பருவநிலை மாற்றம்

இயந்திரமயமான இந்த உலகில் நொடிக்கு நொடி மணிக்கு மணி, நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இவ்வாறு வெப்பமடைவதால் உலகின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத்துறை 2009 ஆம் ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தது. 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு வருட வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகில் 200 கோடி பேர் வெள்ளத்தால் சூழப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தால் சூழப்பட்டால் கடற்கரை நகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

வளரும் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவது இந்த பருவநிலை மாற்றம்தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் பேரிடர்களினால் மனித உயிர் இழப்புகள் எத்தகையதாய் இருக்கிறது என்பதை பெல்ஜி புருசேல்ஸ் கத்தோலிக்க பல்கலைக்கழக சர்வதேச பேரிடர் தகவல் தொகுப்பு மையம் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. நமது நாட்டில் ஏற்பட்ட வறட்சியால் மட்டும் சுமார் 42,00,000 பேரும் கொள்ளை நோய் பரவல் மூலம் சுமார் 45,00,000 பேரும், சுறாவளி புயல்களால் 1,40000 பேரும், பேரலைகளின் தாக்கத்தால் 17,000 பேரும் வெள்ளப் பெருக்கால் 52,000 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று வெளியிட்டிருக்கிறது.

உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை உணர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. உதாரணமாக கொல்கத்தாவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஒரு தீவு கடலில் மூழ்கியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் இச்சாமதி ஆறும், இராய்மங்கல் ஆறும் கலக்குமிடத்தில் மூர் என்ற தீவு இருந்தது. இது 3 கி.மீ. நீளமும் 3.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த தீவு யாருக்கு சொந்தம் என்று 1980ல் இந்தியா‍வங்க தேசம் இடையே பிரச்சனை எழுந்து பின்பு இந்தியாவிற்கே சொந்தம் என்று கூறப்பட்ட அந்தத் தீவு, பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயர்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

உலகில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடு அளவில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் தான் என்றாலும் தட்பவெப்பநிலையை பாதுகாக்க தன் பங்களிப்பைச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து பசுமை இல்லா வாயுக்களின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். வரும் 2020 ஆண்டிற்குள்ளாக குறைந்த அளவு 2 டிகிரி செல்சியஸ் அளவாவது வெப்பத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் இந்த உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்நோக்க வேண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே நமது பூமித் தாயை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பசுமை இல்லா வாயுக்களை குறைப்போம். வளமான எதிர்காலத்தை பெறுவோம்.

ஆதாரம்: அரசுமதி (கீற்று)