சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2025 சனவரித் திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும். இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. சேர்க்கைக் கட்டணம் ரூ. 3250 ஆகும். சேர்க்கைக் கட்டணம் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்" (The Director, International Institute of Tamil Studies) எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணையம் வழியாகவோ செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கான இரசீதினை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2024 திசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பின்வரும் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். இயக்குநர்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்இரண்டாம் முதன்மைச் சாலைமையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்தரமணி, சென்னை 600 113 வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9