அறிமுகம்

பருவநிலை மாற்றம் இன்று உலகின் மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பருவநிலை மாற்றம் பற்றிய தங்களுடைய சீரிய கருத்துக்களை வெளிப்படுத்தும் அறிவார்ந்தவர்களும், அரசியல் வாதிகளும் தொழிற்துறை நிபுணர்களும், பிற பிரபலங்களும் இருந்த போதும் அவர்களுடைய குரல்கள் சிறுபான்மையில்தான் உலகளவில் உள்ளது. பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை எதிர்கொள்ள உலகளாவிய மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் ஒருங்கிணைந்த மாற்று திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கக்கூடிய ஒரு அரசியல் தலைவர் யாரும் இருக்க முடியாது. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பு கடந்த 25 ஆண்டுகளிலும் குறிப்பாக சமீபத்தில் தனது ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளபடி இம்மாற்று திட்டங்களுக்கான அறிவியல் சான்றுகளும் செய்யப் பட வேண்டியவைகளின் விளக்கங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

ஆனாலும், பசுமை பண்ணை வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையிலான உலகளாவிய பருவநிலைசார் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது மிகக்கடினமாகவும் நீண்ட கால முயற்சியாக உள்ளது. 1992ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவ நிலை மாற்று கொள்கை மாநாட்டில் பங்குபெற்ற பெரும்பான்மையான நாடுகளின் ஒப்புதலுடன் ஒரு பொதுவான நடவடிக்கைகள் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் பற்றியும், ஒப்பந்தத்தை செயல்படுத்துவது பற்றியும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்க வில்லை.

இதற்கான மூலக்காரணத்தை அறிவது கடினமல்ல. பருவநிலை மாற்றத்திற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களே முக்கிய காரணங்களாகும். 150 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழிற் புரட்சியால், நாடுகளின் முன்னேற்றத்திற்காக மிக அதிக அளவிலான மற்றும் எல்லா வாயுக்களைவிட மோசமான கரியமில வாயுவை வெளியிடும் பசுமை பண்ணைவாயுவெளியீட்டிற்கு அடித்தளமான புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே முக்கிய காரணமாகும். பல புதிய தொழிற் நுட்பங்கள் இப்போது உருவாகி வருகின்றன; தொழிற்சாலை அல்லாத பிற பயன்பாட்டிற்கு பல வழிகளில் புதுப்பிக்கப்படக்கூடிய எரி சக்தி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இப்படி இருந்தும்கூட பருவ நிலை மாற்று இழப்பை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய மாற்று திட்டங்களுக்கான செலவினங்களைப் பற்றி நிச்சயமற்ற நிலைமை உள்ளதால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உட்பட எல்லா நாடுகளும் இந்தச் செலவுகள் தற்போதும் எதிர் காலத்திலும் எந்த அளவு இருக்கும் என்ற கவலையில் உள்ளன. வளரும் நாடுகளுக்கு இரண்டு வகையான பாதகங்கள் உண்டு. ஒரு புறம் அவர்கள் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள நிலைமையை சரிசெய்ய வேகமாக வளர்ந்து அவருடைய மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்க வேண்டும். மறுபுறம், புதை படிவ எரிசக்தி பொருட்களை குறைவாக பயன்படுத்தி இந்த நிலைமையை அடைய வேண்டும்.

பருவநிலை செயல்திட்டங்களின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்

உலகளாவிய பருவ நிலை பேச்சு வார்த்தைகளின் முக்கிய அம்சமானது, வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் பருவ நிலை கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் உலகளாவிய பொருளாதார சுமைகளை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எப்படி ஏற்றுக்கொள்ளுவது என்பதாகும். உலகளாவிய பருவநிலை கட்டுப்பாட்டிற்கான செயல் திட்டங்களால் ஏற்படும் பொருளாதார சுமையை சமத்துவ முறையில் நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் பருவ நிலை மாற்று கொள்கை மாநாடு மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளது. "நாடுகள் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக பருவ நிலையை போற்றிக் காக்க வேண்டும்; அதற்காக ஒவ்வொரு நாடும் பொதுவான மற்றும் தனித்தனியான பொறுப்புக்களோடும் அவர்களுடைய தனி திறமைகளுக்கு ஏற்பவும் சமத்துவமாக பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் வளர்ந்த நாடுகளின் குழுமங்கள் பருவ நிலை மாற்றம் மற்றும் அவர்களின் சீர்கேட்டை மாற்றியமைக்கும்

நடவடிக்கைகளை முன்னிருந்து நடத்த வேண்டும்” என்று கூறுகிறது. வளர்ந்த நாடுகளின் குறிப்பிட்ட பொறுப்புகளும், பருவ நிலை குறைபாடுகளை குறைப்பதற்காக அவர்கள் எடுக்கப்பட வேண்டிய முனைப்பான முயற்சிகளும் அவைகளை வளரும் நாடுகள் பின்பற்றுவதற்காக அவர்களுக்கு நிதி மற்றும் தொழிற்நுட்ப உதவியும் வழங்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், துரதிர்டவசமாக இந்த மாநாட்டு தீர்மானங்கள் கையெழுத்தான பின் வளர்ந்த நாடுகள் தங்களுடைய பொறுப்புக்களை குறைத்துக்கொள்ள, பலவகையான யுக்திகளையும் செயல்பாட்டு திட்டங்களையும், தர்க்கங்களையும், பேரங்களையும் பேச்சு வார்த்தைகளிலும் மற்ற நிலைகளிலும் எடுத்து வந்துள்ளன. வளரும் நாடுகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பொறுப்புக்களை குறைத்துக்கொள்ள மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த மாநாட்டு தீர்மானம் கையெழுத்திடப்பட்டபின் முதல் 20 ஆண்டுகளில் வளரும் நாடுகள் அவர்கள் ஏற்கக்கூடியதைவிட மிக அதிகமான பொறுப்புக்களை ஏற்கும் வண்ணம் வளர்ந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களில் வளர்ந்து வரும் நாடுகள் உறுதியாக எதிர்த்தாலும் அவற்றுள் பல நாடுகள் பருவ நிலை மாற்றத்தால் தாங்களும் தங்களின் சமுதாயங்களும் மிகவும் சீரழியும் என்று பயப்படுகின்றன. அந்நாடுகள் விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றன அதற்காக சீனா மற்றும் இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் தங்கள் நிலைமைக்கு அதிகமாகவே, இந்த பாரத்தை சுமக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டாலும் கூட வளரும் நாடுகளும் சமத்துவம் என்ற கருத்தை ஒரு பாதுகாப்பு கேடயமாகவே பயன்படுத்துகின்றனவே தவிர அந்த சமத்துவ நிலையை ஏற்படுத்த குறிப்பிட்ட செயல் திட்டங்களை தெரிவிக்க வில்லை. ஆகவே, வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய தனித் தன்மைகளையும், அடிப்படை சார் பிரச்சினைகளையும் தெளிவாக எடுத்துரைத்து தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு உலகளாவிய பருவ நிலை கட்டுப்பாடு செயல்பாட்டிற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதாக கூற வேண்டுமே தவிர தாங்கள் செய்ய இயலாது என்று மற்றவர்கள் நினைப்பது போல இருக்கக் கூடாது.

ஒவ்வொரு நாடும் தன்னால் செய்ய முடியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிப்பதன் மூலம் வளர்ந்த நாடுகள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தவிர்ப்பதை எதிர்க்க முடியும். இவ்வகையான எல்லா நாடுகளும் இயன்ற அளவு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ற நிலையில் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சுமை மிகவும் உயர்ந்துவிடும். வளர்ந்த நாடுகள் தங்களுடைய நீண்ட கால இலக்குகளையும், குறுகிய கால நடவடிக்கைகளையும் தெளிவு செய்துள்ள நிலையில் சீனா தவிர்த்து வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பான்மையானவை குறுகிய இலக்குகளையே தெரிவித்துள்ளதாகும். ஆகவே, வளரும் நாடுகளுக்கான, குறிப்பாக இந்தியாவுக்கான முக்கிய பிரச்சினை என்னவென்றால் உலகளாவிய சமத்துவ பருவ நிலைசார் ஒப்பந்தத்தை செயலாற்றுவதற்கு தனக்குண்டான பங்கை அளிக்கும் அதே சமயத்தில் தங்களுடைய வளர்ச்சிகளுக்காக வேண்டிய அடிப்படை தேவைகளை அது எப்படி உறுதி செய்து கொள்ள முடியும் என்பதாகும்.

கரியம் வரவு செலவு அணுகுமுறை

பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின் முதலாவது செயற் குழுவின் அறிக்கையில் உலகளாவிய கரியம் வரவு செலவு திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமை பண்ணை வாயு வெளியீட்டிற்கு ஏற்றவாறு புவி வெப்பம் உயருகிறது என்பது அறிவியல் தகவல். கரியமில வாயு ஒரு அளவு மீண்டும் இயற்கையில் சுழற்சி பெற்றாலும் ஒட்டுமொத்த நச்சு வாயு வெளிப்பாட்டை குறைப்பது அவசியமாகிறது.

நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒட்டுமொத்த அதிகபட்ச வெளிப்பாட்டை நிர்ணயித்தபின் ஒவ்வொரு நாடும் சமத்துவ முறையில் தனி மனித விழுக்காட்டு முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். பூமி நம் எல்லோருக்கும் சொந்தம் என்ற பொதுவான அடிப்படையில் இது அமைகிறது. இந்த அணுகுமுறையை பல நாடுகளும் மாநாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதன் மூலம், 1870 முதல் ஏற்பட்ட நச்சு வாயு வெளியீட்டினால் வெப்பம் 2" செல்சியஸ்சுக்கு மேல் கூடாத வகையில் அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும். இதன்படி 1870லிருந்து 2100 வரை உள்ள கரியம் வரவு செலவு திட்டத்தின்படி ஒவ்வொரு நாட்டிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் ஏற்கனவே, கரியமில வெளிப்பாட்டை கூடுதலாக செய்துள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ள பருவநிலை கட்டுப்பாடு திட்டத்தில் அவைகள் மேலும் மேலும் நச்சுவாயு வெளியேற்றத்தை செய்வதற்கு ஏதுவாக செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய நீண்டகால கரியமில நச்சு வாயு வெளியீட்டுத் திட்டத்தை வெளியிடாமல் இருந்தால் அது வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவே அமையும். ஆகவே, இந்தியா உடனடியாக இதை செய்ய வேண்டும்.

தற்போது இந்தியா வெளியிடும் கரியமில நச்சு வாயு வளர்ந்த நாடுகளை விட குறைவாக இருந்தாலும், அதை மேலும் குறைப்பதற்கும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியை மேம்படுத்தவும் வளர்ந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தொழிற்நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தியாவை போன்ற மற்ற வளரும் நாடுகளும் இனி வரும் காலங்களில் தாங்கள் வெளியிடக்கூடிய கரியமில நச்சு வாயுவின் அளவை உலக நாடுகள் கணிப்பதில் சமநிலையை கையாள வேண்டும்.

ஆதாரம்: திட்டம் மாத இதழ்

டி. ஜெயராமன், பேராசிரியர், வாழ்விட ஆய்வுப் பள்ளி, டாடா சமூக அறிவியல் நிறுவனம், மும்பை