காற்று மாசு

நாஸா செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, காற்று மாசுபாடு விஷயத்தில் நாம் இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

வாகனங்கள் வெளியேற்றும் கந்தகப் புகை, அனல் மின் நிலையம் வெளியேற்றும் நிலக்கரிப் புகை, ரசாயன ஆலைகள் வெளியேற்றும் அமிலம் கலந்த நச்சுப் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது. ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

காற்றில் கலந்திருக்கும் பி.எம்.2.5 துகள்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ‘ஏரோசால் ஆப்டிகல் டெப்த்’ சொல்லும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

தொழிற்சாலைகள் நிறைந்த கிழக்கு சீனப் பகுதிகளைவிடவும், பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதிகளில் கடந்த 2005 முதலான 10 ஆண்டுகளில் காற்றின் தரம் மிக மோசமாகியிருப்பது இந்தக் கணக்கீடு மூலம் தெரியவந்திருக்கிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் கண்காணிக்கப்படும் காற்றுத் தரக் குறியீட்டு எண்ணுடன் பொருந்துகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களைத் திரட்டுவது, தற்போதைய நிலவரப்படி 23 நகரங்களில் மட்டும் தகவல் திரட்டுவது என்பதை மேலும் விரிவாக்கம் செய்வது போன்ற விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.

குறிப்பிடத் தக்க மக்கள் தொகையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் உள்ள நகரங்களை அதில் இணைத்து, குறிப்பிட்ட கால அளவுக்குள் தரவுகளைத் திரட்ட வேண்டும். இந்தத் தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரங்கமாக வெளியிடுவது என்பது காற்று மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.

இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் காற்று மாசுபாடு தொடர்பான செயலிகளை உருவாக்குவது, கொள்கை வகுப்பாளர்கள் முதல் காற்று மாசுபாட்டுக்குக் காரணமானவர்கள் வரை இதற்குப் பொறுப்பானவர்களுக்கு அழுத்தம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு போன்ற நடவடிக்கைகள் அதிகரிப்பது, அனல் மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, டீசல் வாகனங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் வசம் இருக்கும் தரவுகளின்படி, கடந்த 6 ஆண்டுகளில் 6 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 23% மாசுத் துகள்களுக்குக் கட்டுமானப் பணிகள் காரணம் என்றும், 20% மாசுத் துகள்களுக்கு டீசல் வாகனங்கள் காரணம் என்றும் தெரியவருகிறது.

கட்டுமானப் பணிகளின்போது வெளியாகும் மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், கரி போன்ற உயிரி எரிபொருட்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சூரிய சக்தி அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்.

பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, சைக்கிள்கள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது போன்றவற்றின் மூலம் நகரங்களின் காற்றுத் தரத்தை மேம்படுத்தலாம். பருவநிலை தொடர்பான பாரிஸ் மாநாட்டின் ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்றுக்கொண்ட பொறுப்பு தவிர்க்க முடியாத ஒன்று.

இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில் காற்று மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்துவதுடன் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், முதியவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதை அலட்சியம் செய்ய முடியாது.

ஆதாரம்: கிரீன்பீஸ் அமைப்பு