"தமிழ் அகராதியியலின் தந்தை"என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8 ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, "தமிழ் அகராதியியல் நாள் விழா" கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் "தேம்பாவணி" என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் ஆனார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே வீரமாமுனிவரின் இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, அன்றைய மதுரை மாவட்டம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்த அவர் தமிழகம் வந்து தமிழராகவே மாறி, "தத்துவ போதகர்" என மாற்றிக்கொண்டு, தமிழ்ப்பணி புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டு, அவர்போலவே தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பியதால், இவர் தமது பெயரைத் "தைரியநாதர்" என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். வீரமாமுனிவர் அவர்கள் தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம். அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றல், கொண்டவராக உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராகத் திகழ்ந்தார். இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றினார். தமிழில் சதுரகராதியைப் படைத்ததால், "தமிழ் அகராதியின் தந்தை" என்றே போற்றப்படுகிறார். மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலையும் எழுதியுள்ளார். திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் அவர்கள் 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர்நீத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 8 ஆம் நாள் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீரமாமுனிவர் விருது வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கி, தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கி, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், வெளிநாடு வாழ் அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டில் உள்ள அகராதியியல் அறிஞர்களுள் ஒருவருக்கு ஆண்டுதோறும் வீரமாமுனிவர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுத் தொகை ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை பன்னாட்டுக் கருத்தரங்கம் இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பல்வேறு பொருண்மைகளில் எழுதிய தேர்நதெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை 'தமிழ் அகராதியியல் நாள்' சிறப்பு ஆய்வு மலரில் இடம் பெறும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9