எல் நினோ (El Niño) தாக்கம் அமைதியாக உயிர்களைப் பறிக்கக்கூடிய பேராபத்து. மே மாதம் வரும்போது இந்த நிலைமை மேலும் தீவிரமாகும். ‘எல் நினோ’ என்றால் என்ன? 'எல் நினோ' என்பது ஸ்பானிய வார்த்தை. எல் நினோ என்றால் சிறுவன் என்று பொருள். எளிதாகச் சொன்னால், பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர் அதிகமாக சூடாகிறது. இதனால் உலகம் முழுவதும் காற்றின் ஓட்டம் மாறுகிறது. அதாவது மழை பெய்ய வேண்டிய நேரத்தில் கடும் வெயில் மட்டுமே இருக்கும். இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. வளிமண்டல வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக உயரும்போது, அது மனித உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, வெப்பத்தால் ஏற்படும் சோர்வு முதல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெப்பத்தாக்கு (Heatstroke) வரை பல நிலைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெப்ப அலையிலிருந்து பாதுகாப்பு Heat Stroke காரணமாக ஆரோக்கியமாக இருந்தவர்களும் உயிரிழக்கலாம். ஆகவே, நமது உயிர்களை பாதுகாக்க கீழ்க்கண்டவற்றைச் செய்ய வேண்டும்: தாகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் – அது ஆபத்து! தாகம் என்பது உடலில் ஏற்கனவே நீர் குறைந்ததற்கான அறிகுறி. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வையுங்கள். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் அருகில் வைத்திருங்கள். மதியம் 11 மணி முதல் 3 மணி வரை மிகவும் ஆபத்தான நேரம். இந்த நேரத்தில் வெயில் நேரடியாக உடலுக்கு தாக்கும். முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள். பள்ளி விளையாட்டு நிகழ்ச்சிகள் இருந்தால் கவனமாக யோசிக்கவும். குழந்தையின் உயிர் எந்த பதக்கத்தையும் விட மதிப்புடையது. கருப்பு நிற உடைகளைத் தவிர்க்கவும். அவை வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு போன்ற இலகு நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். வீட்டை குளிர்ச்சியாக வைத்திருத்தல்: பகல் நேரத்தில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும். இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை அனுமதிக்கவும். மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தவும். உணவு முறை: அதிக புரதம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களை உண்ணவும். Heat Stroke அறிகுறிகள்: கடுமையான தலைவலி மயக்கம் வாந்தி வியர்வை இல்லாமல் தோல் உலர்வு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே நிழலான இடத்துக்கு அழைத்து சென்று, ஈரமான துணியால் உடலை துடைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். விலங்குகளையும் மறக்காதீர்கள் - உங்கள் வீட்டில் உள்ள நாய்கள், பூனைகள் மட்டுமல்லாமல், தெருவில் உள்ள விலங்குகளுக்கும் உதவுங்கள். வீட்டின் முன் அல்லது சுவரருகில் தண்ணீர் வைக்கவும். நிழல் கிடைக்கிறதா என்று கவனிக்கவும்.