தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சி 30.12.2022 முதல் 12.01.2023 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகைப் பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 30.12.2022 முதல் 12.01.2023 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இந்தக் கண்காட்சியை அனைவரும் கண்டு களித்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9