புயலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. புயலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை புயலின் போது செய்ய வேண்டியவை வீட்டிலுள்ள பெயர்ந்த ஓடுகளை சிமெண்ட் கொண்டு சரிசெய்யவும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை சீரமைக்கவும். வீட்டின் சுற்றுப்புறத்திலுள்ள, இற்று போன பழைய மரங்களை அகற்றவும், காற்றில் பறந்து செல்ல வாய்ப்புள்ள பெயர்ந்த செங்கல், ஓடுகள், குப்பைத்தொட்டிகள், பதாகைகள் முதலியவற்றை ஸ்திரப்படுத்தவும். கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க சில மரப்பலகைகளை கைவசம் வைத்திருக்கவும். மரப்பலகைகள் கைவசமில்லையெனில், கண்ணாடியின் மீது ப்ளாஸ்டர் டேப்புகளை ஒட்டிவைக்கவும், இது கண்ணாடி சிதறி தெறிப்பதை தவிர்க்க உதவும். மண்ணெண்ணை நிரப்பிய அரிகென் விளக்கு, பேட்டரி உள்ள டார்ச் விளக்கு மற்றும் சில உலர்ந்த பேட்டரிகளை கைவசம் வைத்திருங்கள். பாழடைந்த கட்டிடங்களை இடித்துவிடவும். வானொலி பெட்டிகள் வைத்திருப்போர் அது வேலை செய்கிறதா என்பதையும், போதுமான எண்ணிக்கையில் பேட்டரிகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்யவும். வானொலி பெட்டியின் மூலம் வழங்கப்படும் வானிலை எச்சரிக்கைகளையும், வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து கவனிக்கவும், மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துரைக்கவும். வானொலி மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பிறரிடம் கூறவும். சீற்றமான உயர் அலைகளால் அடித்துச் செல்ல வாய்ப்புள்ள தாழ்வான கடற்கரை பகுதிகளிலிருந்து விரைவாக வெளியேறவும். உங்கள் வீடு, உயர் அலைகளினாலும், ஆற்று வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனில் சாலச்சிறந்தது. எனினும், காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டால், உடனடியாக காலி செய்யவும். ஆற்று நீரோட்டத்திற்கு அருகில் இருப்பவர்கள், கனமழையினால், வெள்ளத்தினால் சூழப்பட வாய்ப்பிருப்பதை அறியவும். சிறிது கூடுதலான உணவு, குடிநீரை கைவசம் வைத்திருக்கவும். எளிதில் தயாரிக்கக்கூடியதாகவும், முடிந்தவரை சமைக்காமல் உண்ணக்கூடியதாகவும் இருத்தல் நலம். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் இருப்பின், விலைமதிப்பான/முக்கியமான பொருட்களை மேல் தளத்தில் வைத்திருத்தல் நலம். திறந்தவெளியில் உள்ள கூர்மையான, எளிதில் விழுந்து/பறந்து விடக்கூடிய பொருட்கள் உயிருக்கு அச்சுறுத்தலானவை என்பதால், மூடிய அறைகளில் பாதுகாப்பாக வைத்திருக்கவும். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் உள்ள கதவு, ஜன்னல்களை திறக்க ஏதுவாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கென பிரத்யேக உணவு முறை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளவும். புயலின் கண் பகுதி உங்கள் பகுதியின் மீது கடக்க நேரிட்டால், அரைமணி நேரத்திற்கு மேலான அமைதியை காணலாம். அந்த சமயத்தில், பாதுகாப்பான இடத்திலேயே இருக்கவும். அவசரமான சீரமைப்பு வேலைகள் இருப்பின் அவற்றை செய்துகொள்ளலாம். ஆனால், வெளியில் செல்லக்கூடாது. ஏனெனில், சற்று மிகவும் பலத்த காற்று மீண்டும் எதிர் திசையிலிருந்து வீச ஆரம்பிக்கும். அமைதியான, அவசர நிலையை கையாளும் உங்கள் திறன் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும், உதவியாகவும் இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்ளும் வரை வீடு திரும்பாமல் பாதுகாப்பு முகாம்களிலேயே இருக்கவும் விளக்கு கம்பங்களிலிருந்து பிடிமானமின்றி தொங்கும் மின்சார வயர்களை தொடக்கூடாது. மற்றவர்களுக்கு உதவி தேவையில்லாத பட்சத்தில் பேரழிவு பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும். சமூக விரோதிகளின் துர்நடத்தைகளை தடுப்பதுடன் காவல்நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். பஸ்கள், கார்கள், லாரிகள் மற்றும் வண்டிகளை கவனமாக இயக்க வேண்டும். வீடுகள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து இடிபாடுகளை அகற்ற வேண்டும். இழப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பேரழிவு பகுதியிலிருப்போரின் பாதுகாப்பு குறித்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புயலின் போது செய்யக் கூடாதவை வதந்திகளை நம்பக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியே வரக்கூடாது. புயலுக்கு இடையில் நிலவும் அமைதியான நேரத்தில் வெளியே வரக் கூடாது. விளக்கு கம்பங்களிலிருந்து பிடிமானமின்றி தொங்கும் மின்சார வயர்களை தொடக்கூடாது. ஏனெனில் அதில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளது. புயலின் போது விவசாயம் சார்ந்த செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது கனமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு அடர்த்தியான மழை மற்றும் வெள்ளம் வயலில் உள்ள பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெள்ளப்பெருக்கு மண்ணின் சத்திற்கு பாதிப்பை உருவாக்கும், இது தாவரங்களில் கணிசமான பாதக விளைவுகளை ஏற்படுத்தும். வெள்ளத்தின் போது மண்ணில் ஏற்படும் வேதியியல் மாற்றம் மண்ணில் உள்ள நைட்ரஜன் அளவில் பெரும்மாற்றத்தை உண்டாக்கி வெள்ளம் வடிந்த பின்னரும் கூட பயிரின் வளர்ச்சியை பாதிக்கும். கனமழையானது, மண் அரிப்பு, விவசாய பணிகளில் பாதிப்பு, தண்ணீர் தேக்கம், அதிகப்படியான ஈரப்பதம், பூச்சிகளின் தாக்குதல் மற்றும் பயிர்களில் நோயை ஏற்படுத்தும். பெருங்காற்றால் ஏற்படும் தாக்கம் பெருங்காற்று பயிர்களை நிலைகுலையவும், வேரோடு சாயவும் வழிவகுக்கும். பெருங்காற்று தானியங்களை முற்றிய பயிரிலிருந்து உதிரச் செய்துவிடும். பலத்த காற்று, உயரமாக வளரும் கரும்பு, வாழை போன்ற பயிர்களை மிகவும் பாதிக்கும். பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் போன்ற விவசாய பணிகளை மிகவும் பாதிக்கும். ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் பயிரின் நீர் தேவையை அதிகரிக்கும். புயலுக்கு முன்பாக செய்ய வேண்டியவை பயிர்கள் 80% முதிர்வடைந்திருந்தால், முன்கூட்டியே அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள்/பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். தண்ணீர் உட்புகுவதை தடுக்க, பாசன கால்வாய்களையும், ஆற்றங்கால்களையும் சரிசெய்யவேண்டும். விரிவான தண்ணீர் வடிகால் வசதிகளை செய்யவேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான பிடிமான வசதிகளை செய்வது அவை விழுந்துவிடாமலும், வேரோடு பிடுங்கப்படாமலும் பாதுகாக்க உதவும். வெள்ளம் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் நெல் போன்ற நீரில் மூழ்கினாலும் வளரக்கூடிய பயிர்களை தேர்ந்தெடுக்கவும். வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, நீர் நிலைகளை (ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலியன) முறையாக பராமரிக்க வேண்டும். வெள்ளத்தின் பாதிப்புகளை குறைக்க நீரோட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தவல்ல தாவரங்களை பயிரிடலாம். கரும்பு பயிர்களுக்கு பிடிமான வசதிகளை செய்து வைக்கலாம். வளர்ப்பு பிராணிகளின் இருப்பிடங்கள் பலத்த காற்றால் பாதிக்கப்படாவண்ணம் பாதுகாக்க வேண்டும். வளர்ப்பு பிராணிகளை முறையான தொழுவங்களில் வைத்திருக்கவும். கோழிப்பண்ணைகளைச் சுற்றி கோணிப்பைகளை வைக்கவும். புயலுக்குப்பின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை புயலுக்குப்பின் செய்ய வேண்டியவை வயல்களில் தேங்கியுள்ள உபரி நீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்தல், கரும்பு, வாழை முதலியவைகளை நிமிர்த்தி பிடிமான வசதி செய்தல், காய்கறி, பழச்செடிகளுக்கு பற்றுக்கால் வசதி செய்தல் முதலியவைகளை மேற்கொள்ளவேண்டும். இது புயலினால் ஏற்பட்ட சேதங்களை குறைக்க உதவும். மேலலங்கரித்தல், நைட்ரஜன் உரமிடுதல் பயிர்கள் விரைவில் மீட்சியடையவும், இழப்பை குறைக்கவும் உதவும். தொடர்ந்து நீர் தேங்குதல் மண்ணின் நுண்சத்துகளை குறைக்கும் என்பதால், இலைவழி ஊட்டம் (foliar spray) முறையில் நுண்சத்துகளை தெளிக்கவும். முதிர்ந்த பயிர்களை அறுவடை செய்து செயற்கை முறையில் உலர்த்தவும். புயலுக்குப்பின் செய்யக்கூடாதவை பூச்சி மருந்து தெளிக்கவோ, உரமிடவோ போகக்கூடாது. அறுவடை செய்த தானியங்களை/பொருட்களை திறந்தவெளியில் வைத்திருக்க கூடாது. கடல் சீற்றமாக இருக்குமாதலால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது. வளர்ப்பு பிராணிகளை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. வயல்வெளியில் உள்ள விவசாய குடில்களிலோ, மரத்தினடியிலோ தங்கக்கூடாது. ஆதாரம்: வேளாண் வானிலை ஆய்வு பிரிவு