சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா ஏப்ரல் 28, 2023 தொடங்கி மே 14, 2023 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ - ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களைக் கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள் பாதி, ஆடை பாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்தப் பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழைத் தெரிவிப்பதாக உள்ளது. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது கைவினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகைப் பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் ஐந்துக்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன. சென்னை விழா - கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9