தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2024-26) [Tamil Nadu Chief Minister's Fellowship Programme (TNCMFP)] தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 1. தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டு கால "தமிழ்நாடு முதலமைச்சரின் திறன்மிகு புத்தாய்வுத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இளம் வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும். இவை, சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளிகள் இருப்பின் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை ஒருங்கிணைப்பு துறையாக செயல்படும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் கல்வி பங்காளராக செயல்படும். 2. இத்திட்டத்திற்கு, மொத்தம் இருபத்தைந்து (25) வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் கீழ்க்கண்ட ”கருப்பொருள் பகுதிகள் அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் (i) நீர்வளங்களை மேம்படுத்துதல் (ii) வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல் (iii) ஊரக மற்றும் நகர்ப்புர குடியிருப்புக்கள் (iv) கல்வித் தரத்தை உயர்த்துதல் (v) சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துதல் (vi) அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம் (Social Inclusion) (vii) உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி (viii) திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு (ix) முறையான கடன் (x) இளைஞர் நலன் (xi) சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பருவநிலை மாற்றம் (xii) தரவு நிர்வாகம் 3. விண்ணப்பதாரர்கள், முற்றிலும் தேர்வு செயல்முறை செயல்திறனின் தகுதியின் அடிப்படையிலேயே (கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி) தேர்வு செய்யப்படுவார்கள் (கீழே உள்ள பகுதி எண்.6-இல் இதுகுறித்து விவரிக்கப்பட்டுள்ளது). தேர்வு செய்யப்பட்ட இளம் வல்லுநர்கள், இணைய வழி விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட சான்றுகள்/ தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இத்திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். 4. கால அளவு மற்றும் உதவித் தொகை : இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவற்றைத் தவிர கூடுதல் நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது. 5. தகுதி (i) விண்ணப்பதாரர் தொழிற்கல்வி படிப்புகள் (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல்) தொடர்பாக இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு (அல்லது) கலை/அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பை இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் 1956, பிரிவு 3 இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். • முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். • பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும். • ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். • தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது. (ii) வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 26.08.2024 ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும். (iii) தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24ல் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 30 புத்தாய்வு வல்லுநர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை. 6. தேர்வு செயல்முறை (Selection Process) தேர்வு செயல்முறை பின்வரும் மூன்று நிலைகளை உள்ளடக்கியது: நிலை 1: முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது) நிலை 2: விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு) நிலை 3: நேர்முகத் தேர்வு (i) முதற்கட்ட தேர்வு என்பது அதிகபட்சம் 150 புள்ளிகளைக் கொண்ட கொள்குறி வகை அடிப்படையிலான தேர்வு. வினாக்களைக் கொண்ட கணினி அடிப்படையிலான தேர்வு. கணினி அடிப்படையிலான தேர்வுகளில் மூன்று பிரிவுகள் இருக்கும்: (1) (General Awareness) (நடப்பு செய்திகளுடன் கூடிய விண்ணப்பதாரரின் பொது அறிவை சோதனை செய்வது) 2) Quantitative Aptitude (பத்தாம் வகுப்பு நிலையிலான இயற்கணிதம், எண்கள், வடிவியல், புள்ளியியல் மற்றும் தரவு விளக்கம் போன்ற அடிப்படை கணிதத் திறன்களை மதிப்பிடுவதற்கு) (3) Verbal Comprehension and Logical Reasoning (விண்ணப்பதாரர்களின் புரிதல் மற்றும் தொடர்புத் திறன், பகுப்பாய்வுத் திறன் முடிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் இடையூறுகளை நீக்கும் திறன், பொதுவான பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு). இந்த தேர்வின் முக்கிய நோக்கம் தகுதியுடைய விண்ணப்பதாரர்களை அடுத்த நிலைக்கு தேர்வு செய்வதாகும். மேலும், அதில் பெறப்படும் புள்ளிகள் இறுதித் தேர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் (ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.33 புள்ளிகள் குறைக்கப்படும்). தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, எர்ணாகுளம், புதுச்சேரி, விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் இந்த தேர்வு மையங்கள் இருக்கும். தேர்வு மையங்கள் மாறுதலுக்குட்பட்டவை. (ii) விரிவான தேர்வு என்பது எழுத்துத் தேர்வாகும். வினாக்கள் வழக்கமான கட்டுரை எழுத்து வகையைச் சேர்ந்தவை. ஆளுகை, சமூக நீதி, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, நீடித்த நிலையான வளர்ச்சி, வறுமை, மக்கள் தொகையியல், சுற்றுச்சூழல், உயிர் பன்முகத் தன்மை, பருவநிலை மாற்றம், வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள், தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகளில் வினாக்கள் இருக்கும். இந்த விரிவான எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும். விரிவான தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (iii) நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரர்கள் அறிவார்ந்த மற்றும் emotional quotient, நடப்பு விவகாரங்கள் பற்றிய அறிவு, இடையூறுகளை நீக்கும் திறன் மற்றும் முறையான சிந்தனையின் திறன் ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தமிழ் மொழித் பயன்பாட்டுத் திறன் குறித்த செயல்முறை தேர்வு மேற்கொள்ளப்படும். இந்நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் விரிவான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 7. இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 8. முக்கிய தேதிகள் (Important Dates) தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. இதற்கான தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதை https://www.tn.gov.in/tncmfp/ அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 26.08.2024 அன்று மாலை 11.59 மணி வரை இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பம் செய்திட இணையதளம் திறக்கப்படும் நாள் ஆகஸ்ட் 06, 2024 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 26, 2024 தேர்விற்கான மின்னணு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் நாள் செப்டம்பர் 05, 2024 முதற்கட்ட தேர்வு நாள் செப்டம்பர் 15, 2024 விரிவான எழுத்து தேர்வு நாள் செப்டம்பர் 2024 கடைசி வாரம் நேர்முகத் தேர்வு நாள் அக்டோபர் 2024 கடைசி வாரம் புத்தாய்வு திட்டம் துவக்கம் நவம்பர் 2024 9. இத்திட்டம், தேர்வு செய்யப்பட்ட வல்லுநர்களுக்கு சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், 30 நாள் கட்டாய நோக்கு நிலை பயிற்சியுடன் தொடங்குகிறது. (இது குறித்த விரிவான திட்ட அமைப்பு www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்படும்). நோக்கு நிலை பயிற்சி திருப்திகரமாக நிறைவுற்றவுடன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களின் முதன்மை பணி, இடையூறுகள் ஏதேனுமிருப்பின் அவற்றை அடையாளம் காணுதல் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவதும் அவர்களின் முதன்மையான பணியாகும். இவை, சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளி இருப்பின் அதனை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யும். கள நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், கருத்துக்களைப் பெறுவதற்கும், பொருத்தமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவுவதற்கும் அவர்கள் மாவட்டங்களுக்கு களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். வல்லுநர்கள் தங்கள் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கைகளை சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையிடமும், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்திடமும் ஆய்வு, வழிகாட்டல் மற்றும் செயல்திறன் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வப்போது எழும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்படும். வல்லுநர்கள் இரண்டு ஆண்டு முடிவில் இறுதி திட்ட அறிக்கையை (கள்) சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு வருட புத்தாய்வுத் திட்டத்தை திருப்திகரமாக நிறைவு செய்யும் வல்லுநர்களில் கல்வி பங்காளரால் நிர்ணயிக்கப்படும் தகுதியினை திருப்திகரமாக நிறைவு செய்பவர்களுக்கு பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் வழங்கப்படும். இது தவிர, ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். 10. தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்ட காலத்தில், வேறு ஏதேனும் புத்தாய்வு திட்டம் / ஊதியத்துடன் கூடிய பணி / பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு வல்லுநர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் எனில், தன்னுடைய விலகல் கடிதத்தை 30 நாட்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் வல்லுநர்கள் என்பது ஒரு தற்காலிக பொறுப்பாகும். மேலும் எந்தவொரு பொறுப்பிற்கான பணிநியமனம் அல்லது பணியை தொடர்வதற்கான எந்தவொரு உரிமையையும்/ உரிமைக்கோரலையும் செய்ய இயலாது. 11. i) தவறான நடத்தை, ii) திருப்தியற்ற செயல்திறன், iii) விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டால், iv) விண்ணப்பதாரர் ஏற்கனவே வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இதே போன்ற பொறுப்பினை பெற்றிருந்தால், v) விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தவறான தகவல்கள் அல்லது எந்தவொரு மோசடி நடிவடிக்கைகளும் கண்டறியப்பட்டால் இத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆணை இரத்து செய்திட தகுதியுடையதாகும். 12. தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் (2024-26) 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கும். ஆதாரம்: https://www.tn.gov.in/tncmfp/notification_tamil.pdf