மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாளை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படவுள்ள 108-வது இந்திய அறிவியல் மாநாடு (108th Indian Science Congress) பெண்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும். 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் ஜனவரி 3-ஆம் தேதி அன்று தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் [Rashtrasant Tukadoji Maharaj Nagpur University (RTMNU)] அமராவதி சாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் "பெண்கள் அதிகாரமளிப்புடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" (Science & Technology for Sustainable Development with Women Empowerment) என்பதாகும். மாநாட்டில் முழுமையான வளர்ச்சி, மதிப்பாய்வு செய்யப்பட்ட பொருளாதாரங்கள் மற்றும் நிலையான இலக்குகள் குறித்து விவாதிக்கப்படும். அதே நேரத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டின் தனிச்சிறப்பான அம்சம், குழந்தைகள் அறிவியல் மனப்பான்மையுடன் அறிவைப் பயன்படுத்தவும், அறிவியல் பரிசோதனை மூலம் அவர்களின் படைப்பாற்றலை உணரவும் வாய்ப்பளிக்க வகை செய்யும் "குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிவியல் மாநாட்டில் "பழங்குடியினர் அறிவியல் மாநாடு" என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்வு சேர்க்கப்படவுள்ளது. இது பழங்குடியினப் பெண்களின் அதிகாரமளிப்பை வெளிக்காட்ட முற்படுவதுடன், உள்நாட்டு அறிவு அமைப்பு மற்றும் நடைமுறையைக் காட்டுவதற்கான தளத்தையும் வழங்கும். முழுமையான அமர்வுகளில், விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள், முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். தொழில்நுட்ப அமர்வுகள் விவசாயம் மற்றும் வனவியல் அறிவியல், விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வள அறிவியல், மானுடவியல் மற்றும் வாழ்வியல் அறிவியல், ரசாயன அறிவியல், புவி அமைப்பு அறிவியல், பொறியியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கணித அறிவியல், மருத்துவ அறிவியல், புதிய உயிரியல், இயற்பியல் மற்றும் தாவரவியல் அறிவியல் ஆகியவற்றில் பயன்பாட்டு ஆராய்ச்சியைப் பறைசாற்றுவதாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பலம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் "இந்தியாவின் பெருமை’’ (Pride of India) என்னும் மெகா கண்காட்சி மாநாட்டில் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். இந்தியாவின் முக்கிய முன்னேற்றங்கள், முக்கிய சாதனைகள் மற்றும் சமூகத்திற்கு இந்திய அறிவியல் மற்றும் இந்திதொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். இந்த 14 பிரிவுகளைத் தவிர, மகளிர் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு, குழந்தைகள் அறிவியல் மாநாடு, பழங்குடியினர் சந்திப்பு, அறிவியல் மற்றும் சமூகம் தொடர்பான பிரிவு, அறிவியல் தொடர்பாளர்கள் மாநாடு ஆகியவை நடைபெறும். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்படும் விஞ்ஞான் ஜோதி என்ற அறிவின் சுடர் (Vigyan Jyot - Flame of Knowledge), 108-வது இந்திய அறிவியல் மாநாடு முடியும் வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்