முக்கியத்துவங்கள்

குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள முக்கியத்துவங்கள் பின்வருமாறு

குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள், குறிப்பாக முதல் மூன்று வருடங்கள், மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளன. இந்த காலங்களின் போது, குழந்தைகள் மிக விரைவாக கற்கின்றனர். அன்பு, அரவணைப்பு, கவனிப்பு, ஊக்கப்படுத்துதல், மனரீதியாக உந்தப்படுதல் கூடவே சத்து நிறைந்த உணவு மற்றும் பராமரிப்பு போன்றவற்றைப் குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் பெறும்பொழுது, சீராக வளர்வதோடு, விரைவாக கற்கவும் செய்கின்றனர்.

சட்டப்பூர்வமாக பிறப்பை பதிவுசெய்தல், உடல் நல பராமரிப்பு, சத்துணவு, கல்வி, பிரச்சனைகளாகிய தீமை, அத்துமீறல் மற்றும் தீண்டாமை போன்றவைகளிலிருந்து பாதுகாப்பு, ஆகியவை அனைத்துக் குழந்தைகளுக்கும் உரிய உரிமைகளாகும். இந்த உரிமைகள் அனைத்தும் மதிக்கப்படுவதும், பாதுகாக்கப்படுவதும், நிறைவேற்றப்படுவதும், பெற்றோர் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும்.

முக்கிய குறிப்புகள்

குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை குறித்து ஒவ்வொரு குடும்பமும், சமூகமும் அறிந்து கொள்ள வேண்டியவைகள் பின் வருமாறு

1. குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள் குறிப்பாக முதல் மூன்று வருடங்கள் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் பராமரிப்பு, அவன்/அவளுடைய வாழ்க்கை முழுவதிற்கும் மிகவும் முக்கியமானதாகும்

2. பிறந்தது முதல், குழந்தைகள் சீராக கற்கவும் துவங்குகிறார்கள். சத்தான உணவு மற்றும் நேர்த்தியான பராமரிப்போடு அன்பு, அரவணைப்பு, மனரீதியான ஊக்கம் போன்றவற்றை குழந்தைகள் பெறும்பொழுது, அவர்கள் வளர்வதோடு விரைவாக கற்கவும் செய்கின்றனர்.

3. குழந்தைகள் விளையாடவும் புதிய காரியங்களைக் கற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்துதல், அவர்கள் சமூகம், உடல், உணர்வு மற்றும் அறிவுப்பூர்வமாக கற்கவும், வளரவும் உதவுகிறது.

4. குழந்தைகள் தங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களைப் பார்த்து தாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என கற்றுக் கொள்கின்றனர்.

5. குழந்தைகளுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியன சீராக இல்லாது இருப்பதைக் காண்பிக்கும் எச்சரிக்கை அடையாளங்களை பெற்றோரும், குழந்தைக் கவனிப்பாளர்களும் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தை பிறப்பை திட்டமிடுதல் குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள் குறிப்பாக முதல் மூன்று வருடங்கள் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் பராமரிப்பு, அவன்/அவளுடைய வாழ்க்கை முழுவதிற்கும் மிகவும் முக்கியமானதாகும்

அன்பும் பராமரிப்பும் முதல் வருடத்தில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கிறது. குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்ளல், கட்டித் தழுவுதல், பேசுதல் போன்றவைகள் குழந்தைகளுடைய உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியை தூண்டுகிறது. தாயோடு நெருங்கி இருத்தல், தேவையான போது பாலுட்டுதல் முதலியன குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. குழந்தை தனது ஊட்டச் சத்துக்காகவும், சுகத்திற்காகவும் தாயினிடத்தில் பால் அருந்துவது அவசியம்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உடல், மனம், உணர்வு, சமூக ரீதியான தேவைகள் ஒன்றே. இருபாலரும் ஒரே அளவான கற்றுக்கொள்ளும் திறமையைப் பெற்றுள்ளனர். மேலும் அவர்களுக்கு அன்பு, கவனிப்பு, அங்கீகரிப்பு முதலியன சம அளவில் தேவைப்படுகிறது.

அழுவதன் மூலம் குழந்தை தன்னுடைய தேவைகளைத் தெரியப்படுத்துகிறது. குழந்தையின் அழுகைக்கு, அவர்களை தூக்கி எடுத்து மென்மையாக பேசி பதிலளிப்பது அவர்களுடைய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் நிலைப்படுத்த உதவுகிறது.

இரத்தசோகையுடனும், சத்துக்குறைவுடனும், அடிக்கடி சுகவீனமடைகிற குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகளைவிட எளிதில் பயப்படுகிற, மனமடிவடைகிறவர்களாக மாறுகின்றனர். மேலும் விளையாடுதல், மற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடுதல், புதிய காரியங்களை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் உற்சாகம் அற்று காணப்படுவர். இம்மாதிரியான குழந்தைகள் நன்கு சாப்பிடுவதற்கு மிகுந்த கவனிப்பும் ஊக்கப்படுத்தப்படுதலும் தேவை.

குழந்தைகளுடைய உணர்வுகள் உண்மையானது மற்றும் வலிமையானது. அவர்களால் ஏதாவது ஒன்றை செய்ய முடியாமற்போனாலோ அல்லது தங்களுக்குத் தேவையான ஒன்றை பெறமுடியாமற்போனாலோ ஏமாற்றமடைந்தவர்களாக மாறுகின்றனர். இருட்டைப்பார்த்தும் அந்நியர்களைக் கண்டும் குழந்தைகள் பயப்படுகின்றனர். தங்கள் உணர்வுகள் நகைப்புக்கும், தண்டனைக்கும், நிராகரிப்புக்கும் உரியதாகும்போது, குழந்தைகள் கூச்சப்படுகிறவர்களாக, தங்கள் உணர்வுகளை சாதாரணமாக வெளிப்படுத்த இயலாதவர்களாக வளர்கின்றனர். குழந்தைகள் தங்கள் வலிமை மிக்க உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, பொறுமையோடும் பரிவோடும் நாம் கேட்போமானால், குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக, பாதுகாப்பாக, சம்நிலை உடையவர்களாக வளர ஏதுவாகிறது.

உடலளவில் தண்டிக்கப்படுதல் மற்றும் கொடுமையாக நடத்தப்படுதல் போன்றவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரும் தீமையாகும். குழந்தைகளை கோபத்தோடு தண்டிக்கும்பொழுது, அவர்கள் கொடுமையானவர்களாக மாறுகிறதற்கு ஏதுவாகிறது. எதைச் செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கான உறுதியான விதிகளைக் குறித்தும் குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குதல், அவர்களது நன்நடத்தைகளை பாராட்டுதல் போன்றவை குழந்தைகளை குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் மிகவும் பிரயோஜனமுள்ளவர்களாக மாற்றுகிற சிறந்த வழிமுறைகளாகும்.

குழந்தைகளை கவனிப்பதற்கு பெற்றோர் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஈடுபடவேண்டும். குறிப்பாக தந்தையினுடைய பங்கு முக்கியமானதாகும். குழந்தைகளுக்குத் தேவையான அன்பு, அரவணைப்பு மற்றும் மனரீதியான ஊக்கம் முதலியன அவர்களுக்கு கிடைப்பதற்கு குழந்தையின் தந்தை உதவியாக இருக்கிறார். அதோடு, தரமான கல்வி, நல்ல சத்துணவு மற்றும் பராமரிப்பு போன்றவை குழந்தைகள் பெறுவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். குழந்தையின் வீட்டுச்சூழல் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருப்பதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியம். தாயானவளின் கர்ப்பக் காலத்தின் போதோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போதோ, தகப்பன் வீட்டு வேலைகளையும் செய்யலாம்.

தகவல் குறிப்பு 2

பிறந்தது முதல், குழந்தைகள் சீராக கற்கவும் துவங்குகிறார்கள். சத்தான உணவு மற்றும் நேர்த்தியான பராமரிப்போடு அன்பு, அரவணைப்பு, மனரீதியான ஊக்கம் போன்றவற்றை குழந்தைகள் பெறும்பொழுது, அவர்கள் வளர்வதோடு விரைவாக கற்கவும் செய்கின்றனர்.

தாயின் அரவணைப்பு, தாய்ப்பால் ஊட்டல் போன்றவை குழந்தைகள் பிறந்த ஒரு மணிநேரத்தில் கொடுப்பதால், அது அவர்களது வளர்ச்சிக்கு உதவியாக உள்ளதோடு, தாயுடன் உள்ள உறவை உறுதிப்படுத்துகிறது. தொடுதல், கேட்டல், முகர்தல், பார்வை மற்றும் ருசித்தல் ஆகியன குழந்தை தனது சூழலை அறிந்து கொள்ள உதவியாக உள்ளது

குழந்தைகளிடம் பேசும்பொழுதும், அவர்களை தொடும்பொழுது, தாலாட்டும் பொழுதும், பழக்கமான முகங்களைப் பார்க்கும் பொழுதும், பழக்கப்பட்ட குரலை கேட்கும் பொழுதும், பலதரப்பட்ட பொருள்கள் கொண்டு விளையாடும்பொழுதும் குழந்தைகளின் மனம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. குழந்தைகள் அன்புகூறப்படும் போது, பாதுகாக்கப்படும் போது மற்றும் அடிக்கடி மற்ற குடும்ப உறுப்பினர்களோடு விளையாடி கலந்துரையாடுகிறபோதும் விரைவாக கற்கின்றனர். பாதுகாப்பை உணருகிற குழந்தைகள், நன்கு கல்வி கற்பதோடு, வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எளிதில் மேற்கொள்ளவும் செய்கின்றனர்.

முதல் ஆறுமாதத்தில், குழந்தை அழுகிறபொழுதெல்லாம் தாய்ப்பாலூட்டல் மற்றும் பாதுகாத்தல், ஆறுமாதம் முடிந்தவுடன் இதரசத்துநிறைந்த உணவு அளித்தல், இருவருடங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதல் போன்றவை குழந்தைகளுக்கு நல்ல சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன. அத்துடன், தங்களை கவனிப்பவர்களிடம் மிகுந்த பாசத்தையும் தொடர்பையும் ஏற்படுத்துகிறது

மற்றவர்களோடு கலந்துரையாடல் மூலமே குழந்தைகள் நன்கு வளரவும், கற்கவும் செய்கின்றனர். எந்த அளவுக்கு பெற்றோர்களும், குழந்தைக் கவனிப்பாளர்களும் குழந்தைகளிடம் பேசி, பதிலுரைக்கிறார்களோ அதே அளவுக்கு குழந்தைகள் விரைவாக கற்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைக் கவனிப்பாளர்கள், குழந்தைகளிடம் பேசி, பாடி, வாசித்து மகிழ வேண்டும். குழந்தைகளால் வார்த்தைகளை புரிந்து கொள்ள இயலாவிட்டால் கூட, இந்த இளம்பருவ கலந்துரையாடல் அவர்களது மொழி மற்றும் கற்கும் திறமையை வளர்க்கிறது. குழந்தை கவனிப்பாளர்கள் குழந்தைகளை புதிய காரியங்களைப் பார்க்கச் செய்தல், கேட்க வைத்தல், விளையாடச் செய்தல் முதலியன மூலம் அவர்கள் வளரவும், கற்கவும் உதவிட முடியும்.

நெடுநேரமாக குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் தனிமையாய் இருக்கவிடக்கூடாது. இது அவர்களது உடல், மனரீதியான வளர்ச்சியைப் பாதிக்கும்

ஆண்பிள்ளைகளைப் போன்று பெண்பிள்ளைகளுக்கும் சரிசமமான உணவு, கவனிப்பு, பராமரிப்பு, அரவணைப்பு போன்றவை அவசியம். புதிய காரியங்களை குழந்தைகள் செய்யும்போதும், பேசும்போதும் அவர்களை உற்சாகப்படுத்தவும், பாராட்டவும் வேண்டும்.

உடல், மனரீதியாக குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறாதபோது, பெற்றோர்கள் திறமையான சுகாதாரப்பணியாளரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

முதலில், குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியிலேயே கற்பிப்பது, அவர்களது சிந்திக்கும் ஆற்றலையும், வெளிப்படுத்துகிற திறமையையும் வளர்த்திட உதவுகிறது. பாடல்கள், குடும்பக்கதைகள், விளையாட்டுகள், ரைம்ஸ் போன்றவைகள் மூலம் குழந்தைகள் விரைவாக மொழியைக் கற்கின்றனர்.

குறிப்பிட்ட காலங்களுக்குள், அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு, நல்ல சத்துணவு கொடுக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழும் விகிதம் அதிகம். மேலும், அவர்கள் கலந்துரையாடுவதிலும், விளையாடுதல் மற்றும் கற்றல் போன்றவற்றிலும் சிறந்து விளங்குவர். இவைகளால், குழந்தைகளுடைய மருத்துவச் செலவு, சுகவீனமடைவதால் பள்ளிக்குச் செல்லாமல் இருத்தல் போன்றவற்றை குறைத்திட முடியும். மேலும், சுகவீனப்பட்ட குழந்தையைப் பராமரிக்கும் பொழுது, பெற்றோருக்கு ஏற்படுகிற வருமான இழப்பும் குறைகிறது.

தகவல் குறிப்பு 3

குழந்தைகள் விளையாடவும் புதிய காரியங்களைக் கற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்துதல், அவர்கள் சமூகம், உடல், உணர்வு மற்றும் அறிவுப்பூர்வமாக கற்கவும், வளரவும் உதவுகிறது.

விளையாட்டு மகிழ்ச்சியளிப்பதால், குழந்தைகள் விளையாடுகின்றனர். மேலும், விளையாட்டு அவர்களின் கற்றலுக்கும வளர்ச்சிக்கும் திறவுகோலாய் உள்ளது. விளையாட்டு, குழந்தைகளின் அறிவையும் அனுபவத்தையும் கட்டி எழுப்புவதோடு, அவர்களது புத்திக்கூர்மையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

குழந்தைகள் பல்வேறு காரியங்களை முயற்சித்தும், ஒப்பிட்டும், கேள்விகள் கேட்டும், பல சவால்களை சந்தித்தும் கற்கின்றனர். விளையாட்டு, குழந்தைகளின் மொழி, சிந்திக்கிற, நிர்வகிக்கிற, திட்டமிடுகிற, தீர்மானிக்கிற திறமைகளையும் வளர்க்கிறது. குழந்தை ஊனமாயிருந்தால், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது விளையாட்டும், மனரீதியான ஊக்கப்படுத்தலுமே.

விளையாடுவதற்கும் மற்ற குடும்ப அங்கத்தினரோடு கலந்துரையாடுவதற்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சம அளவிலான வாய்ப்புகள் தேவை. தந்தையோடு விளையாடுவதும், கலந்துரையாடுவதும், தந்தைக்கும் குழதைகளுக்குமிடையே உள்ள பிணைப்பை பலப்படுத்த உதவுகிறது.

எளிதான விதிகளோடு கூடிய, புதிய வேலைகளை கொடுப்பதின் மூலமும், குழந்தைகளின் விளையாட்டைக் கட்டுபடுத்தாமல், அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கி, புதிய முறைகளை பரிந்துரைப்பதின் மூலமும், குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் குழந்தை கவனிப்பாளர்கள் குழந்தைகள் கற்பதற்கு உதவிடலாம். குழந்தைகளை உற்று நோக்குவதோடு அவர்களது யோசனைகளை பின்தொடர வேண்டும்.

இளம் குழந்தைகள் மற்றவர்களது உதவியில்லாமல் பலவந்தமாக சில காரியங்களை செய்ய முயற்சிக்கும் போது, குழந்தை கவனிப்பாளர்கள் சற்று பொறுமையோடு இருத்தல் வேண்டும். வெற்றி பெரும் வரை முயற்சிக்கிற தன்மையிலிருந்தே குழந்தைகள் கற்கின்றனர். புதிய காரியங்களைச் செய்வதற்கு குழந்தைகள் போராடும் போது, ஆபத்தில்லாமல் இருக்கும் எந்த ஒரு முயற்சியும் அவர்களது வளர்ச்சிக்கு உதவும் ஒன்றாகும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் அந்தந்த பருவ வளர்ச்சிக்கு ஏற்ற, எளிமையான பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்கள் தேவை. கடைகளிலிருந்து வாங்குகிற பொம்மைகளைப் போன்று நீர், மணல், அட்டைப் பெட்டி, மரச்சாமான்கள், பானை, மூடி போன்றவைகளும் விளையாடுவதற்கு ஏற்ற நல்ல பொருட்கள் ஆகும். புதிய திறமைகளை குழந்தைகள் அடிக்கடி மாற்றவும், வளர்க்கவும் செய்கின்றனர். குழந்தைக் கவனிப்பாளர்கள் இதை கவனமாக உற்றுநோக்கி, அவர்களை பின்தொடர்வதன் மூலம், அதில் அவர்கள் வேகமாக வளர்ச்சி பெற உதவிடமுடியும்

தகவல் குறிப்பு 4

குழந்தைகள் தங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களைப் பார்த்து, தாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என கற்றுக் கொள்கின்றனர்.

பெரியவர்கள் மற்றும் வயதில் மூத்த குழந்தைகளின் முன் உதாரணங்கள், குழந்தைகளின் நடத்தை, தனிப்பட்ட குணம் போன்றவற்றை உருவாக்குவதற்கு மிகவும் வலிமையான சக்திகள் ஆகும். மற்றவர்கள் குழந்தைகளுக்கு என்னச் செய்ய சொல்லுகிறார்களோ அதை குழந்தைகள் செய்யாமல், மற்றவர்கள் செய்வதைப் பார்த்தே குழந்தைகள் கற்கின்றனர். பெரியவர்கள் சத்தம் போட்டால் அல்லது கொடுமையாக நடந்து கொண்டால், குழந்தைகளும் அதே போன்ற நடத்தைகளை விரைவில் கற்றுக் கொள்வர். பெரியவர்கள் மற்றவர்களை அன்போடும், மரியாதையோடும், பொறுமையோடும் நடத்தினால், குழந்தைகளும் பெரியவர்களது முன்மாதிரியைப் பின்பற்றுவர்.

குழந்தைகள் பாவனை செய்வதை விரும்புகின்றனர். இது குழந்தைகளின் கற்பனை சக்தி வளர்ச்சி அடைய உதவுகிற படியால், அவர்கள் பாவனை செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். இது மற்றவர்கள் நடந்து கொள்கிற முறைகளை குழந்தைகள் புரிந்து கொள்வதற்கும் அதன்படி நடப்பதற்கும் உதவியாக உள்ளது.

தகவல் குறிப்பு 5

குழந்தைகளுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியன சீராக இல்லாது இருப்பதைக் காண்பிக்கும் எச்சரிக்கை அடையாளங்களை பெற்றோரும், குழந்தைக் கவனிப்பாளர்களும் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தைகள் சீராக வளருகிறார்கள் என்பதைக் காண்பிக்கும் குறியீடுகளை பெற்றோர்களும், குழந்தைக் கவனிப்பாளர்களும் அறிந்து இருப்பது அவசியம். மேலும் உடல், மன ரீதியாக ஊனமடைந்துள்ள குழந்தைகளுக்கு அன்பான, அரவணைப்பான சூழலை எப்படி, எப்பொழுது ஏற்படுத்திக் கொடுத்து, உதவ வேண்டும் என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

அனைத்துக் குழந்தைகளும் வளரும் விதம் ஒன்றாக இருப்பினும், அதன் வேகம் ஒவ்வொரு குழந்தைக்குமிடையே வித்தியாசப்படுகிறது.

தொடுதல், கேட்டல், பார்த்தல் போன்ற உணர்வுகளுக்கு குழந்தைகள் எவ்விதம் மறுஉத்தரவு அளிக்கின்றனர் என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிப்பதன் மூலம் குழந்தைகள் வளருவதிலுள்ள பிரச்சினைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஒரு குழந்தையின் வளர்ச்சி மெதுவாக இருந்தால், பெற்றோர்களும், குழந்தைக் கவனிப்பாளர்களும் குழந்தையோடு பேசி விளையாடி, அதிக நேரத்தை செலவிடுவதோடு, அவர்களது உடலை மசாஜ் செய்துவிடவும் வேண்டும்.

ஊனமடைந்த குழந்தைகள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே நடவடிக்கை எடுத்தல் முக்கியமானதாகும். குழந்தைகளின் திறமைகள் வளர்ச்சி பெறுவதற்கு, பெற்றோர்களும், குழதை கவனிப்பாளர்களும் முடிந்த அளவுக்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு கூடுதலான அன்பும் பாதுகாப்பும் தேவை. மற்ற குழந்தைகளைப் போல, ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பையும், பிறந்த உடனேயோ அல்லது சிறிது நாட்களுக்குள்ளாகவோ பதிவு செய்தல் அவசியம். மேலும், தாய்ப்பால் ஊட்டுதல், தடுப்பூசி போடுதல், சத்துணவு அளித்தல், தவறாக நடத்தப்படுத்துவதிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றை கண்டிப்பாக செய்தல் வேண்டும். ஊனத்தோடுள்ள குழந்தைகளையும் விளையாடவும் மற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடவும் உற்சாகப்படுத்த வேண்டும்.

மகிழ்சியற்று, உணர்வுப்பூர்வமாக கஷ்டப்படுகிற குழந்தை அசாதாரணமாக நடந்து கொள்ள வாய்ப்புண்டு. உதாரணமாக, திடீரென நண்பர்களுடன் உள்ள உறவை முறித்துக் கொள்ளுதல், சோகம், சோம்பேறித்தன்மை, உதவும் தன்மையற்றுப் போகுதல், கேலி, அடிக்கடி அழுதல், மற்ற பிள்ளைகளுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல், சேர்ந்து விளையாடுவதற்கு பதில் தனிமையாய் இருத்தல், வழக்கமான செயல்பாடுகளிலும் வீட்டுப்பாடம் செய்வதிலும் உள்ள உற்சாகத்தை இழத்தல், பசி மற்றும் தூக்கத்தை இழத்தல் போன்றவற்றைக் கூறலாம்.

பெற்றோர்கள் குழதைகளுடன் பேசுவதையும், அவர்கள் கூறுவதை கவனிப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். தொடர்ந்து குழந்தைகளிடம் பிரச்சினை காணப்பட்டால், ஆசிரியரிடமோ அல்லது சுகாதாரப் பணியாளரிடமோ உதவி கேட்கலாம்.

குழந்தைகளுக்கு மனரீதியான, உணர்வுப்பூர்வமான கஷ்டங்களோ அல்லது அவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருந்தாலோ, அவர்களோடு கலந்துரையாடி ஆலோசனை வழங்கி, மேலும் பிரச்சினைகள் பெரிதாகாமல் தடுக்க வேண்டும்.

பின்வரும் வழிகாட்டுதல்கள் குழந்தைகள் எப்படி வளர்ச்சியடைகின்றனர் என்கிற யோசனைகளை பெற்றோருக்கு வழங்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பல்வேறு வகையான வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சத்துப்பற்றாக்குறை, ஆரோக்கியமின்மை, மனரீதியான ஊக்கக் குறைவு மற்றும் பல ஆபத்தான பிரச்சினைகள் குழந்தைகளது குறைவான முன்னேற்றத்திற்கு காரணமாகலாம். பெற்றோர்கள் பயிற்சி பெற்ற உடல்நலப்பணியாளரிடமோ அல்லது ஆசிரியரிடமோ இது குறித்து ஆலோசிக்கலாம்.
குழந்தை வளர்ச்சி ஒருமாத வயதில்

ஒரு மாத காலத்திற்குள், குழந்தைகள் கண்டிப்பாக பின்வரும் காரியங்களை செய்ய இயலுபவர்களாக இருத்தல் வேண்டும்.

• கன்னத்தையோ அல்லது வாயையோ தட்டிக் கொடுக்கிற கரங்களை நோக்கி தலையைத் திருப்புதல்.

•இரண்டு கரங்களையும் வாய்க்கு நேராக கொண்டு வருதல்

•பழக்கப்பட்ட குரள் வரும் திசை நோக்கி திரும்புதல்

•தாய்ப்பால் குடித்தல் மற்றும் தாயின் மார்பகங்களை தங்கள் கைகளால் தொடுதல்.

பெற்றோருக்கும் குழந்தை கவனிப்பாளருக்குமான அறிவுரைகள்:

•குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், தாய்ப்பாலூட்டி நெருக்கமாக அணைத்துக் கொள்ள வேண்டும்.

•குழநதையை நேராகத் தூக்கும் பொழுது அதன் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்

•அடிக்கடி குழந்தையைக் கட்டித் தழுவி, உடலைப் பிடித்து (மசாஜ்) விட வேண்டும்.

•உடல், மனரீதியாக நீங்கள் சோர்வுற்று இருந்தால் கூட, குழந்தையை எப்பொழுதும் மென்மையாக கையாள வேண்டும்.

•அடிக்கடி தாய்ப்பால் ஊட்ட வேண்டும். குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை.

•முடிகிறபோதெல்லாம் குழந்தையோடு பேசி, பாடி கொஞ்ச வேண்டும்.

•குழந்தை பிறந்து ஆறுவாரங்களுக்குப் பின்பு உடல் நலப்பணியாளரைச் சந்திக்கவேண்டும்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

•குறைவாக தாய்ப்பால் குடித்தல் அல்லது தாய்ப்பால் குடிக்க மறுத்தல்.

•மிகக் குறைவான அளவில் கை, கால் அசைத்தல்

•வெளிச்சத்திற்கோ அல்லது சத்தத்திற்கோ குறைவான மற்றும் எந்தவிதமான பதிலும் செய்யாதிருத்தல்.

• தகுந்த காரணமின்றி நெடுநேரம் அழுது கொண்டிருத்தல்.

•வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.
ஆறுமாத வயதில்
ஆறுமாத காலத்திற்குள், குழந்தைகள் பின்வரும் காரியங்களைச் செய்ய இயலுபவர்களாக இருத்தல் வேண்டும்:

• குழந்தைகள் குப்புறப் படுத்துக் கொண்டு, தலை மற்றும் மார்பை தூக்குதல்

• தொங்கும் சாமான்களை, பொருட்களை கையில் பிடித்துக் கொண்டு குலுக்குதல்.

•இரு புறமும் உருளுதல்.

•உதவியோடு உட்காருதல்.

•ஒலிகளையும், முக பாவனைகளையும் பிரதிபலிக்கத் துவங்குதல்.

•குழந்தையின் பெயருக்கும், பழக்கமான முகங்களுக்கும் பதில் செய்தல்.

பெற்றோருக்கும் குழந்தை கவனிப்பாளர்களுக்கும் உரிய அறிவுரைகள்:

• குழந்தைகளை சுத்தமான, சமமான, பாதுகாப்பான தளங்களில் படுக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வதினால், குழந்தைகளால் எளிதில் நகரவும், பொருட்களை எடுக்கவும் முடிகிறது.

• அருகில் நடக்கின்ற நிகழ்வுகளை காண்பதற்கு வசதியாக குழந்தைகளை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

• இரவு, பகல் என குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் ஊட்டுதல். மேலும், மற்ற உணவுகளையும் சேர்த்து கொடுக்க ஆரம்பித்தல் (6 முதல் 8 மாதக் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவும், 8 முதல் 12 மாதக் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 வேளை உணவும் கொடுத்தல்)

• முடிகிறபோதெல்லாம், குழதைகளிடம் பேசி, பாடி மகிழ வேண்டும்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

• கை, கால்கள் அசைப்பதில் விரைப்புத் தன்மை மற்றும் கடினத்தன்மை.

• தொடர்ந்து தலை அசைத்தல் (காது நோய்த் தொற்று இருக்கும் வாய்ப்பை குறிக்கிறது). மேலும், சிகிச்சை அளிக்காவிட்டால் காது செவிடாகிவிட வாய்ப்புண்டு.

• பழக்கப்பட்ட ஒலிகளுக்கும், முகங்களுக்கு, தாய்ப்பால் குடிப்பதற்கும் குறைவான அல்லது பதில் செய்யாமலே இருத்தல்.
12 மாத வயதில்
12 மாத காலத்திற்குள் குழதைகள் பின்வரும் காரியங்களைச் செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.:

•உதவியில்லாமல் உட்காருதல்.

• கை மற்றும் முழங்காலினால் தவழ்ந்து, எழுந்து நிற்க முயற்சித்தல்.

• சுவரைப் பிடித்துக் கொண்டு நடத்தல்.

• வார்த்தைகளையும் ஒலிகளையும் பிரதிபலித்தல் மற்றும் எளிய வேண்டுகோளுக்கும் பதில் செய்தல் வேண்டும்.

• கைக் கொட்டி விளையாடி மகிழ்தல்.

• மற்றவரது கவனத்தைப் பெற திரும்பத்திருப ஒலி, சைகைகள் செய்தல்.

• பெருவிரலோடு மற்றும் ஒரு விரலைச் சேர்த்து பொருட்களை எடுத்தல்.

• கரண்டி, கோப்பை (கப்) போன்ற பொருட்களை கையில் பிடித்துக் கொள்ளத் துவங்குதல், தானாகவே சாப்பிட முயற்சித்தல்.

பெற்றோர், குழந்தைக் காப்பாளர்களுக்குரிய அறிவுரைகள்:

• அடிக்கடி குழந்தைகளுடன் பேசுதல், விளையாடுதல், பொருட்களைக காண்பித்து, அவைகளின் பெயரைச் சொல்லுதல் முதலியவற்றைச் செய்தல் வேண்டும்.

• அனைத்து குடும்ப உறுப்பினர்களோடும் கலந்துரையாடுவதற்கு, சாப்பாட்டு வேளையை குழந்தைகள் பயன்படுத்த உற்சாகப்படுத்த வேண்டும்.

• குழந்தைகளின் வளர்ச்சி மெதுவாகவோ, உடல்ரீதியாக ஊனமாகவோ காணப்பட்டால், அவர்களின் திறமைகள் மீது கவனம் செலுத்துவதோடு, அதிக மனரீதியான ஊக்கத்தையும், கலந்துரையாடுதலையும் கொடுக்க வேண்டும்.

• ஒரே இடத்தில் குழந்தைகளை பல மணிநேரமாக விடக்கூடாது.

• விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக, குழந்தைகள் வாழும் சூழலை முடிந்த அளவுக்கு பாதுகாப்புடையதாக்க வேண்டும்.

• தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதோடு, குழந்தை போதுமான அளவு மற்ற உணவு வகைகளையும் உண்கிறதா என உறுதிசெய்தல் வேண்டும்.

• கரண்டி (ஸ்பூன்) மற்றும் கோப்பை (கப்) முதலியவற்றால் தாங்களே உணவு அருந்துவதற்கு உதவ வேண்டும்.

• குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதா என்றும், அனைத்துவிதமான நுண்ஊட்டச்சத்துக்களும் தேவையான அளவுக்குப் பெறுகிறார்களா எனவும் உறுதி செய்தல் வேண்டும்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

• மற்றவர்களுடைய கூப்பிடுதலுக்கு பதில் செய்யாமல் இருத்தல்

• நகருகின்ற பொருட்களை பார்க்காமல் இருத்தல்

• பசியற்றோ அல்லது உணவு உண்ண மறுத்தல்.
இரண்டு வருட வயதில்
இரண்டு வருட காலத்திற்குள், குழந்தைகL பின்வரும் காரியங்களை செய்ய இயலுபவர்களாக இருத்தல் வேண்டும்:

• நடத்தல். ஏறுதல் மற்றும் ஓடுதல்

• பொருட்கள் மற்றும் படங்களின் பெயரைச் சொல்லும் பொழுது அதைச் சுட்டிக்காண்பித்தல் (உதா. கண்கள், மூக்கு)

• தொடர்ந்து பலசொற்களைச் சேர்த்துக் கூறுதல் (சுமார் 15 மாதத்திலிருந்து)

• எளிதான காரியங்களை பின்பற்றுதல்.

• பென்சிலோ, க்ரேயானோ கொடுத்தால் கிறுக்குதல்.

• எளிதான பாடல்கள், கதைகள் கேட்டு மகிழுதல்.

• மற்றவர்களைப் போன்று பாவனை செய்தல்.

• தாங்களாகவே சாப்பிடத் துவங்குதல்.

பெற்றோர், குழந்தைக் கவனிப்பாளருக்குரிய அறிவுரைகள்:

• பிள்ளைகளோடு சேர்ந்து வாசித்து, பாடி விளையாட வேண்டும்.

• ஆபத்தான பொருள்களிடமிருந்து விலகிட கற்பித்தல்

• குழந்தைத்தனத்தோடு பேசாமல், சாதாரணமாக குழந்தைகளோடு பேசுதல்.

• தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதோடு, குழந்தைகள் போதுமான அளவுக்கு இதர உணவு வகைகளையும சாப்பிட்டார்களா என உறுதி செய்தல் வேண்டும்.

• தகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி, எளிய கட்டளைகளை நிறைவேற்றும்படி செய்தல்.

• குழந்தைகளின் சாதனைகளை புகழ வேண்டும்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

• மற்றவர்களின் செய்கைகளுக்கு மறு உத்தரவு செய்யாதிருத்தல்

• நடக்கும் போது தடுமாறுதல்

• காயங்கள் மற்றும் காரணம் அரியாத மாற்றங்கள் ( குறிப்பாக குழந்தைகள் மற்றவர்களால் கவனிக்கப்பட்டால்)

• பசிக்குறைவு.
மூன்று வருட வயதில்
மூன்று வருட காலத்திற்குள் குழந்தைகள் பின்வரும் காரியங்களைச் செய்ய இயலுபவர்களாக இருக்க வேண்டும்:

• எளிதாக நடத்தல், ஏறுதல், உதைத்தல், ஓடுதல் மற்றும் துள்ளுதல்.

• பொதுவான பொருட்களையும், படங்களையும் காண்பித்து அடையாளம் கண்டு கொள்ளுதல்.

• இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளால் வாக்கியம் அமைத்தல்.

• தங்கள் வயதையும் பெயரையும் சொல்ல அறிந்திருத்தல்.

• வண்ணங்களின் பெயரைச் சொல்லுதல்.

• எண்களைப் புரிந்து கொள்ளுதல்.

• தாங்களாகவே சாப்பிடுதல்.

• அன்பை வெளிப்படுத்தல்.

பெற்றோர், குழந்தைக் கவனிப்பாளர்களுக்குரிய அறிவுரைகள்:

• குழந்தைகளோடு சேர்ந்து புத்தகத்தைப் பார்த்து வாசிக்கவும், படங்களைப் பற்றிப் பேசவும் வேண்டும்.

• குழந்தைகளுக்கு கதை சொல்வதுடன் பாடல்கள், ரைம்ஸ் போன்றவற்றைக் கற்பிக்கவும்.

• சாப்பிடுவதற்காக குழந்தைகளுக்கென தனியாக தட்டை வழங்க வேண்டும்.

• குழந்தைகள் நன்கு சாப்பிடுவதற்கு, தொடர்ந்து ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், போதுமான நேரத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

• உடை உடுத்துவதற்கும், கைகளைக் கழுவுவதற்கும் கழிப்பிடத்தைப் பயன்படுத்தவும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

• விளையாடுகிற உற்சாகத்தை இழத்தல்.

• அடிக்கடி கீழே விழுதல்.

• சிறிய உபகரணங்களை கையாள்வதில் பிரச்சனை

• எளிய தகவல்களை புரிந்து கொள்வதில் பிரச்சனை

• பல வார்த்தைகளை உபயோகித்து பேசுவதற்கு இயலாமலிருத்தல்.

• சாப்பாட்டு விஷயத்தில் குறைவான அல்லது உற்சாகமற்று இருத்தல்.
ஐந்து வருட வயதில்
ஐந்து வருட காலத்திற்குள் குழந்தைகள் பின்வரும் காரியங்களைச் செய்ய இயலுபவர்களாக இருத்தல் வேண்டும்:

• பல்வேறு வகையான வார்த்தைகளை உபயோகித்து வாக்கியமாக அமைத்துப் பேசுதல்.

• எதிர்பதங்களை புரிந்து கொள்ளுதல் (உதா. குண்டான x மெலிந்த, உயரம் x குட்டை)

• மற்ற குழந்தைகளுடன் விளையாடுதல்.

• உதவி இல்லாமல் உடை உடுத்துதல்.

• எளிய கேள்விகளுக்கு விடை அளித்தல்.

• 5 முதல் 10 பொருட்களை எண்ணுதல்.

• கைகளைக் கழுவுதல்

பெற்றோர், குழதை கவனிப்பாளர்களுக்கான அறிவுரை:

• குழந்தைகள் கூறுவதை கவனிக்க வேண்டும்.

• அடிக்கடி குழந்தைகளுடன் உரையாட வேண்டும்.

• குழந்தைகள் தெத்திப் பேசினால், அவர்களை மெதுவாய்ப் பேசுவதற்கு அறிவுறுத்த வேண்டும்.

• வாசித்து, கதை சொல்ல வேண்டும்.

• விளையாடுவதற்கும் புதிய காரியங்களைச் செய்வதற்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்

கவனிக்க வேண்டிய அபாய குறிகள்:

விளையாடுகிறபோது குழதைகளுடைய பங்கு என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தைகள் பயப்படுவது, கோபப்படுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போன்றவை உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் மற்றும் கொடுமையாக நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.

கேள்வி பதில்கள்

குழந்தைகளுக்கு பேசும் திறன் எந்த வயதில் நன்றாக வரும்?

ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.

குழந்தைகள் பேசும் திறனுக்கு எந்தெந்த காரணங்களாக தடைகள் ஏற்படும்?

பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற் தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடை படும். நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.

அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.

கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு என்ன தீர்வு?

மருத்துவரின் ஆலோசனைப்படி செவி மற்றும் மூளையில் பிரச்னையா என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தையின் பேசும் திறன் தெளிவாக ஆரம்பிக்கும்.

கேட்கும் திறன் இருந்து பேசும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்?

இக்குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி கொடுக்க வேண்டும். உதாரணமாக நாக்கு மற்றும் மேல்தாடை உச்சரிக்கும் வார்த்தைகளை பயிற்சி கொடுப்பதன் மூலம் பேசும் திறன் மற்றும் நாக்கின் சுழற்சி தெளிவாக மேம்படும்.

பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள்?

புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.