ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சக நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஆக்கத் துறை தேசிய நீர் விருதுகளை ஆண்டு தோறும் வழங்கிவருகின்றது . 2018 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோக்கம் நீர் வளத் துறையில் மக்களின் பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான அம்சங்களில் பணியாற்ற மக்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் தேசிய நீர் விருதுகள், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. விருது வகைகள் நீர் வள மேலாண்மையில் சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த பள்ளி/கல்லூரி, சிறந்த நிறுவனம், சிறந்த ஊராட்சி அமைப்பு, சிறந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த தொழிற்சாலை மற்றும் சிறந்த சமுதாய அமைப்புகள் ஆகிய ஒன்பது வகைகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய நீர் விருதுகள் - விண்ணப்பிக்கும் முறை தேசிய நீர் விருதுகள் பரிந்துரை மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் நீர்வள மேம்பாடு தொடர்பாக குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களின்படி www.awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆண்டு தோறும் டிசம்பர் மாத இறுதி ஆகும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்