியின் நிலநடுக்கோட்டுப் பகுதியின் வெப்பம் உச்சநிலையை அடைந்தது. பசிபிக் பேராழியில் சில பகுதிகளின் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரணமாக நிலவுகின்ற வெப்பநிலையைவிட 60 செல்ஸியல் அதிகரித்தது. இதன் விளைவாக வெப்பமடைந்த கடல் நீரினால் பெரு மற்றும் ஈக்வடார் பகுதிகளின் கடற்கரைகளுக்கு அப்பால் கடல்வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தென் அமெரிக்க கடற்கரைக்கு அப்பால் முந்தைய வருடத்தைவிட மீன்பிடிப்பு 50% குறைந்தது.

எல்நீன்யோ நீரோட்டம் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவின் காலநிலைகளையும் பாதிக்கின்றது. ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா நாடுகளின் அருகாமையில் கடல்நீர் மிகவும் குளிர்ந்து விடுவதால் மழைத்தரும் மேகங்கள் தோன்றுவதில்லை. ஆதலால் வறட்சி ஏற்படுகின்றது. பருவகாற்றுகளும் ஜெட் நீரோட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் வறண்டு போன நிலையில் சிறு பொறியும் பெரும் தீயை தூண்டிவிடுவதால் பெருமளவில் காட்டுத்தீ உருவாகிறது. அதன் விளைவாக நைட்ரஜன் மற்றும் கார்பன் சுழற்சியும் பாதிக்கப்படுகின்றன. சூழலியல் தடங்கல்கள் ஏற்படுகின்றன. லாநீன்யா நிகழ்ச்சியின் பொழுது நடைப்பெறக் கூடிய காலநிலையை இப்பொழுது ஆராய்வோம்.

லாநீன்யா வருடங்கள்

எல்நீன்யோ நிகழ்ச்சிக்குப் பின்னர் வானிலை முந்தைய நிலைமைக்கு திரும்பி விடுகின்றது. இருப்பினும் சில வருடங்களில் கிழக்குகாற்றுகள் மிக வலிமையுடையதாக மாறுகின்றது. அந்நேரங்களில் அசாதரணமாக மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் குளிர்ந்த நீர் சேருகின்றது. இந்நிகழ்ச்சி லாநீன்யா என அழைக்கப்படுகிறது. 1988 ஆம் வருடத்தில் லாநீன்யா நிகழ்ச்சி ஏற்பட்டது. கோடைகாலத்தில் வட அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் வறட்சிக்கு லாநீன்யா நிகழ்ச்சிதான் காரணம் என அறிவியியலாளர்கள் கருதுகின்றனர்.

1998 ல் உருவாகி வளர்ச்சிப்பெற்ற லாநீன்யா 2000 ஆம் ஆண்டு குளிர்க்காலம் வரை தொடர்ந்து நீடித்தது. இந்த காலகட்டத்தில் 1998 மற்றும் 1999 ஆண்டுகள் அட்லாண்டிக் பேராழியில் ஹரிகேன்களின் பருவகாலமாக விளங்கின. குறிப்பாக 1998 இல் வெப்பமண்டல சூறாவளிகள் பத்து உருவானது. அவற்றுள் ஏறக்குறைய ஆறு ஹரிகேன்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தது. அக்டோபர் மாதத்தில் உருவான ஹரிகேன்களில் மிட்ச் என்று பெயரிடப்பட்ட ஒரு ஹரிகேன் கடந்த 100 ஆண்டுகளில் உருவான ஹரிகேன்களிலிலேயே மிக வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இயற்கையாக உயர்ந்து வருகின்ற வெப்பநிலையும் வெப்பத்தின் விளைவுகளும் ஒன்றிணைந்து புவிக்கோளத்தை வெப்பமயமாதலுக்கு துரிதமாக எடுத்துச்செல்லுகிறது என்பதை இத்தகைய சுழற்சிகள் வெளிப்படுத்துகின்றன. சுமார் 100 வருடங்களுக்கு முன்னரே துவங்கிய வெப்பமயமாதலின் வளர்ச்சி 1970 களில் அதிகரித்து அடுத்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு இத்தகைய நிலை தொடரும் என்பதை சுழற்சியின் இன்றைய நிலையிலிருந்து நாம் அறிந்துக்கொள்ள முடிகின்றது.

ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்