எத்தனால் ஒரு மாற்று எரிபொருள் உயிரி எரிபொருள் தேசிய கொள்கை திட்டத்தின் படி, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை அரசு ஊக்குவித்து வருகிறது. 2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது. எத்தனால் தயாரிப்பு விலைகள், கச்சா பொருட்கள் மற்றும் வடி ஆலைகள், இதர காரணங்களால் மாறுபடும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனால், சேதமடைந்த மற்றும் கூடுதலாக உள்ள அரிசிகளில் இருந்து பெறப்படும் எத்தனால் போன்றவற்றுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில், 173.03 கோடி லிட்டர் எத்தனால், பெட்ரோலுடன் கலப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.