மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படியும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படியும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. எஸ். மாரிமுத்து அவர்களின் தலைமையில் தொழில் நல்லுறவு பரிசுக் குழு (Good Industrial Relations Award Committee) அமைக்கப்பட்டுள்ளது. வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும் நல்ல தொழில் உறவும் நிலவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை" ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இம்முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து (http://www.labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 28.02.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக, விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ. 100 மற்றும் வேலையளிப்பவரானால் ரூ. 250 கருவூல வலைத்தளத்தில் (https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan) e-challan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு (challan) வைத்து அனுப்ப வேண்டும். e-challan செலுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இத்துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in) விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9