தமிழ்நாடு அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில் 2022 ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 76 தேர்வர்களில், 18 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், இரண்டு தேர்வர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், அதிகபட்ச ஆர்வலர்கள் புவியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி பெற்றுள்ளவர்களில் 5 மகளிர், 13 ஆண்கள் ஆவர். இதில் ஒருவர் மாற்றுத்திறனாளி பெண் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஜீன் 29, 2022 முதல் செப்டம்பர் 25, 2022 வரை உண்டு உறைவிடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு பயிற்சி மையத்திலிருந்து தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்புப் பேருந்து வசதி செய்து தரப்பட்டது. மேற்குறித்த காலத்திற்கு ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு தேர்வர் ஒருவருக்கு ரூ. 3000 வீதம் வழங்கப்பட்டது. தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள மேற்குறித்த தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலைசிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். தேர்ச்சி பெற்றுள்ள மேற்குறித்த தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற புலன எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள் இம்மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். இம்மையத்தின் மூலம் டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்விற்கு செல்லும் தேர்வர்களுக்கு பயணச் செலவுத் தொகையாக ஆண்டுதோறும் ரூ. 5000 வழங்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறைத் தலைவர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9