தமிழ்நாட்டில் 15.88 இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கட்டுப்பாட்டில் 79 அரசு தோட்டக்கலை பண்னைகளும் 24 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களிலுள்ள பூங்காக்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. மேலும், குற்றாலத்தில் சாரல் விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா போன்ற கண்காட்சிகள் பிற மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதைப்போன்று, சென்னை மக்களை கவரும் வகையில் 2022-ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் காட்சி நடத்தப்பட்டுவருகிறது, தோட்டக்கலை பயிர்களின் வளத்தையும், வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் நோக்கில் கடந்த மூன்று மலர் காட்சிகள் நடத்தப்பட்டன. இக்காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் நான்காவது மலர் காட்சி 02.01.2025 முதல் 19.01.2025 வரை நடத்தப்படும். இம்மலர் காட்சியில், தமிழகத்தில் பயிரிடப்படும் பல வண்ண கொய்மலர்களையும், பாரம்பரிய மலர்களையும் கொண்டு பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா, பென்ஸ்டிமான், டேலியா, கல்வாழை, சூரிய காந்தி, வெர்பினா, ஆன்டிரினம், ஜெரேனியம், பென்டாஸ், வயலா, ஜெர்பரா, ஆர்கிட்ஸ், நித்தியகல்யாணி, ப்ரிமுலா, வெட்சி, கேலா லில்லி, ஆஸ்டர், டெய்சி, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, இரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.200யும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.100யும் வசூலிக்கப்படுகிறது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும். மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9