வெள்ள நேரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு முன்பு வதந்திகளை தவிர்த்து, பதற்றமடையாமல், அமைதியாக இருக்கவும். அவசர தகவல் பரிமாற்றத்திற்கு, குறுஞ்செய்தி அனுப்ப வசதியாக, செல்பேசியை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருக்கவும். வானிலை குறித்த அண்மை செய்திகளுக்கு வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளை கவனித்து வரவும். ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கட்டிப்போடாமல் வைத்திருப்பது அவைகளின் பாதுகாப்புக்கு உதவும். பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியமான பொருட்களுடன் கூடிய அவசரகால பையை தயார் நிலையில் வைத்திருக்கவும். முக்கியமான பொருட்களையும், ஆவணங்களையும் நீர் புகாத பைகளில் பத்திரப்படுத்தி வைக்கவும். அருகிலுள்ள முகாம்கள் மற்றும் உயரமான இடங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் பாதுகாப்பான வழித்தடத்தை அறிந்து வைத்திருக்கவும். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பான இடங்களுக்கு உடனே செல்லவும். ஒரு வாரத்துக்கு தேவையான, உடனடியாக உண்பதற்கு ஏற்ற உணவுப்பொருட்கள், குடிநீர் முதலியவைகளை இருப்பு வைத்திருக்கவும். திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள கால்வாய், ஓடை, வடிகால் பகுதிகளை தெரிந்து வைத்திருக்கவும். வெள்ளத்தின் போது வெள்ள நீருக்குள் செல்லக்கூடாது. அப்படி செல்லவேண்டிய தேவையிருப்பின், தக்க காலணியை அணிந்து செல்லவும். கழிவுநீர் வடிகால் பகுதிகள், நீர்ச்சந்திகள் முதலியவற்றிலிருந்து விலகியிருக்கவும். மின் கம்பங்கள், விழுந்து கிடக்கும் மின் கம்பிகள் முதலியவற்றிலிருந்து விலகியிருக்கவும். திறந்து கிடக்கும் வடிகால்கள், பள்ளங்கள் முதலியவற்றை சிவப்பு கொடி, தடுப்பாண்கள் மூலம் அடையாளமிடவும். வெள்ள நீரின் மீது நடக்கவோ, வாகனங்களை இயக்கவோ கூடாது. ஏனெனில், இரண்டு அடி ஆழமுள்ள வெள்ள நீரானது, பெரிய கார்களைக் கூட எளிதாக அடித்துச் செல்லக்கூடியது. புதியதாக சமைத்த அல்லது உலர்ந்த உணவுகளையே உண்ணவும். உணவுகளை மூடி வைக்கவும். கொதிக்கவைத்த / குலோரின் கலந்த நீரையே பருகவும். கிருமிநாசினியை தெளித்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும். வெள்ளம் வடிந்தபின் வெள்ள நீரிலோ அல்லது அதன் அருகிலோ குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். பழுதடைந்த மின் சாதனங்களை உபயோகிக்காதீர்கள். அறிவுறுத்தப்பட்டால், முதன்மை மின் விசையை அணைத்து வைக்கவும். மின் சாதனங்களை மின் இணைப்பிலிருந்து எடுத்து விடவும். ஈரமான மின் சாதனங்களை தொடாதீர்கள். ஏதேனும் மின் கம்பங்கள் முறிந்து கிடக்கிறதா, மின் கம்பிகள் அறுந்து கிடக்கிறதா, வேறு ஏதேனும் கூர்மையான உடைந்த பொருட்கள் கிடக்கிறதா என கவனியுங்கள். வெள்ள நீரில் கிடக்கும் உணவு பொருட்களை உண்ணாதீர்கள். மலேரியாவை தடுக்க கொசுவலையை பயன்படுத்துங்கள். வெள்ள நேரத்தில் பாம்புகள் தீண்ட நிறைய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். குழாய்களோ, கழிவுநீர் குழாய்களோ சேதமுற்றிருந்தால், கழிவறை மற்றும் குழாய்களை உபயோகிக்காதீர்கள். சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பானது என சொல்லும் வரை பொது குழாய்களில் வரும் நீரை பருகாதீர்கள். வெள்ளத்தின் போது வீட்டிலிருந்து வெளியேற நேர்ந்தால் வீட்டு உபயோக பொருட்கள், மர சாமான்கள் முதலியவற்றை கட்டில், மேசை போன்ற உயரமான இடங்களில் வைக்கவும். கழிவுநீர் வீட்டிற்குள் புகுவதை தடுக்க, கழிவறை கோப்பை, நீர் வடிகால் துளைகளில் மண் நிரப்பிய சாக்கு மூட்டைகளை வைக்கவும். வீட்டின் மின் இணைப்பையும், சமையல் எரிவாயு இணைப்பையும் அணைத்து வைக்கவும். மேட்டு பகுதிகளுக்கும், பாதுகாப்பு முகாம்களுக்கும் செல்லவும். அவசரகால பை, முதலுதவி பெட்டி, முக்கியமான பொருட்கள் மற்றும் ஆவணங்களை உடன் எடுத்துச்செல்லவும். ஆழமான / ஆழம் தெரியாத நீர் பகுதிகளில் இறங்காதீர்கள். நீரின் ஆழத்தை அறிய குச்சியை பயன்படுத்தவும். அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே வீடு திரும்பவும். குடும்பத்தினருக்கான தகவல் பரிமாற்ற திட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும். நனைந்த பொருட்கள் அனைத்தையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தவும். வெள்ளத்தின் போது விவசாயத்தின் பொருட்டு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை செய்ய வேண்டியவை கால்நடைகள் / வளர்ப்புப் பிராணிகளை அதற்கான தொழுவத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கவும். கால்நடைகளுக்கு சுத்தமான குடிநீர் கொடுக்கவும். வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் நீரில் மூழ்கினாலும் தாக்குபிடிக்கக் கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுக்கவும். வெள்ளம் வடிந்தபின் வயல்களில் உள்ள உபரி நீரை வடித்து விடவும். நாற்றுகளும், நெற்பயிருள்ள வயலும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தால், தாமதமான, படிப்படியான விதைப்பு முறைகளை மேற்கொள்ளவும். மேட்டுநில சூழலில், பருப்பு மற்றும் எள் முதலியவற்றை பயிரிடலாம். முதிர்ந்த பயிர்களை, கனமழை முன்னறிவிப்பு கிடைத்தவுடன் அறுவடை செய்து பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். ஓரளவு பாதிக்கப்பட்ட உழவு நிலையில் உள்ள நெல் வயல்களில், உபரி நீரை வடிகட்டிய பின் 1/3rd N2 + 50% K2O மேலுரம் இடவும். பயிர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், குறுகிய கால ஃபோட்டோ இன்சென்சிடிவ் (photoinsensitive) வகைகளை நேரடியாக விதைக்கவும். வெள்ளத்தால் விதைகள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் விதைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, வெள்ளம் வடிந்தபின், கூடுதலான நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்தவும். செய்யக்கூடாதவை அறுவடை செய்த விளைபொருட்களை திறந்தவெளியில் வைத்திருக்கக் கூடாது. வயலில் நீண்ட நாட்கள் நீர் தேங்க விடக்கூடாது. ஏனெனில் அது பயிர்கள் அழுகவும், நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கவும் செய்யும். ஆதாரம்: வேளாண் வானிலை ஆய்வு பிரிவு