சுவிட்ச் போர்டு - பராமரிப்பும் பாதுகாப்பும்

காற்றும், வெளிச்சமும்தான் ஒரு வீட்டை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கின்றன. அவை இரண்டையும் மின்சார சுவிட்சுகள் தங்களது கட்டுப்பாட்டில் இயக்குகின்றன. அத்தகைய சுவிட்ச் போர்டை முறையாக பராமரிப்பது, மின் இணைப்புக்கு பாதுகாப்பானது.

வீடு கட்டும்போது அப்போதைய தேவைக்கு ஏற்றமாதிரி மின் சுவிட்சுகளைப் பொருத்தியிருப்போம். ஆனால் நாள்தோறும் புதிது புதிதாக பயன்பாட்டுக்கு வரும் நவீன மின்கருவிகளை பயன்படுத்துவதற்கு அவை போதுமானதாக இருப்பதில்லை. சில மின்கருவிகளுக்கு அதிக மின்சக்தி தேவைப்படலாம். அப்போது கண்டிப்பாக புதிய சுவிட்ச் போர்டுகளை அமைக்க வேண்டியிருக்கும். அவை தரமானவையாக இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

சுவிட்ச் போர்டுகள் அமைந்துள்ள சுவர்களில் ஈரம் கசியக்கூடாது. எனவே மின் இணைப்பையும், தண்ணீர் இணைப்பையும் தனித்தனியாக அமைக்க வேண்டும்.

அடிக்கடி விரல்கள் பட்டுக்கொண்டே இருப்பதால் சுவிட்ச் எளிதில் அழுக்குபடிந்துவிட வாய்ப்பு உள்ளது. சுவிட்சை சுத்தப்படுத்த சுத்தமான உலர்ந்த துணிகளை மட்டுமே பயன்படுத்தவும். தண்ணீர் தொட்டு துடைப்பதைத் தவிர்க்கவும்.

சுவிட்ச் எந்த கருவியோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சுவிட்சாக சோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும். இதனால் மின்சாரம் வீணாவதோடு, மின்சாதனங்களில் பழுதுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவிட்சின் மீது மின்விசிறி அல்லது மின்விளக்கு என்பதை குறிக்கும் வகையில் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களை மார்க்கர் பேனாவை கொண்டு குறித்து வைக்கலாம்.

‘எக்ஸ்டென்சன்’ தற்காலிகப் பயன்பாடுகளுக்காக மட்டுமே. தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டியிருந்தால் உடனடியாக சுவிட்ச் போர்டை திருத்தியமைப்பதே சிறந்தது. எக்ஸ்டென்சன் வசதி இருக்கிறது என்பதற்காக அதன் எல்லா பிளக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. அதன் வாயிலாக அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்வது ஆபத்தானது.

தற்போது மின் இணைப்பில் பியூஸ் அமைப்பை பொருத்துவது தவிர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக சர்க்யூட் பிரேக்கர்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. எனவே புதிய மின் இணைப்புகளில் சர்க்யூட் பிரேக்கர்களையே பயன்படுத்துவது நல்லது.

ஆதாரம்: தினத்தந்தி நாளிதழ்